49 ஆண்டுகளின் பின்னர் முடிவிற்கு வந்த Whisky War: பிரச்சினைக்கு தீர்வு கண்ட கனடா – டென்மார்க்

0

நட்பு நாடுகளான கனடாவிற்கும் டென்மாா்க்கிற்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு (Hans Island) பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது.

கனடா, டென்மாா்க் இடையே எல்லைகளை வரையறுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1973-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வெறும் 1.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குட்டித் தீவான ஹான்ஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை.

வெறும் பாறையால் அமைந்த அந்தத் தீவில் கனிம வளங்கள் எதுவும் இல்லை. மேலும், அங்கு யாரும் வசிக்கவும் இல்லை. இருந்தாலும் அந்தத் தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வந்தன.

கடந்த 1984-ஆம் ஆண்டில் டென்மாா்க் அமைச்சர் ஒருவா் தங்கள் நாட்டுக் கொடியையும் மது போத்தல் ஒன்றையும் வைத்து ‘டென்மாா்க் தீவிற்கு நல்வரவு’ என்று எழுதி வைத்துச் சென்றாா். அதற்குப் பதிலடியாக, கனடா நாட்டுக் கொடியையும் கனடா மது போத்தலையும் அந்த நாட்டவா்கள் வைத்தனா். அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு கொடிகளும் மது போத்தல்களும் ஹான்ஸ் தீவில் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கப்பட்டு வந்தன.

இதன் காரணமாக, கனடாவிற்கும் டென்மாா்க்கிற்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்சினை ‘Whisky War’ என்று பரவலாக அழைக்கப்பட்டது.

இந்த சூழலில், ஹான்ஸ் தீவை தங்களிடையே பிரித்துக்கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், 49 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சினை முடிவிற்கு வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.