0
திரு யோகேஸ்வரன் எனும் அப்பாவி பொதுமகன் தனது கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் தயா கட்டடத்தில் உள்ள முகாம் படையினர் அவரைக் கைதுசெய்தனர்.
அடுத்தநாள் “சி” வதைமுகாமுக்கு கொண்டு சென்றனர்.
இந்த முகாம் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்தது.
திரு யோகேஸ்வரன் அவர்களை விடுவிக்குமாறு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவை அந்த முகாமுக்கு எடுத்துச் சென்றேன்.அங்கு அவர் தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தார்.
பிளேட்டினால் அவரது உடலில் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இலங்கை இராணுவ அதிகாரிகளான கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெப்டினன்ட் துடுகல்ல, உதயமார ஆகியேரே இந்தச் சித்திரவதையை செய்துகொண்டிருந்தனர்.
அந்த முகாமில் தடுப்பில் இருந்த பெயர் தெரியாத நபர் ஒருவரை கூட பொல்லால் தாக்கி கொலை செய்து அங்குள்ள வீடு ஒன்றில் முன்னால் புதைத்தார்கள்.
அதே காலத்தில் ஒரு முன்னிரவு காலத்தில் கப்டன் லலித் ஹோவகேயும், அப்துல் நஷார் ஹமீத்தும் இளம் தம்பதியினரைக் கைது செய்தனர். அவர்களை முதலில் “சி” சித்திரவதை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் இருவரையும் செம்மணியில் உப்பளப் பகுதிக்குக் கொண்டு சென்றனர்.
அவ்வாறு அவர்களைக் கூட்டிச் செல்லும்போது மண்வெட்டியை எடுத்துவரும்படி என்னிடமும், ஏ.எஸ் பெரேராவிடமும் கப்டன் லலித் ஹேவகே தெரிவித்தார்.
அதன்படி நாம் இருவரும் துப்பாக்கியுடன் மண்வெட்டியையும் கொண்டு சென்றோம். நான் செல்லும்போது கப்டன் ஹேவகே அந்தப் பெண்ணுடன் தனிமையில் நிற்பதைக் கண்டேன்.
அச்சமயம் அந்தப் பெண்ணின் உடலில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை.
பின்னர் அந்தப் பெண்ணின் கணவன் இருக்கும் இடத்துக்குப் பெண்ணை அழைத்துவந்தனர். என்னிடம் இருக்கின்ற மண்வெட்டியை வாங்கிய கப்டன் ஹேவகே இருவரின் தலையிலும் அடித்தார்.
அவருடன் இருந்த அப்துல் நஸார், ஹமீத், சமரசிங்க ஆகியோர் பொல்லுகளால் அவர்களைத் தாக்கினர்.இருவரும் கீழே விழுந்துவிட்டனர். இருவரின் சடலங்களையும் எம்மை புதைக்கும்படி கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் திரு செல்வரத்தினம் என்பவரைக் கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன, லெப்டினன்ட், துடுகல்ல ஆகிய மூவரும் சேர்ந்து கைது செய்து “சி” பிரிவு முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.
அவரை விடுவிக்குமாறு அவரது மனைவி, பிள்ளைகள், என்னிடம் கேட்டனர். அவர்களின் கோரிக்கையின் பேரில் திரு செல்வரத்தினம் அவர்களை விடுவிக்குமாறு கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா ஆகியோரிடம் கோரினேன்.
அவரை விடுவிப்பதாக சொன்ன அவர்கள் அன்று இரவே அவரைக் கொலை செய்து விட்டார்கள்.
மறுநாள் நான் போனபோது அங்கு 10 இற்கு மேற்பட்ட சடலங்கள் கிடந்தன.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள் கைதடி சென்று வியாபாரம் செய்ய பாஸ் பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார்கள்.
இது குறித்து கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனாவிடம் கேட்டேன். அவர்களை முகாமுக்கு வருமாறும், அங்கு வைத்து பாஸ் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தகவலை அந்த இளைஞர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் முகாமுக்கு சென்றனர்.
மறுநாள் அந்த இளைஞர்களின் உறவினர்கள், அந்த இளைஞர்கள் இருவரும் இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர்
அந்த இளைஞருக்கு. கைதடியில் வியாபாரஞ் செய்ய அனுமதிக் கடிதம் வழங்குவதாகத் தெரிவித்த கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெட்டினன்ட் துடுகல்ல ஆகியோர் அந்த இளைஞர்கள் இருவரையும் தலைகீழாகக் கட்டித் தூக்கிவிட்டுத் தாக்கியதைக் கண்டேன்.
மறுநாள் இரு இளைஞர்களும் இறந்துவிட்டனர்.
நான் கடமைக்கு வர முன்பே அந்த பகுதியில் அங்கு 50 பேர் காணாமல் போயிருந்தனர் என்று அறிந்தேன்.
வழமையாக உயர் அதிகாரிகள் பொதுமக்களைக் சித்தரவதை செய்து கொலை செய்துவிட்டு சடலத்தைப் புதைக்கும்படி என்னிடம் தருவார்கள்.
செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன்.
ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார்.
அதில் ஒன்றில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு செம்மணியில் நடைபெற்ற பல கொடூர சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான நீண்ட ஒப்புதல் வாக்குமூலத்தை மாணவி கிரிசாந்தி படுகொலை குற்றாவளியான சோமரத்ன ராஜபக்ச எனும் இராணுவ அதிகாரி நீதிமன்றில் தெரிவித்து இருந்தார்.
மேற்படி வாக்குமூலம் வழங்கப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்து விட்டது .ஆனால் பாதிக்கப்பட்ட எவருக்கும் என்ன நடந்தது என்பதை இன்றுவரை அறியமுடியவில்லை.
நல்லாட்சி ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் மேற்படி வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகி இராணுவ அதிகாரிகளை நியாயம் செய்தார்கள்
நீதிமன்ற வளாகத்தில் வைத்தே முறைப்பாட்டாளர்கள் , சட்டத்தரணிகள் இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்.
மேற்படி வழக்குகளை முன்னின்று நடத்திய கலாநிதி குருபரன் குமரவடிவேல் இராணுவ அழுத்தத்தின் பேரில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இருந்தே பதவி விலகி இருந்தார்
சுதந்திர இலங்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் தமிழ் சமூகம் படுகொலைகள், சித்திரவதைகள் , மனித புதைகுழிகள் என கொடூரங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றது
அதில் செம்மணி சித்தரவதைகளும் படுகொலையும் ஒரு மறக்க முடியாத அத்தியாயம்.
Leave A Reply

Your email address will not be published.