இரகசியப் பேச்சுக்களால் சமூகத்துக்கு என்ன பலன்?

0

பல வருடங்களுக்கு முன்னர், எதிர்த்தரப்பில் இருந்த ஒரு முஸ்லிம் கட்சி திடீரென ஆளும் தரப்பிற்கு ஆதரவளிக்க முடிவு செய்தது. இது, அக்கட்சித் தலைவர் பொதுவெளியில் வெளிப்படுத்திய கொள்கைக்கு முற்றிலும் முரணானதாக முடிவாக அமைந்திருந்தது.

அப்போது, அந்த முஸ்லிம் தலைவரை தொடர்புகொண்ட முக்கிய நபர் ஒருவர் “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” எனக் கேட்டார். “இந்தக் கட்சியில் உள்ள எல்லா எம்.பி.க்களும் அந்தப் பக்கம் போக இரகசிய டீல் பேசி விட்டார்கள்.

அவர்கள் எல்லாரும் சென்றால் கட்சியும் சின்னமும் நானும் மட்டும்தான் இருப்போம். எனவே, வேறு வழியின்றி நானும் ஆதரவளிக்கும் முடிவை எடுத்தேன்” என்றாராம். இப்படியான சம்பவங்கள் முஸ்லிம் அரசியலில் பல தடவை இடம்பெற்றிருக்கின்றது.

எம்.பிக்கள் பின்கதவால் அரசாங்கத்துடன் அல்லது எதிரணியுடன் பேரம் பேசுவதும், பின்னர் கட்சியின் தலைவர், செயலாளரும் அந்தப் பக்கம் தாவுவதும் நமக்குப் பழகிப்போன ஒன்றுதான்.

இது ஆச்சரியமில்லை. ஆனால், பல சந்தர்ப்பங்களில் இவ்வாறாகக் கட்சி தாவும் முடிவுகளை, ஒரு சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கு ‘உண்மையில் தலைவரே ரகசியமாகக் காய் நகர்த்தினார்’ என்று கட்சியின் எம்.பிக்கள் பின்னாளில் கூறுவதுதான் ஆச்சரியமாகும்.

முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்க்கட்சி அரசியலை செய்ய திராணியற்றவர்கள் என்பது ஒரு புறமிருக்க, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டிய சில தேவைகளும் உள்ளன. ஆனால், இவ்வகையான எல்லா முஸ்லிம் எம்.பிக்களின் எல்லாக் காரணங்களும் சமூகம் சார்ந்தவை அல்ல என்பதை மறந்து விடக் கூடாது.

இப்போது தேர்தல் பற்றிய பேச்சுக்கள் பரவலாக உலா வருகின்றன. தங்களை ஜனநாயக விரும்பியாக, தேர்தலுக்கு அச்சப்படாத ஆட்சியாளராக காட்டிக்கொள்வதற்காக இவ்வாறான பிம்பங்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் கட்டமைக்கின்றார்கள். ஆனால், சாதாரண எம்.பிக்கள் தொடக்கம் அதிகாரத்தின் உயர் மட்டம் வரைக்கும், எல்லா தரப்புக்களுக்கும் தேர்தலின் வெற்றி – தோல்வி குறித்த பயம், நிச்சயமின்மை உள்ளுக்குள் இருக்கின்றது என்பதே யதார்த்தமாகும்.

இவ்வாறான நிலையில், புதிய வியூகங்கள், கூட்டணிகள் அமைக்கும் நகர்வுகளும் எம்.பிக்களின் ஆதரவை திரட்டும் முயற்சிகளும் எல்லா தரப்பிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் எம்.பிக்களில் கணிசமானோர் ஏற்கெனவே வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றார்கள். இந்நிலையில், முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் சிலர், இரகசியமாக ஆளும் தரப்புடன் பேசி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. சில முஸ்லிம் எம்.பிக்கள் ஏனைய பெருந்தேசியக் கட்சிகளுடனும் சந்திப்புக்கான முஸ்தீபுகளை மேற்கொள்வதாகக் கூறப்படுகின்றது.

‘ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தக் கூடாது என்றும், கட்சி என்ற அடிப்படையில் தலைமையுடனேயே பேச முன்வர வேண்டும்’ பிரதான முஸ்லிம் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே, இப்படியான தனித்தனியான, பின்கதவு சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற தகவல்களின் உண்மைத்தன்மையை அவர் உட்கிடையாக உறுதிப்படுத்தியிருக்கின்றார் என்றுதான் கருத வேண்டியுள்ளது. இதே நிலை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் ஏனைய முஸ்லிம் எம்.பிக்களிடையேயும் நிலவுகின்றது என்பது மக்கள் அறியாத விடயமல்ல.

முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கடமைப் பொறுப்பு இருக்கின்றது. பல விடயங்கள் முஸ்லிம் சமூகத்தின் பொதுவான பிரச்சினைகளாக இருந்தாலும் கூட பிரதேச ரீதியாகப் பிரத்தியேகமான பிரச்சினைகளும், மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகளும் உள்ளன என்பதை மறுக்கவியலாது.

ஆனால், இங்கிருக்கின்ற கேள்வி வேறு மாதிரியானது! அதாவது, தேர்தல் காலத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம் கட்சிகள், சின்னங்களின் ஊடாகவே தம்மை மக்கள் மன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்றனர்.

கட்சி, கொள்கை, கோட்பாடு என்ற அடையாளத்தை முன்னிறுத்தியே பெரும்பாலும் தேர்தலில் குதிக்கின்றனர்.

தம்மை நம்பி மட்டும் வாக்களிக்குமாறும் கட்சியை நம்ப வேண்டிய அவசியமில்லை என்றும் எந்த முஸ்லிம் வேட்பாளரும் கூறுவதில்லை. கட்சி என்ற அடையாளத்தைத் துறந்து, சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற வரலாறும் மிகக் குறைவாகும். ஆகவே, கட்சி என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளையே மக்கள் பெரிதும் விரும்புவர்.

அதுமட்டுமன்றி கூட்டாக ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது அது பலமானதாகவும் அமையும். அதைவிடுத்து, தனித்தனியாக சந்திப்பதும் பெருந்தேசிய தலைவர்களுடன் பேசுவதும் தவறு என்று கூறுவதற்கில்லை. ஆனால், கடந்த காலங்களில் இவ்வாறான பேச்சுக்கள் குறிப்பிட்ட எம்.பிக்களுக்கு தனிப்பட்ட அனுகூலங்களையே ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெற்றுக் கொடுத்தன எனலாம். அதற்காக கட்சித் தலைவர்கள் செய்வது எல்லாம் சரி என்று சொல்வதற்கில்லை.

அவர்கள் பல நேரங்களில் பொறுப்பற்ற தனமாகச் செயற்படுகின்றனர். தமது இலாப நட்டங்களைப் பார்க்கின்றனர். எம்.பிக்களுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு, இரட்டை-விளையாட்டு (டபள் கேம்) ஆடுகின்றனர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இதனையெல்லாம் தாண்டி கட்சி என்ற ஒற்றுமை மிக முக்கியமானது.

எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ள ஒரு காலகட்டத்தில். ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் கட்சிக்குள்ளேயே, இந்த முரண் நிலை ஏற்படக்கூடாது. இவ்வாறு நாம் வலியுறுத்துகின்ற சந்தர்ப்பத்தில், “அப்படியில்லை” என்று எந்த முஸ்லிம் அரசியல்வாதியாவது மறுப்பாராயின், “தனிப்பட்ட ரகசிய டீல்கள் ஊடாக நாம் சமூகத்திற்கு நிறைய நன்மைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்” என்று கூறுவாராயின், அதனை அவர்கள் வெளிப்படுத்தட்டும்.

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தற்போது மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் கூட்டாக தமது சமூகத்திற்காக எந்தக் கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்பதையும், பின்கதவு பேச்சுக்கள் ஊடாக சமூகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது என்பதையும் பட்டியலிட முடியும்.

முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்களின் கடந்தகால இரகசியப் பேச்சுக்கள், டீல்கள், அதற்குக் கைமாறாக வழங்கப்பட்ட வெகுமதிகள் பற்றியெல்லாம் ஏராளமான கதைகள் உள்ளன. இதனால் எம்.பி, அல்லது தலைவர் நன்மை அடைந்தாரா? சமூகம் நன்மை பெற்றதா? என்பது முஸ்லிம் மக்களுக்குத் தெரியும்.

கூட்டு நகர்வுகளால் அன்றி, இரகசிய சந்திப்புக்களின் ஊடாகவே மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நம்புகின்ற முஸ்லிம் எம்.பிக்கள், தாராளமாக அதனைச் செய்யலாம். ஆனால், அதன் பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டும். இதுவரை காலம் தேர்தலுக்கு முந்திய நாட்களில் இடம்பெற்ற தனிப்பட்ட டீல்களின் ஊடாக தங்களுக்கு வெகுமதி கிடைத்ததா? அல்லது சமூகத்திற்கு அனுகூலத்தைப் பெற்றுக்கொடுத்தார்களா? என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சித் தலைவர்களிலும் தவறிருக்கின்றது. எம்.பிக்களை வழிப்படுத்துவது என்றால், முதலில் தலைவர்கள் சரியான வழியில் பயணிக்க வேண்டும். அதிலும் குறைபாடு உள்ளது.

கட்சியின் கொள்கையை மீறிச் செயற்படுகின்ற எம்.பிக்கு, கட்சியின் முடிவைப் புறக்கணித்து சட்டமூலத்திற்கு. அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கின்ற எம்.பிக்கு எதிராக தலைவர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேபோல், தலைவர்களும், தளபதிகளும் எம்.பிக்களும் தங்களுக்கு விரும்பியதை எல்லாம் செய்து விட்டு, கடைசியில் தேர்தல் மேடையில் ஏறி, ஏமாற்று வார்த்தைகளைக் கூறி வாக்குக் கேட்கின்ற போது, முஸ்லிம் சமூகம் அவர்களுக்கு அழுத்தமான பாடமொன்றைப் புகட்டியிருந்தால், மீண்டும் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights