பங்களாதேசில் காணப்படும் வன்முறையை முடிவிற்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு படையினருக்கு ஷேக் ஹசீனா ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தவேளை பிரதமராக தனது காலம் முடிவடைகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் அவர் காணப்படவில்லை.
ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் அவர் மக்கள் சக்தியால் அடித்துசெல்லப்பட்டார்.அவரது வெளியேற்றம் இவ்வளவு வேகமாக இடம்பெறும் என எவரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள்.
இறுதியில் பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனையை விட அவரது குடும்பத்தினரின் ஆலோசனையே பங்களாதேசிலிருந்து அவரை வெளியேறச்செய்தது என அவரது மகன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
ஹசீனா மிகவும் சரியான தருணத்தில் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார்-அவர் அங்கிருந்து தப்பியோடி சில மணிநேரத்தில் மக்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷேக்ஹசீனா தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.அந்த சந்திப்பில் முப்படைகளின் தளபதிகளும்,பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.அங்கு மனோநிலை சிறப்பானதாக காணப்படவில்லை.
நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பல வாரங்களாக இடம்பெற்று வந்த நிலையில் பிரதமருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தவண்ணமிருந்த சூழ்நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.1971ம் ஆண்டு சுதந்திரபோராட்டத்தின் பின்னர் பங்களாதேஸ் சந்தித்த மிக மோசமான வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 90க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.அனேகமானவர்கள் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்.அதேவேளை பெருமளவு பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறைகள் காரணமாக கொல்லப்ப்ட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பில் ஹசீனா இரண்டு தீர்வுகளை முன்வைத்தார் என பிபிசியின் வங்காள சேவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த அதேவேளை அவர் இறுதிநிமிடம் வரை அதிகாரத்திலிருக்க விரும்பினார்.
எனினும் முப்படைதளபதிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரும் அதிகாரிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களும் நாட்டின் பல பகுதிகளில் ஒன்றாக காணப்பட்டனர்.
நாட்டின் நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் பாகாப்பு தரப்பினர் நிலைமை கட்டுக்கடங்காத நிலைக்கு செல்வதை உணர்ந்திருந்தனர்.
பிரதமருடனான அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முப்படை தளபதிகளும் அதிகாரிகளும் படையினரால் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ள முடியாது என ஹசீனாவிடம் தெரிவித்தனர்.எனினும் பொலிஸாருக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்தன.
வெடிமருந்துகள் முடிவடையும் நிலையில் உள்ளதாக சிரேஸ்ட பொலிஸ்அதிகாரிகள் ஹசீனாவிடம் தெரிவித்தனர்.
ஆனால் ஷேக் ஹசீனா அவர்களை செவிமடுக்க தயாரில்லை.
மேலும் அவருடன் நேருக்குநேர் முரண்படுவதற்கு எவரும் தயாராகயிருக்கவில்லை.
பாதுகாப்பு தரப்பினருடனான அந்த சந்திப்பின் பின்னர் ஷேக் ஹசீனாவின் ஊடக செயலாளர் ஒரு உறுதியான செய்தியை தெரிவித்தார்.
ஷேக்ஹசீனா ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என தெரிவித்ததுடன்,அழிவுநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை பொதுமக்கள் எதிர்க்கவேண்டும் என்றார்.
உள்நாட்டு போர் ஒன்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என பாதுகாப்பு தரப்பினர் அச்சமடைந்தனர்.
உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வன்முறைகள் குறித்த படங்கள் வீடியோக்கள் வெளியாகிக்கொண்டிருந்தன.
பொலிஸாரினால் அவாமி லீக்கின் ஆதரவாளர்களினால் சுடப்பட்ட இளைஞன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் காணப்படும் படம் கடும் சீற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
மோதல்களின் தீவிரதன்மை வெளிப்படையானதும், மாணவ தலைவர்கள் டாக்காவை நோக்கி பேரணியொன்றிற்கு அழைப்பு விடுத்தனர்.இது அதிகாரிகளிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் வேண்டுகோளிற்கு ஆதரவு அதிகரிக்கின்றது ,ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் அணிதிரள்வதற்கு தயாராகின்றனர் என புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றால் அது இரத்தக்களறிக்கு வழிவகுக்கும்.
இதன் காரணமாக இராணுவதளபதி பிரதமர் ஹசீனாவுடன் மீண்டும் பேசுவதற்கு தீர்மானித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஷேக் ஹசீனாவை மீண்டும்சந்தித்த முப்படைதளபதிகள் நிலைமை மேலும் கொந்தளிப்பானதாக மாறிவருகின்றது,திங்கட்கிழமை காலை ஆயிரக்கணக்கில் மக்கள் டாக்காவில் குவியக்கூடும் என பணிவுடன் எச்சரித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பை வழங்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷேக் ஹசீனா அவர்களின் ஆலோசனையை செவிமடுக்கவில்லை,ஆனால் அதிகார மாற்றம் ஏற்கனவே இடம்பெறத்தொடங்கிவிட்டதை தாங்கள் உணர்ந்ததாக டாக்காவின் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தலைநகரின் பல பகுதிகளில் இருந்து பொலிஸார் காணாமல்போயிருந்தனர்.
ஷேக் ஹசீனா பிடிவாதமானவராக காணப்பட்டார்,அவர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகயிருக்கவில்லை,வெளியேறவும் தயாரில்லை.முப்படையினரும் அவரை சந்தித்தனர்,என்ன நடக்கின்றது என்பதை அவருக்கு தெளிவுபடுத்த முயன்றனர் என இராணுவதளபதி வக்கெர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
முப்படை தளபதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள முடியாது என தெரிவித்தனர்,எங்கள் படையினரும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள்,அவர்கள் கிராமங்களை சேர்ந்தவர்கள், அவர்கள் தங்கள் சொந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என அவர்கள் தெரிவித்தனர் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை காலை அளவில் பெருமளவு மக்கள் ஷேக் ஹசீனாவின் வீட்டை நோக்கி செல்லத்தொடங்கியுள்ளனர்.
ஜெனரல் ஜமான் மீண்டும் ஹசீனாவின் வீட்டிற்கு சென்று நிலைமையின் பாரதூர தன்மையை அவருக்கு தெளிவுபடுத்தினார்.மக்கள் ஊரடங்கு உத்தரவினை மீறத்தொடங்கியுள்ளனர்- ஏற்கனவே வன்முறைகள் வெடித்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
டாக்காவின் பல பகுதிகளில் இருந்து பொலிஸார் விலக்கிக்கொள்ளப்பட்டனர்.பொதுமக்கள் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லத்தை நெருங்குவதை தங்களால் தடுக்க முடியவில்லை என இராணுவதளபதி அவர்களிற்கு தெரிவித்தார்.ஒரு மணித்தியாலத்தில் அவர்கள் வந்துவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் ஹசீனாவின் குடும்பத்தவர்களை தொடர்புகொண்டு நிலைமையை விளக்குவதற்கு முப்படை தளபதிகள் தீர்மானித்தனர்.
பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகள் ஷேக் ஹசீனாவின் சகோதரி ரெஹானா சித்தீக்குடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர், அவரால் ஷேக் ஹசீனாவை டாக்காவிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ள முடியுமா என பார்க்க முயன்றனர்.
பக்கத்து அறையில் அவருடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்,ஷேக் ஹசீனாவிற்கு நிலைமையை தெளிவுபடுத்துமாறு அவரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்,அவர் தனது மூத்த சகோதரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் ஆனால் ஹசீனா தனது சகோதரியின் வேண்டுகோளை ஏற்க மறுத்தார் என வங்காள மொழியில் வெளியாகும் நாளேடு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் வெளிநாட்டில் வசிக்கும் ஹசீனாவின் மகன் சஜீப்பும் மகள் சைமாவும் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டனர், அவர் வெளியேற வேண்டும் என வற்புறுத்தினர்.
நாங்கள் வலியுறுத்தினோம் ஆனால் எங்கள் தாயார் வெளியேற விரும்பவில்லை,என சஜீப் வஜெட் ஜொய் பிபிசிக்கு தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை தாயார் பதவி விலகுவது குறித்து சிந்தித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் எங்கள் குடும்பத்தவர்கள் அவரை கெஞ்சிகேட்டோம்,
நாங்கள் அவரை வற்புறுத்தினோம், இது காடையர் கும்பல்,அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அவர்கள் உங்களை கொலை செய்வார்கள்,நாங்கள் உங்களை பாதுகாப்பாக வெளியேற்றவேண்டும், என ஷேக் ஹசீனாவின் மகன் தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை ஹசீனா புதுடில்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு புகலிடம் குறித்து வேண்டுகோள் விடுத்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது அரசியல்வாழ்க்கை முழுவதும் நெருங்கிய சகாவாக காணப்பட்ட புதுடில்லியின் அறிவுரை- அவர் வெளியேறவேண்டும் என்பதே.
இதற்கு ஒரு நாள் முன்னதாக அமெரிக்கா ஷேக் ஹசீனாவின் காலம் முடிவடைந்துவிட்டது அவர் பதவி விலகவேண்டும் என புதுடில்லி அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளது.
இராணுவம் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்பதை உணர்ந்ததும் அவர் பதவியை இராஜினாமா செய்தார் என்கின்றார் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் சகாவத் ஹ_சைன்.அந்தவேளை மக்கள் ஊரடங்கை மீறி வெளியே வரத்தயாராகிக்கொண்டிருந்தனர்,டாக்காவில் உள்ள ஹசீனாவின் இல்லத்தை நோக்கி செல்லதயாராகயிருந்தனர் என்கின்றார் அவர்.
பதவியை இராஜினாம செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு அவர் தயக்கத்துடன் ஒப்புகொண்ட பின்னர்,அவரை எப்படி நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்வது என்ற கேள்வி எழுந்தது.
ஹசீனா இராஜினாமா கடிதத்தில்கைச்சாத்திட்டதும் அவர் இராணுவ ஹெலிக்கொப்டரில் ஏறி தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செல்வார் என்பது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கும்,விசேட படைப்பிரிவினருக்கும் மாத்திரம் தெரிந்திருந்தது என பிபிசியின் வங்காளமொழி செய்தி பிரிவிற்கு தெரிவித்தார் தன்னை அடையாளம் காட்ட விரும்பாத பாதுகாப்பு அதிகாரியொருவர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்துமிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
காலை பத்தரை மணியளவில் அதிகாரிகள் இணையச்சேவைகளை துண்டித்தனர்.ஹசீனா வெளியேறுவது குறித்த நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த இணையச்சேவைகள் துண்டிக்கப்பட்டன.
ஷேக் ஹசீனா விமானநிலையத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.அவரது வாகனத்தொடரணி தாக்கப்படலாம் என்ற கரிசனைகள் காணப்பட்டன.இதன் காரணமாக ஹசீனாவின் வாகனம் பயணிக்கும் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது-
வெளியேறும் அந்த தருணம் வரை ஹசீனா பதவியை விட்டுக்கொடுப்பது குறித்த தயக்கத்துடனேயே காணப்பட்டார் என்கின்றார் அவரது மகன்.
அம்மா எனது சிறியதாய் தான் வெளியேறவேண்டும் என விரும்பினார்,எனது தாயார் ஹெலிக்கொப்டரில் ஏறவிரும்பவில்லை,நான் தொலைபேசியில் அவருடன் தொடர்பிலிருந்தேன்,அவரை வற்புறுத்தினேன் எனது தாயாரும் சிறியதாயும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டேன் என்கின்றார் ஹசீனாவின் மகன்
இருவரும் ஹெலிக்கொப்டரில் ஏறியதும் அவர்களை பாதுகாப்பு தரப்பினர் காத்திருந்த பங்களாதேஸ் விமானப்படையின் சி 130 ஹெர்குலிஸ் விமானத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அவர்கள் இந்தியாவின் திரிபுராவின் தலைநகரிற்கு அழைத்து செல்லப்பட்டனர் பின்னர் புதுடில்லி சென்றனர் என தான் கருதுவதாக தெரிவிக்கின்றார் மகன் சஜீப் வஜெட் ஜொய்.
இந்தியாவுடன் ஏற்கனவே தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர்,இந்தியா அவர்களின் இடைத்தங்கல் பயணத்திற்கு இணங்கியிருந்தது.
அவரை டாக்காவிற்கு ஹெலிக்கொப்டரில் அழைத்து சென்று பின்னர் விமானத்தில் அனுப்பினார்கள் என சிலர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் எப்படி பயணித்திருந்தாலும்,1.30 மணியளவில் ஹசீனாவும் அவருடன் பயணித்தவர்களும்,ஹெலிக்கொப்டரிலிருந்து புதுடில்லிக்கு பயணமான விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
விமானத்தி;ல் ஏற்றப்படுவதற்காக ஐந்து சூட்கேஸ்கள் காணப்படுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் காண்பித்துள்ளன.
அவர் விட்டுச்சென்ற பொருட்களை அவரது இல்லத்திற்குள் பிரவேசித்தவர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
அவர் விமானத்திலிருக்கும்போதே இது இடம்பெற்றது.
பலமணிநேரத்தின் பின்னர் அந்த விமானம் புதுடில்லியில் தரையிறங்கியது – அதிலிருந்த பயணிகளின் அடுத்த பயணம் எங்கு என்பது தெளிவாகவில்லை.
ஆனால் டாக்காவில் இணையசேவை மீண்டும் உயிர்பெற்றது.பங்களாதேஸ் முழுவதும் ஹசீனாவின் 15 வருட ஆட்சி முடிவிற்கு வந்ததை மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
ஒரு காலத்தில் ஜனநாயவாதியாக கருதப்பட்ட பெண் – பின்னர் பலரால் சர்வாதிகாரி என கருதப்பட்டவர், இணையத்தின் இருளின் மத்தியில் தப்பியோடியிருந்தார்
—Anbarasan EthirajanBBC News–Akbar HosseinBBC Bangla—
—தமிழில் – ரஜீபன்—