அவசரநிலை பிரகடனம் : ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பரவக்கூடும் – உலக சுகாதார ஸ்தாபனம்

0

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் புதன்கிழமை (14) அறிவித்து இருந்தது.

குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும். ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த புதுவகையான வைரசானது, கொங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆபிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது,

நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விடயம். இந்த வைரசானது ஆபிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று சமீபத்தில் கூறினார்.

இந்த சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், ஆபிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசானது, கிளாட் 1 என்ற வகையைச் சேர்ந்தது.

இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய மண்டலத்திற்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவீடனில் கிளாட் 1 வைரசின் பரவலானது, நம்முடைய உலகில் ஒன்றோடொன்று நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.

வருகிற நாட்களில் மற்றும் வாரங்களில் ஐரோப்பிய பகுதிகளில் கிளாட் 1 பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights