இலங்கைக்கு பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கிய இந்தியா

0

இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகத்தின் அறிவிப்பின்படி 10,000 மெட்ரிக் தொன் வெங்காயம் ஏற்றுமதியை இலங்கைக்கு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான விலக்கின் ஊடாக இந்தியா அதன் அண்டைய நாடுக்கு முன்னுரிமை கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம், இந்தியா பெரிய வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீட்டித்தது. இது ஒரு சில வெளிநாட்டு சந்தைகளில் பெரிய வெங்காய விலையை அதிகரித்தது.

இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகள் வெங்காய விநியோகத்தில் உள்ள உள்நாட்டு இடைவெளிகளை நிரப்ப இந்தியாவிலிருந்து இறக்குமதியையே நம்பியுள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தப் பின்புலத்திலேயே தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விரைவில் பெரிய வெங்காய விலை உள்நாட்டு சந்தையில் குறைவடையும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights