ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சங்கக்கார விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எ.ல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.
அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல். தொடர் குறித்து தற்போதே பல்வேறு பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டன.
அதோடு அடுத்த ஆண்டு ஐ.பி.எ.ல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற இருப்பதினால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்னதாக பல்வேறு அணிகளும் தங்களது அணிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது.
அந்தவகையில் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சீசனுக்கு முன்னதாகவே தங்களது அணிகளை சேர்ந்த தலைமை பயிற்சியாளர்களை அந்த பதவியில் இருந்து நீக்கியது.
அந்தவகையில் அடுத்த மாற்றமாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான குமார் சங்கக்கார அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவரது பதவிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து அணியின் வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளரான மேத்யூ மோட் அண்மையில் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அந்த அணியின் தலைவராக பட்லர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரான குமார் சங்கக்காரவை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மாற்ற பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் இன்னும் இதுகுறித்து சங்கக்காரவிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை என்றாலும் விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே மீண்டும் அவர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.