தேசபந்து தென்னகோனின் நியமனம் சட்டத்திற்கு எதிரானது: நடைமுறை மீறப்பட்டுள்ளது-எரான்

0

அரசியலமைப்பு பேரவை நியமனங்களுக்கு அனுமதி வழங்கும் போது, அரசியலமைப்பு ரீதியான நடைமுறை இருக்கின்ற போதிலும் பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கும் போது, நடைமுறை மீறப்பட்டுள்ளதால்,புதிய பொலிஸ் மா அதிபர் அரசியலமைப்புக்கு அமைவாக நியமிக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கு ஒரு நியமனத்திற்காக பெயர் பரிந்துரைக்கப்படும் போது, பொது இணக்கத்தின் அடிப்படையில் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய அனுமதி வழங்கப்படுவது வழமை.

முதலில் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றால் வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைத்து நிறைவேற்று அதிகாரத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்படும் புரிந்துணர்வின்மையை தவிர்க்கலாம். இணக்கம் இல்லாத சந்தர்ப்பங்களில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படும் போது ஆதரவாக 4 வாக்குகளும்,எதிராக இரண்டு வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் இரண்டு பேர் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இதனடிப்படையில்,தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை. ஆதரவாகவும் எதிராகவும் சரிசமமான வாக்குகள் கிடைக்காததால், சபாநாயகருக்கு தீர்மானிக்கும் வாக்கு இல்லை என்பது அரசியலமைப்புச்சட்டத்தில் 41 ஈ 4 ஷரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனால், அரசியலமைப்புச் சட்ட ஷரத்திற்கு அமைய தற்போதைய பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கவில்லை என்பது மாத்திரமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் எனவும் எரான் விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights