இன்று யாழ்ப்பாணத்திலும் தமிழ் சமூக ஊடகங்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பொதுவான பதம் “மருத்துவ மாபியா”. இந்தப் பதம் தமிழ் ஊடகங்களில் பொருத்தமான சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்தப்படுகிறதா அல்லது மருத்துவத்துறை சார்ந்த அனைத்து முறைக்கேடுகளுக்கும் எழுந்தமானமாக உபயோகிக்கப்படுத்தப்படுகிறதா மற்றும் இதன் பிண்ணனியில் உள்ளவர்களின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
மாபியா
முதலில் மாபியா என்றால் என்ன என்பதையும் அதன் பின் மருத்துவ மாபியா என்றால் என்ன என்பதையும் பார்ப்போம்.
மாபியா என்பது ஆரம்பத்தில் இத்தாலியில் இயங்கிய ஒரு இரக்கமற்ற குற்ற செயல்கள் மூலமாக பணம் சம்பாதிக்கும் அமைப்பை குறிக்கும். எதிரிகளை அல்லது தமது செயல்பாடுகளை தடுப்பவர்களை உடனடியாக கொலை செய்வதனாலும் அவர்கள் உயர் அதிகாரிகளில் இருந்து கீழ் மட்டம் வரை ஒரு வலையமைப்பாக இயங்குவதால் மாபியா என்ற வார்த்தையை கேட்டாலே பலர் பயந்து நடுங்குவார்கள். பிற்காலத்தில் மாபியா வலையமைப்பு பல நாடுகளில் பரவி அந்த நாடுகளின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் அமைப்புகளுக்கு சவாலாக இருந்து வருகின்றனர்.
மருத்துவ மாபியா
இப்போது மருத்துவ மாபியா என்னும் பதம் மேலை நாடுகளில் உபயோகிக்கப்படும் சந்தர்ப்பங்களை எடுத்து நோக்குவோம். மருத்துவ மாபியா, மாபியா வலையமைப்பை சேராத ஆனால் மாபியாவின் குணங்கள் அதாவது பணத்துக்காக எதையும் செய்யக்கூடிய மக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாத ஒரு வலையமைப்பை குறிக்கும்.
பொதுவாக இந்த வலையமைப்பில் மூன்று தரப்புகள் சம்பந்தப்பட்டு இருக்கும். முதலாவதாக மருத்துவத்துறை சார் சங்கங்கள் அல்லது மருத்துவ சேவையாளர்கள் இரண்டாவதாக மருந்து மற்றும் ஏனைய சுகாதார சேவை வழங்கலுடன் தொடர்புடைய மருந்துகள், அன்றாட பாவனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் முதலியனவற்றை விற்கும் நிறுவனங்கள் மூன்றாவதாக மருந்து மற்றும் சுகாதார சேவை வழங்கலுடன் தொடர்புடைய பொருட்களின் தரத்தையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் நிறுவனங்கள். இந்த முத்தரப்பும் இணைந்து தங்களுடைய சுயநலன்களுக்காகவும் இலாபத்துக்காகவும் நோயாளிகளையும் மக்களையும் சுரண்டுவதையே பொதுவாக “மருத்துவ மாபியா” என்று அழைக்கிறார்கள்.
இலங்கையில் மருத்துவ மாபியா
மனித இமியுனோ குளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்து வழங்கியதாக உரிமை கோரிய வழங்குனர்கள், மருந்துகளது தராதரத்தினைப் பரிசோதித்துச் சான்றளிக்கும் நிறுவகத்தின் உயரதிகாரி, கொள்வனவில் ஈடுபட்ட சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் முன்னைநாள் சுகாதார அமைச்சர், அந்தக் குப்பிகளை வாங்கி நோயாளிகளுக்கு வழங்கிய மருத்துவ வழங்கல் பிரிவின் உயரதிகாரிகள் எனப் பலர் தற்போது போலி மருந்துக் குப்பிகளை உற்பத்தி செய்து வழங்கிய/வாங்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் இலங்கையில் இயங்கிய மிகப்பெரிய மருத்துவ மாபியாவாக இது இருக்கும்.
கொரோனா கால மோசடி
கடந்த காலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது பதவி வகித்த சுகாதார அமைச்சரும் அவருடன் இணைந்து செயல்பட்ட போலி வைத்தியர் ஒருவரும் ஒவ்வொரு நாளும் 4000 ரூபாய் பெறுமதியுடைய 5000 குப்பிகளை தம்மிக்க பாணி என்ற பெயரில் கோவிட் நோய்க்கான மருந்தாக விற்று அப்பாவி பொது மக்களிடம் நாள்தோறும் 20 மில்லியன் ரூபாய்களை ஏமாற்றியது ஒரு மிகப்பெரிய மோசடி என்று கூறலாம், ஆனால் மருத்துவ மாபியா என்று அதை கூறமுடியாது. ஏனென்றால் வாங்குவோர் அந்த பாணியை வாங்கி பருகுமாறு பலவந்தப்படுத்த படவில்லை என்பதுடன் பலரும் தம்மிக்க ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் அல்ல என்ற உண்மையை அறிந்தே அதை பயன்படுத்தி இருந்தனர்.
வடபகுதியில் மருத்துவ மாபியா
அதே வேளை மருத்துவ மாபியாவுக்கு சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். உலகில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் அனைத்திற்கும் ஒரு பொதுப் பெயர் (Generic name) உண்டு. ஒரு பொதுப் பெயர் உள்ள மருந்தினைப் பல்வேறு நிறுவனங்கள் தத்தமது வியாபாரப் பெயரினைச் (Trade name/Brand name) சூட்டிச் சந்தைப்படுத்துவார்கள். மக்களுக்கு நன்கு பரிச்சயமான காய்ச்சல் நிவாரணி மருந்து “பனடோல்” ஆகும். பனடோல் என்பது நிறுவனத்தால் சூட்டப்பட்ட வியாபாரப் பெயர். குறித்த காய்ச்சல் நிவாரணி மருந்திற்குரிய பொதுப் பெயர் பரசிற்றமோல் என்பதாகும். நீங்கள் ஒரு மருந்தகத்திற்குச் சென்று பரசிட்டமோல் எனக் கேட்டால், விலை குறைவான காய்ச்சல் நிவாரணி மாத்திரைகளை நீங்கள் வாங்கமுடியும்.
இதனாலேயே மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது வைத்தியர்கள் மருந்துகளுக்குரிய பொதுப் பெயரில் (Generic name) பரிந்துரைக்க வேண்டும் என்பது உலகளாவிய விதியாகும். இலங்கையில் 2015ம் ஆண்டின் இலங்கை தேசிய ஒளடதங்கள் அதிகாரசபை சட்டமூலம் இலக்கம் 5 இன்படி, வைத்தியர்கள் பொதுப் பெயரிலேயே மருந்துச் சிட்டைகளில் எழுதி வழங்க வேண்டும் எனவும், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் வியாபாரப் பேரில் வழங்கப்படும் மருந்தினை வாங்குவதற்கு நோயாளியிடம் போதிய பணம் இல்லாத சந்தர்ப்பங்களில், மாற்றீடான விலை குறைவான வேறு மருந்தினை மருந்தாளர்கள் வழங்க வேண்டும் எனவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் எனது ஊருக்கு அண்மையில் உள்ள நகரம் ஒன்றில் குறித்த வியாபாரப் பெயர் கொண்ட குடல் புழுக்களுக்கான தனி குளிசை கொண்ட [பூச்சி மருந்து] 600 ரூபாய்கள் படியும் 6 குளிசைகள் கொண்ட அட்டை 800ரூபாய்களுக்கும் விற்கப்படுகிறது. அதேவேளை, வேறு ஒரு வியாபாரப் பெயரைக் கொண்ட குடல் புழுக்களுக்கான குளிசையானது 80 ரூபாக்களுக்குக் கொழும்பில் வாங்கக் கூடியதாக உள்ளது. கொழும்பில் 80 ரூபாய்க்கு வாங்க கூடிய மருந்தின் அதிக விலையுள்ள இன்னொரு நிறுவனத் தயாரிப்பு (brand) நன்கு திட்டமிடப்பட்ட வகையில் குறித்த பிரதேசத்தின் அனைத்து மருந்தகங்களிலும் அந்தப் பிரதேசத்தில் உள்ள வைத்தியர்களது ஆதரவுடன் விற்கப்பட்டால் அந்தக் கூட்டணியை மருத்துவ மாபியா என்று கூறலாம்.
பாடசாலை நாட்களில் வைத்தியசாலை நிர்வாகச் சீர்கேட்டினால் ஏற்பட்ட ஏமாற்றம் .
எனது ஹார்ட்லி கல்லூரிப் பாடசாலை நாட்களில் ஒருநாள் பல் வலி ஏற்பட்டு 1 மணியளவில் ஊறணி வைத்தியசாலைக்கு சென்ற போது அங்குள்ள பல் வைத்தியர் மதியம் 12 மணிக்கு பிறகு நோயாளிகளை பார்க்கமாட்டோம் என்று கூறி என்னை திருப்பி அனுப்பினார். பல வருடங்கள் கழிந்து நான் மருத்துவராகிய பின்னரே பல் வைத்தியர்களும் காலை 8-12 மணி வரையும் மற்றும் மாலை 2-4 மணி வரையும் வேலை செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். அன்று அந்த பல் வைத்தியர் செய்தது நிர்வாக சீர்கேடு என்று கூறலாமே ஒழிய மருத்துவ மாபியா என்று கூறமுடியாது.
செவ்வாய் முதல் வியாழன் நோய் (Tuesday To Thursday Syndrome- TTTS )
10 வருடங்களுக்கு முன்னர் யாழ் மருத்துவ பீடத்தில் விரிவுரையாற்றுவதற்காகச் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5மணிக்கு கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்குப் புறப்படும் நகர்சேர் கடுகதித் தொடரூந்தில் பயணம் செய்யும் போது யாழ் போதனா வைத்தியசாலை உட்பட வட மாகாணத்தை சேர்ந்த பல வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தென் பகுதியை சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களால் தொடரூந்து நிறைந்திருக்கும் அதேபோல் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து மதிய வேளையில் கொழும்பு நோக்கிப் பயணம் செல்லும் போது வட மாகாணத்தில் வேலை செய்யும் அதே வைத்தியர்கள் தென்பகுதியில் உள்ள தமது வீடுகளுக்குச் செல்வதைக் கண்டு வியப்படைந்தேன். காரணம் இவர்கள் தமது கடமை நிலையங்களில் செய்வாய் மதியத்திலிருந்து வியாழன் மதியம் வரையே-அதாவது வாரத்தின் ஏழு நாட்களில், ஒரு முழு நாளும், இரண்டு அரை நாட்களும் மட்டுமே- கடமையில் இருந்திருப்பார்கள்.
அதனைப் பொது வெளியில் கொண்டு வந்து, செவ்வாய் முதல் வியாழன் நோய் (Tuesday To Thursday Syndrome- TTTS) எனப் பெயரிட்டதுடன், உரிய மருத்துவ நிர்வாகிகளது பார்வைக்கும் கொண்டு சென்றிருந்தேன். இருப்பினும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒன்றுவிட்ட இரண்டு கிழமை நோய் (Every Other 2 Week Syndrome EOWS)
கடமை நிமித்தமாக மன்னார் வைத்தியசாலைக்குச் சென்ற போது பல மருத்துவர்கள் மாதத்தில் இரண்டு வாரங்கள் மட்டும் வைத்தியசாலையில் கடமையாற்றுவதையும் பின்னர் அந்த மருத்துவர் வீட்டுக்கு சென்று இரண்டு வாரம் உத்தியோகப்பற்றற்ற விடுமுறையில் தங்கி நிற்கும் போது, முன்னதாக இரண்டு வார உத்தியோகப்பற்றற்ற விடுமுறையில் சென்றிருந்த இன்னொரு மருத்துவர்/ மருத்துவ நிபுணர் வந்து அடுத்த இரண்டு வாரம் கடமை செய்வதையும் அவதானித்தேன்.
பின்னர் கிழக்கை சேர்ந்த வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணராக கடமையாற்றும் மருத்துவர்கள் பலர் கொழும்பில் உள்ள பல தனியார் வைத்தியசாலைகளில் வார நாட்களிலேயே நோயாளிகளை பார்ப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்ததை அவதானித்தேன்.
மேலும் விசாரித்தபோது வடக்கைப் போலவே கிழக்கு மாகாணத்திலும் தென் பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் /மருத்துவ நிபுணர்கள் மாதத்தில் இரண்டு வாரமே வேலை செய்துகொண்டு, ஒரு மாதத்துக்கான சம்பளத்தையும், ஒரு மாதத்தில் வைத்தியர் ஒருவரால் பெறக்கூடிய மேலதிக வேலை நேரமான 120 மணித்தியாலங்களுக்கான கொடுப்பனவையும் பெற்றுக் கொள்வதுடன், கொழும்பில் தங்கியிருக்கும் நாட்களில் இவர்கள் பல தனியார் வைத்தியசாலைகளில் வேலை செய்து வருவதையும் அவதானித்தேன்.
இலங்கையில் பிரித்தானியர் காலத்தில் வைத்தியர்கள் மீதான நம்பிக்கை காரணமாக அவர்களது தினவரவுப் பதிவேட்டினை அவர்களே பதிந்து மாத முடிவில் மேலதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் நடைமுறை காணப்பட்டது. அதுவே இது நாள் வரை நடைமுறையிலும் உள்ளது. கடவுளுக்குச் சமமான மதிக்கப்படும் வைத்தியர்கள் மனச்சாட்சிப்படி இந்தப் பதிவேடுகளைப் பேணிச் சமர்ப்பிப்பார்கள் என்ற கருத்தைப் பொய்யாக்கி வழங்கப்பட்ட சலுகையினையே உரிமையாக்கி பட்டவர்த்தனமாக மோசடி செய்யும் ஒரு கலாச்சாரத்தினை உருவாக்கிப் பாதுகாத்து வரும் மருத்துவர்களது தொழிற்சங்கத்தினரே மருத்துவ மாபியாக்கள் இலங்கையில் தோன்றி வளரக் காரணகர்த்தர்கள் ஆவர்.
இலங்கையில் மருத்துவ மாபியாக்களின் உருவாக்கம்
இவ்வாறான அரச தாபன விதிக் கோவைகள் மற்றும் நிதி விதிகளுக்கு முற்றிலும் முரணாக நடந்து கொள்ளும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காது, கண்மூடி இக்குற்றங்களுக்கு உடந்தையாக மருத்துவ நிர்வாகிகள் இருப்பது ஏன் என நான் ஆராய்ந்தபோது, அதிகாரிகள் அனைவரும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்குப் (GMOA) பயந்தே அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டு கொண்டேன்.
அத்துடன் மருத்துவ நிர்வாகத்தின் ஆரம்ப அலகான நோயாளர் விடுதிகளது நிர்வாகிகளான வைத்திய நிபுணர்களில் கணிசமானவர்கள் தனியார் வைத்திய சேவைகளையே தமது பிரதான தொழிலாகவும், அரச வைத்தியசாலைக் கடமைகளை பகுதிநேர தொழிலாகவும் கருதி செயற்படுவதால், விடுதிகளையும் நோயாளர்களையும் முகாமை செய்வதற்கு சாதாரண மருத்துவர்களிலும விடுதித் தாதியர்களிலும் தங்கியிருக்க நேரிடுகிறது. இதனால் வைத்திய நிபுணர்கள் தமது ஆளுகையின் கீழுள்ள ஆளணியினர் மீதான நிர்வாகப் பிடியினை இழப்பதோடு தமது விடுதியில் பணியாற்றும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத, அவர்கள் பக்கம் சாரந்;து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கையறு நிலைக்கு ஆளாகியுள்ளனர். இது மருத்துவ நிர்வாக அலகின் அடிமட்டத்திலேயே சீர்கேடுகளையும் கட்டுப்பாடின்மைகளையும் உருவாக்கிப் பலவீனமடைய வைத்துள்ளது.
மேலும், ஒழுங்காக வருகை தராத நிபுணர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்த மருத்துவ நிர்வாகிகள் மீது, சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் மருத்துவ தொழிற்சங்கத்தினர், அவர்களை அப்புறப்படுத்தி விட்டே மறுவேலை பார்ப்பார்கள் என்பதற்குப் பொத்துவில் தொடக்கம் பருத்தித்துறை வரை உதாரணங்களை நான் கேள்விப்பட நேரிட்டது.
இங்கே நோயாளிகளது நலன்கள் கவனத்தில் கொள்ளப்படாது, தொழிற்சங்கத்தினர், நிர்வாகிகள் ஆகியோரது தன்னலம் கருதிய கூட்டிணைவும் ஒருவகையான மாபியாவாகவே கருதப்பட வேண்டும்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியவர்களுக்கு புகலிடம் கொடுத்துக் காப்பாற்றுவது, மருத்துவத்துறையில் உள்ள ஏனைய பிரிவு உத்தியோகத்தர்கள் தமது மேற்படிப்பு மற்றும் நலனோன்புகள் குறித்து தத்தமது தொழிற்சங்கங்கள் ஊடாக எத்தனிக்கும் போது அதனைத் தடுப்பது எனக் கடந்த காலங்களில் தனிக் காட்டு ராசாக்களாகச் செயற்பட்ட வைத்தியர்களது தனிப் பெரும் தொழிற்சங்கமானது ஏனைய தொழிற்சங்கங்களுக்கு தவறான முன்னுதாரணங்களை வழங்கியது.
இதன் ஒரு பரிணாம வளர்ச்சியாக, 2015 காலப்பகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக பிற சுகாதாரத்துறை சார் தொழிற்சங்கத் தலைவர்களை வளர்த்தெடுத்தார்.
அவர்களும் விசுவரூபம் எடுத்து மருத்துவத் துறையில் அரச நிர்வாக நடைமுறைகளுக்குப் புறம்பான மாபியாத்தனமான நடைமுறைகளை நியதிகளாக்கி வருகின்றார்கள். இவர்களுடன் அரசியல்வாதிகளும் கூட்டிணைந்து பாரிய மாபியாக் கூட்டங்களாக மாறியுள்ளனர். இதனால் மருத்துவ நிர்வாகத்துறையானது ஒப்புக்குச் சப்பாணியான இரப்பர் முத்திரை நிர்வாகமாக மாறிப்போய் உள்ளது. இதன் இறுதி விளைவாக சுகாதார அமைச்சே சிறைச்சாலையில் அடைக்கப்படும் படுகேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுச் சந்தி சிரிக்கிறது.
மருத்துவத்துறையின் பிற பிரிவு மாபியாக்கள்
சுகாதாரப் பணி உதவியாளர்கள் என முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மறுபெயரிடப்பட்ட சுகாதாரத்துறைச் சிற்றூழியர்கள் தமது கடமைப் பட்டியலுக்கு அமையச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறுத்துச் சவால் விடுத்து வருகிறார்கள். இவர்களில் கனிட்ட தரத்தினர்தான் வைத்தியசாலைகளது உட்புறங்களை அதாவது நோயாளர் விடுதிகள் உட்பட்ட சிகிச்சைப் பிரதேசங்களைத் தூய்மையாக்கும் பணிகளைச் செய்ய வேண்டியவர்கள்.. இவர்களுக்கு அதற்காகவே மாதாந்த வேதனம் மற்றும் படிகள் மக்கள் வரிப்பணம் மூலம் செலுத்தப்படுகிறது.
ஆனால்> பல்வேறு அரசியல்வாதிகளது அடிவருடிகளாகச் சேவகம் செய்பவர்களுக்கு வைத்தியசாலைச் சிற்றூழியர்களாக நியமனம் வழங்கும் துர்ப்பாக்கிய அரசியல் கலாச்சராம் ஆரம்பித்ததுடன்> வைத்தியர்களது தொழிற்சங்கம் வழங்கிய தவறான முன்னுதாரணங்களும் இணைந்து கொள்ள, சிற்றூழியர் தொழிற்சங்கங்களும் அரச தாபன விதிகளை மீறி தாமே தமக்கான விதிகளை வரைந்து கொண்டுள்ளனர்.
இதன் விளைவாக, ‘வைத்தியசாலைகளது வெளிப்புறச் சுத்திகரிப்பிற்காகப் பணி அமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் மூலமே வைத்தியசாலைகள் உட்புறச் சுத்திகரிப்புகளும் நடைபெற வேண்டும்,. எம்மால் தூய்மைப் பணிகளில் ஈடுபடமுடியாது’ என்று சிற்றூழியர்கள் கைவிரித்து விட்டனர்.
இந்தச் சிற்றூழியர்கள் பணியமர்த்தப்பட்டது, பயிற்றப்பட்டது மற்றும் தற்செயலாக தொற்றுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்களில் இருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் வழங்கப்பட்டது எல்லாம் அவர்கள் வைத்தியசாலைகளது உள்ளகத் தூய்மைப் பணியினை மேற்கொள்வதற்காகவே ஆகும் அவ்வாறு இருக்கையில் அப்பாவி ஒப்பந்தப் பணியாளர்கள் தமக்குப் பயிற்றுவிக்கப்படாத பணியில் பாதுகாப்பற்ற முறையில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது பாரிய மனித உரிமை மீறலும்> தொழிலாளர் சுரண்டல் ஆகும்.
இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல சிற்றூழியர்கள் கடமை நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு வெளியே முச்சக்கர வண்டி செலுத்துவது மற்றும் பிற வேலைகளில் ஈடுபடுவது தெரிந்தும் மருத்துவ நிர்வாகிகள் கண்டும் காணாது உள்ளனர். காரணம், இது குறித்துக் கேள்வி எழுப்பினால், மருத்துவர்கள் கடமை நேரத்தில் வெளியே செல்வது குறித்து சிற்றூழியர்கள் எதிர்க் கேள்வி எழுப்புவார்கள் என்ற அச்சமே ஆகும்.
ஆரம்ப காலங்களில் நுணுக்குக் காட்டியினைப் பாவித்து இரத்தப் பரிசோதனை முதலானவற்றினை மேற்கொண்ட ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்களுக்கு, அவர்கள் குருதியில் உள்ள ஒவ்வொரு கூறினையும் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு கட்டணம் வழங்கப்பட்டது (piece rate). உதாரணமாக செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கையினைக் கண்டறிவதற்கு குறித்த தொகை, வெண்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கைகளைக் கண்டறிவதற்குக் குறித்த தொகை எனக் கட்டணங்கள் கணக்கிடப்பட்டன.
தற்காலத்தில் சகல பரிசோதனைகளும் தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவே பெறப்படுகின்றன. மாதிரிகளை அவ்வியந்திரங்களில் இடுவதும், பின்னர் தன்னியக்கமாக அச்சிட்டடு வழங்கப்படும் பரிசோதனை அறிக்கையில் கையொப்பம் இடுவதுமே ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் தற்போது செய்யவேண்டிய பணியாகும். அதிலும் பல வைத்திசாலைகளில் சிற்றூழியர்களே மாதிரிகளை இயந்திரத்தில் இட்டு, அறிக்கைகளைப் பெற்று வைக்க, ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் கையொப்பம் வைப்பது மட்டுமே கடமையாக உள்ளது.
இருப்பினும் கடந்த காலங்களில் பெற்றதைப் போலவே இயந்திரத்தினால் வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கையில் உள்ள ஒவ்வொரு கூறுகளுக்கும் கட்டணங்களை ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் பெற்று வருகிறார்கள். இது தொடர்பிலும் மருத்துவ நிர்வாகிகள் எவரும் எதுவும் செய்யமுடியாதவகையில் தொழிற்சங்க ஆதிக்கம் கட்டிப் போட்டுள்ளது.
இதன் பரிணாம வளர்ச்சியாக ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்களும் தற்போது கடமை நேரத்தில் அரச வைத்தியசாலைகளுக்கு வெளியே தனியார் நிலையங்களில் உள்ள ஆய்வுகூடங்களுக்குச் சென்று அங்குள்ள கடமைகளைப் பார்க்கும் அளவிற்கு வந்துள்ளது.
நோயாளிகளின் துன்பத்தை அதிகரிக்கும் அரசியல்வாதிகள்
ஊழலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை மீள பெற்றுக் கொள்ளாமலும் பாதுகாப்பு செலவை குறைக்காமலும் அரசாங்க ஊழியர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள அண்மைக்கால வரி அதிகரிப்பு மற்றும் சுகாதார சேவைக்கான நிதிப்பற்றாக்குறை ஆகியன நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஒருபுறம் மருத்துவர்கள் பெற்று வந்த மாத வருமானமானது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாகத் திடீரெனக் குறைவடைந்ததால், இதுவரையிலும் தனியார்துறையில் பணியாற்றாத வைத்தியர்களையும் பொருளாதாரச் சுமைகாரணமாகத் தனியார்துறையிலும் பணியாற்றுவதற்கு உந்தியுள்ளது.
மறுபுறம் அரசாங்கத்தினால் சுகாதார சேவைக்கு வழங்கப்படும் நிதி போதாமல் இருப்பதனால் சில ஆய்வுகூட பரிசோதனைகள், சத்திரசிகிச்சைகளுக்கான பொருட்கள் -உதாரணங்களாக கண் புரை சிகிச்சைக்கு வேண்டிய கண் வில்லைகள் எலும்பு முறிவு சிகிச்சைக்கு வேண்டிய திருகாணிகள் பல் வைத்தியத்துக்கு வேண்டிய மூலப்பொருட்கள் ஆகியன- அரசாங்க வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக இருப்பதனால் தனியார் துறையில் இவற்றை பெற்று வருமாறு நோயாளிகளிடம் கூறும் நிலை உருவாகியுள்ளது அல்லது மேற்குறித்த பொருட்கள் அரச வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் நேர்மையான வைத்தியரும் தனியார் வைத்தியசாலைக்குச் செல்லுமாறு நோயாளியைக் கேட்டுக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியுள்ளது .
இதேவேளை எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபமாகத் தனியார் துறையுடன் இணைந்து தமது வருமானத்தை பெருக்கி கொள்ளும் இன்னொரு கூட்டம் நாடு பூராகவும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகள் தனியார் வைத்தியசாலைக்குச் செல்வதற்கேற்றவாறு நிலைமைகளை செயற்கையாக உருவாக்குகிறது. உதாரணமாக “அரச வைத்தியசாலையில் உங்களது சத்திரசிகிச்சையை செய்ய விரும்பினால் செய்யலாம். ஆனால் நான் அதனைச் செய்ய மாட்டேன்.பதிலாக பயிற்சி வைத்திய நிபுணரோ அல்லது சாதாரண வைத்தியரோதான் செய்வார்கள். அவ்வாறு அவர்கள் ‘பழகும் போது’ பாதிப்பு வந்தால் என்னைக் குற்றம் சாட்டக்கூடாது. நீங்கள் தனியார் வைத்தியசாலைக்கு வந்தால் நானே சத்திரசிகிச்சையைச் செய்துவிடுவேன்” என்று கூறுவது ஒருவகை.
இன்னொரு வகையினரோ எலும்பு முறிவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசினால் மருத்துவ வழங்கல் பிரிவினால் வழங்கப்படும் திருகாணிகள் மற்றும் பட்டங்கள் (plates) இருந்தாலும், சத்திரசிகிச்சையினை மேற்கொள்ளாது தாமதப்படுத்துவார்கள். குறித்த நோயாளிகள் தினமும் சாப்பிடாமல் இருக்குமாறு கூறப்பட்டு, சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் காக்க வைக்கப்படுவார்கள். அவர்கள் பார்த்திருக்கும் போதே தனியார் துறையினரிடம் அதே திருகாணிகளையோ பட்டங்களையோ பணம் செலுத்திப் பெற்றுக் கொடுத்த நோயாளிகள் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இறுதியாக அப்பாவி நோயாளியிடம் “இன்றைக்கு தியேட்டர் லிஸ்ற் முடிந்து விட்டது. இனி நாளைக்குத்தான்” என்று கூறி திரும்பவும் விடுதிக்கு அனுப்பப்படுவார்கள். இப்படி இரண்டு மூன்று தினங்கள் கழிந்த பின்னர் உளவியல் ரீதியாகப் பணவசதி அற்றவர்களும் நகைகளை அடகு வைத்தோ காணியை விற்றோ தனியார் துறையினரிடம் பணம் செலுத்தி திருகாணிகளைப் பெறும் எண்ணத்திற்கு வந்துவிடுவார்கள். அந்தத் தருணத்திற்காக காத்திருந்தவராக விடுதியில் உள்ள முகவரான சுகாதாரத்துறைப் பணியாளர் அப்பாவி நோயாளியை அணுகிப் பேரம் பேசுவார்கள். பேரம் முடிந்தால் வெளியில் உள்ள தனியார் துறை முகவருக்குத் தகவல் அனுப்பப்பட்டு பணம் கைமாறியதும் மறுநாள் வெற்றிகரமாகச் சத்திர சிகிச்சை நடக்கும்.
இன்னொரு வகை மாபியாக்கள் அரச வைத்தியசாலைகளில் உள்ள வளங்களை மக்கள் பாவனைக்கு வரவிடாது சாதுரியமாகத் தடுத்துவிடுவார்கள். அதன்மூலம் தனியார் துறைக்கு நோயாளர்கள் வருமாறு செய்வதே அவர்களது நோக்கம். உதாரணமாக நாளாந்தம் முப்பதிலிருந்து நாற்பது பிரசவங்கள் வரை நடைபெறும் ஒரு வைத்தியசாலையில், பல மில்லியன்கள் செலவில் மகப்பேற்றுப் பெண்ணோயியல் விடுதி மற்றும் மகப்பேற்றியல் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியன அமைக்கப்பட்டுப் பல வருடங்களாகியும், அவற்றினைப் பாவனைக்குக் கொண்டுவராது, பதினாறு கட்டில்கள் மட்டும் கொண்ட, காற்றோட்டமோ முறையாக மலசலகூட வசதிகளோ அற்ற பிரசவத்தின் பின்னரான விடுதிக்குள்ளேயே அத்தனை பிரசவித்த தாய்மார்களையும் வைத்துப் பராமரிப்பது குறித்தும் நான் அறிந்துள்ளேன். இதற்குக் காரணம் கர்ப்பவதிகளுக்குச் சிரமத்தைக் கொடுத்து அவர்கள் மூலமாகவே தனியார் வைத்தியசாலைகளுக்குப் பிரசவத்திற்காகப் பிரதேச மக்கள் செல்லவேண்டும் என்ற தகவலைக் கூறவைக்கும் கபட நோக்கமேயாகும்.
சாவகச்சேரிச் சம்பவங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு ஆரம்பப்புள்ளி.
வடக்கு கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் 2009 வரை யுத்தம் என்ற பெயரில் அபிவிருத்தி அடையாமலும் பல வைத்தியசாலைகள் போரினால் சேதமடைந்தும் இருந்தன. யுத்தம் முடிந்து 2010 இல் இருந்து 2018 வரை பல நன்கொடையாளர்கள் வைத்தியசாலைகளுக்கு உதவத் தயாராகக் கதவு திறந்து இருந்த போதும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக சமத்துவமான (equity) சுகாதார சேவை வழங்கலுக்குரிய திட்டம் எதுவும் இன்றி கிடைக்கப்பெற்ற உதவிகள் சில வைத்தியசாலைகளுக்கு மட்டும் திசை திருப்பப்பட்டன.
அவ்வாறான திசை திருப்பப்பட்ட நிதியிலும் அரசியல்வாதிகள் ஊழல் செய்து தமது சட்டைப்பைகளை நிரப்பிக் கொண்டதாகப் பல குற்றசாட்டுகள் உள்ளன. 2019 இல் கொரோனா தாக்கம் ஆரம்பமானதுடன் வைத்தியசாலை அபிவிருத்திக்கான கதவுகள் மூடி கொண்டதுடன் அதன்பின் வங்குரோத்து நிலை ஏற்பட்டது.பின்னர் பதவிக்கு வந்த ரணிலின் அரசாங்கம் வரிகளை அதிகரித்ததனால் மருத்துவர்கள் பெருமளவில் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அண்மையில் தமது மருத்துவ நிர்வாக முதுகலைமாணிப் பாடநெறிகளைப் பயின்று இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிய ஒரு தொகுதி பட்டப்பின்படிப்பு மாணவர்கள் அவர்களது பெறுபேறுகள் வெளியாக்குவதற்கு முன்னரேயே சுகாதார அமைச்சினால் தற்காலிக நியமனங்கள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமைப்பொறுப்பு ஏற்ற பின்னர் நடைபெற்ற சங்கிலித் தொடரான சம்பவங்கள் அனைத்தும் மக்கள் வெளிப்படுத்திய/ வெளிப்படுத்திவரும் உணர்வுகளும் நான் இதுவரை விபரித்தவற்றின் இறுதி விளைவுகளாகும். அவ்வாறிருக்கையில் எவராவது உண்மை நிலையை மறைத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விரைவில் சத்திரசிகிச்சை நிபுணர்களை நியமிக்க முடியும் என்று கூறுவார்களேயானால் அது முழுப் பொய்யாகும். அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு சென்று நேரடியாக பார்த்த போது சத்திரசிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்து வைத்தியர்கள் நியமிக்கப்படாத நிலையில் சத்திரசிகிச்சை கூடத்துக்குரிய உபகரணங்கள் பல வருடங்களாகப் பாவனையின்றி இருந்ததனால் பழுதடைந்து இருப்பதை கண்டு துயரடைந்தேன்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவார்களாம்
நாள்தோறும் 350 மில்லியன் பெறுமதியான கடல் உணவை இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடலில் கொள்ளையடித்து செல்லும் போது அதற்கு தீர்வு காண முடியாத மீன்பிடி அமைச்சர், அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற கோதாவில் தனக்குச் சம்பந்தம் இல்லாத சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி அதை முகப்புத்தகக் [Facebook live] காணொளியில் போட்டு ஆணவத்துடன் பெருமை அடித்துக் கொள்கிறார். வேண்டுமானால், 1995 தொடக்கம் அதாவது யாழ் மாவட்டம் அரச கட்டுப்பாட்டிற்குள் வந்தது தொடக்கம் 2019 வரை 25 வருடங்கள் அமைச்சராக ப் பல்வேறு அரசுகளின் கீழ் பதவியில் இருந்தும் சாவகச்சேரி வைத்தியசாலையைத் திரும்பி பார்க்காத அமைச்சர் இப்போது தேர்தல் அண்மித்து விட்டதனால் என்ன மாதிரி ‘படம்’ போடுகிறார் என்று தமிழ் மக்கள் வியந்து கொள்ளலாம்.
சிங்கள மக்கள் வாழும் பகுதியில் சுகாதார துறையுடன் சம்பந்தப்படாத அமைச்சர் ஒருவர் இப்படியான அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் [GMOA] என்ன செய்திருக்கும் என்று தமிழ் மருத்துவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
மற்றவர் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதவியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் மின்பிறப்பாக்கி ஒன்று சில வாரங்களுக்குள் வரபோகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்த மூன்று வாரங்களுக்கு மின்பிறப்பாக்கி அனுப்புவாராம். பின்னர் மனக்குறையோடு இருக்கும் வைத்தியர்களை தனது தொலைக்காட்சியில் அதிகாரத்துடன் பேட்டி கண்டு அவர்களை பலிக்கடாவாக்கி, தான் வைத்தியசாலைகளுக்கு எதுவும் செய்யாததை மறைத்து தனது அதிகாரத்துக்கு கட்டுப்படாத மருத்துவ நிர்வாகிகள் மீது சேறு பூசி மகிழ்வார்.
வடபகுதியின் சுகாதார சேவையை அழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.
நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை விடுத்து அரசியல்வாதிகள் தத்தமது ஊதுகுழல் ஊடகங்களைப் பயன்படுத்தி அனைத்து மருத்துவர்கள் மீதும் சேறு பூசி வருவது நேர்மையாக செயல்பட்ட மருத்துவர்களையும் வடக்கை விட்டு வெளியேற தூண்டியுள்ளது. இவர்கள் ஆதரவளிக்கும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் காரணமாகவே மருத்துவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேர்மையாக ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்ற உரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
வன்னியில் உள்ள பல வைத்தியசாலைகள் சாவகச்சேரி வைத்தியசாலையை விட மிகவும் கேவலமான நிலையில் உள்ளன. அதேவேளை கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்களுடன் இயங்கிய பல சிறு வைத்தியசாலைகள் அந்த பகுதிகளை சேர்ந்த அரசியல்வாதிகளின் முயற்சியால் இன்று பல நிபுணர்களுடன் பெரிய வைத்தியசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
ஒரு தரப்பு தமிழ் தேசியம் பற்றி பேசி தமிழ் மக்களை உசுப்பேற்றுகிறது. அரசியலுக்கும் நடைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தினை மறந்து மத்திய அதிகாரம் மாநிலம் 13ம் திருத்தச் சட்டம் என்று வைக்கோற்பட்டடை நாய்களாகக் குழப்பியடித்து உழல்கிறது. மறு தரப்பு அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களை சுரண்டி தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்கிறது.
சாவகச்சேரி உட்பட வடபகுதி வைத்தியசாலைகளை இயங்கவைப்பதற்கும் மருத்துவ மாபியாவை ஒழிப்பதற்கும் என்னதான் தீர்வு?
தற்போது உள்ள சூழ்நிலையில் நான் ஏற்கெனவே பதிவிட்ட படி அந்தந்த பகுதிகளை சேர்ந்த மருத்துவர்கள் சில மாத காலமாவது தமது சேவையை வழங்க முன்வரவேண்டும். அதை விடுத்து வெளிநாட்டில் வாழும் மருத்துவர்களும் தற்போது சேவையில் உள்ள மருத்துவர்களும், இயங்காத நிலையில் பழுதடைந்துள்ள சத்திரசிகிச்சை கூட உபகரணங்களுக்காக தம்மிடையே குற்றம் சாட்டிக் கொள்வது வேதனை அளிக்கிறது.
அரசாங்கத்துக்கு உண்மையில் மருத்துவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண விருப்பம் இருந்தால் ஏனைய பல நாடுகளில் இருப்பது போல் அரசாங்க மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் தனியார் துறையில் வேலை செய்வது மற்றும் சுகாதார சேவையுடன் தொடர்பான மருந்தகங்கள், ஆய்வு கூடங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளை நடத்துவது ஆகியனவற்றினை முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.
அதேவேளை அரசாங்க வைத்தியர்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளர்கள் கௌரவமாகத் தமது குடும்பங்களைப் பராமரிப்பதற்கு அவர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் கடமை நேரத்தில் வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் வைத்தியசாலையில் இருந்ததை உறுதிப்படுத்த CCTV உட்பட பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட மருத்துவ துறை தொழிற்சங்கள் தொழிற்சங்க விதிமுறைகள், தொழில் தர்மங்கள் ஆகியவற்றினை விளங்கி மக்களைப் பணயம் வைக்காது தமது உரிமைகளை வென்றெடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். குறிப்பாக நிர்வாகத்தில் தலையீடு செய்வது, தவறு செய்தவர்களைக் காப்பாற்றுவது, அரச விதிமுறைகளை மீறுவதை ஊக்குவிப்பது ஆகியவற்றினை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல் மருத்துவ பீட ஆசிரியர்கள் மற்றும் போதனா வைத்தியசாலையின் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் மனித உருவில் சேவையில் தெய்வங்களாக நடமாடிய தனியார்துறை வருமானத்தில் கிஞ்சித்தும் ஆசை கொண்டிராத சிவகுமாரன்,கணேசரட்ணம், சிவசூரியா போன்ற உயர்ந்த மனிதர்கள் எமக்கு முன்னுதாரணமாக செயல்பட்டார்கள்.
இன்று தனியார் வைத்தியசாலைகளில் தமது பகல் நேரக் கடமைகளை முடித்து விட்டு நள்ளிரவில் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கத் தொடங்கும் மருத்துவர்களை பார்க்கும்போது கேவலமாக இருக்கிறது. இவர்களைப் பார்த்து வளரும் அடுத்த தலைமுறை பணத்திற்காகத் தறிகெட்டு அலைவது தவிர்க்க முடியாதது.
மருத்துவ நிபுணர்கள் கடமை நேரங்களில் முழுமையாகப் பணியாற்றினால், மருத்துவர்களிடம் கடமைப்பட வேண்டிய தேவை நேரிடாது. இதனால் செஞ்சோற்றுக் கடனுக்காக மருத்துவர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் செய்யும் விதிமீறல்களைக் கண்டும் காணாது விடவேண்டிய அவசியம் நேரிடாது. அதைவிட 4-6 மணி நேர மேலதிக கொடுப்பனவு பெற்றுக்கொள்ளும் வைத்தியர்கள் இரவு நேரத்தில் ஒரு தடவையாவது சிகிச்சைக்கள சுற்றுகளை (ward rounds) செய்ய வேண்டும்.
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் ஊறு படும் நிலையில் உள்ள நோயாளிகளை இரவில் கவனிக்காமல் இருப்பதே பல குற்றச்சாட்டுகளுக்கும் வைத்தியர்களுக்கு எதிரான மக்களின் உணர்வுக்கும் காரணமாக உள்ளது என்பதையும் மருத்துவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
—நன்றி–
—Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்—