ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் வாக்குகளாகத் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ளதால் அதனைக் கவர்வதற்காக ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு தமிழர் மனங்களைக் கவர வடக்கிற்கும் கிழக்கிற்கும் பறந்து திரிந்து வருகையில், ‘வெண்ணெய் திரண்டுவரும் நிலையில், தாழியை உடைத்த கதை ‘‘யாக ரணில் விக்ரமசிங்கவுக்கு தன்னை அறியாமலே பெரிய ஆப்பாகச் செருகியுள்ளார் கருணா அம்மான்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண விசேட கட்டளைத் தளபதியாக இருந்த நிலையில், 2003இல் அந்த அமைப்பிலிருந்து வெளியேறிய கேணல் கருணா அம்மான் என அழைக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு கிரானை சேர்ந்த விநாயகமூர்த்தி முரளிதரன் காட்டிக்கொடுப்பினதும் துரோகத்தனத்தினதும் அடையாளமாகவே தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் மக்களினால் இன்றுவரை பார்க்கப்பட்டு வருகின்றார்.
2003இல் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து ‘‘விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தருவதில்லை, கிழக்குப் போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாகப் பலியிடப்பட்டனர் என்று புலிகளின் தலைமை மீது குற்றம்சாட்டி பிரதேசவாதக் கருத்தை முன்வைத்து பிரபாகரனுக்கும் தமிழ் மக்களுக்கும் போராட்டத்தில் போராடிக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கும் துரோகம் செய்து விட்டு வெளியேறினார்.
பின்னர் அரசியல் ஆதாயங்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ அரசினால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு, பின்னர் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு பிரதி அமைச்சராகவும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராகவும் இரு தடவைகள் பதவிவகித்து மஹிந்த அரசின் தீவிர விசுவாசியாகவே செயற்பட்டு வந்தார். அதன் பின்னர் தனது மாகாணமான கிழக்கு மாகாணத்திற்குத் திரும்பிய கருணா அம்மான் ‘‘தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்’’ எனும் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி அதன் தலைவராகத் தன்னை அறிவித்துக்கொண்டு இலங்கை அரசின் ஆதரவாளராகச் செயல்படத் தொடங்கினார்.
எனினும், ஒரு கட்டத்தில் ராஜபக்ஷ தரப்புக்கள் கை விடவே தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அவருக்கு அக்கட்சியின் உபதலைவர்களில் ஒருவராகப் பதவி வழங்கப்பட்டது.
சிங்கள அரசியல்வாதிகளிடம் சரணடைந்த பின்னர், அவர் சிங்களவர்களையும் காட்டிக்கொடுத்து துரோகம் செய்யத் தொடங்கினார். இதில் அவர் முதலில் காட்டிக்கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவை. மீள்குடியேற்ற பிரதியமைச்சராக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் இருந்தபோது ஒரு தடவை அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘‘சுஜீவ சேனசிங்க எம்.பி. எப்பொழுது பார்த்தாலும் என்னுடைய பெயரை பாராளுமன்றத்தில் குறிப்பிடும்போது, ‘கருணா அம்மான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளார்’, ‘கருணா அம்மான் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்துள்ளார்’ என்றெல்லாம் குறிப்பிடுகிறார். ஆம்! அது மிகவும் சரியானது.
சிரேஷ்ட எம்.பிக்களான ஜோன் அமரதுங்க லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இங்கு அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வரலாற்றில் இலங்கையில் என்ன நடந்தது என்பது பற்றித் தெளிவாகத் தெரியும். உதாரணமாக 1989இல் இந்திய இராணுவத்தினர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் 350 விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே எஞ்சி இருந்தனர். ஏனையோர் அனைவரும் இறந்தும் இயக்கத்தினை விட்டும் சென்றுவிட்டனர்.
அப்போது ஆட்சியிலிருந்த ஜனாதிபதியாக பிரேமதாச விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு மிகவும் பலமாகக் காணப்பட்டார். அந்நேரத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை அவர் எமக்கு வழங்கியிருந்தார்.
ஆயுதங்களை மட்டுமன்றி, கோடிக்கணக்கான பண பலத்தினையும் அவரே எமக்கு வழங்கியிருந்தார். அவரது உதவியினால் மட்டுமே 350 ஆகக்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் தொகை 3 மாதத்தில் மட்டும் 6,000 ஆக உயர்ந்தது.
ஆகவே தான் நான் கூறுகிறேன். புலிகள் பற்றிக் கதைக்கும் போது, எனது பெயரை நீங்கள் சேர்க்கத் தேவையில்லை. அவ்வாறு நீங்கள் எனது பெயரை சேர்ப்பீர்களேயானால் நான் இவ்வாறாக ஒவ்வொரு ரகசியத்தினையும் வெளிக்கொண்டு வருவேன்’’ என்று கூறி ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்திருந்தார்.
மஹிந்தவின் ஆதரவிலிருந்த கருணா அம்மானை ராஜபக்ஷக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டத்தொடங்கியபோது, கருணா அம்மானை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனா தனது கட்சியில் இணைத்துக் கொண்டதுடன், அவருக்குக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராகவும் பதவி வழங்கினார், ஆனால், சிறிதுகாலம் அதிலிருந்து விட்டு மைத்திரிபாலவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டு அதிலிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், திடீரென 2020இல் பிரதமராகவிருந்த மஹிந்தவின் மட்டு. – அம்பாறை ஒருங்கிணைப்பாளராகக் கருணா அம்மான் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருவதால் ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க , சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து பிரசாரங்களில் ஈடுபட்ட நேரம் வெளியே வந்த கருணா அம்மான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தான் ஆதரிப்பதாகக் கூறி நிகழ்வொன்றில் பேசுகையில்.‘‘விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து என்னை வெளியில் அழைத்து வந்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் .அவர்தான் என்னைக் கொழும்புக்கு வரவழைத்தார்.
2003இல் நாங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பொழுது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து என்னைப் பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்துச் சென்றவர்கள் அலிசாஹிர் மௌலானாவும், அன்வர் ஹாஜியாரும்தான். அன்வர் ஹாஜியாரின் வாகனத்தில் தான் நான் வந்தேன். அந்த இருவராலுமே நான் அன்று காப்பாற்றப்பட்டேன், இந்த உண்மை இப்போது வரை யாருக்கும் தெரியாது. பலரும் மஹிந்த தான் பிரித்தார் கோட்டாபய தான் அழைத்தார் என்று கூறுகின்றனர். அது தவறு. என்னைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியே வரவழைத்தவர் ரணில் விக்ரமசிங்க தான் என்று கூறி ரணில் விக்ரமசிங்க, அலிசாஹிர் மௌலானா , அன்வர் ஹாஜியார் ஆகியோ ரையும் காட்டிக்கொடுத்து அவர்களுக்கும் துரோகம் செய்துள்ளார் .
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் வெளியேறியபோது, ‘‘விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தருவதில்லை, கிழக்குப் போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாகப் பலியிடப்பட்டனர்” என்று புலிகளின் தலைமை மீது குற்றம்சாட்டி பிரதேசவாதக் கருத்தை முன்வைத்து தன்னை நியாயப்படுத்தினார். தற்போது விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்தி தன்னை பிரித்தது ரணில் விக்ரமசிங்க தான் என்பதைக் கருணா அம்மானே பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
கருணா அம்மானை விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரித்தெடுத்தது ரணில் விக்ரமசிங்க என்பதனை அன்றே தெரிந்து கொண்டதனால்தான் அப்போது நடந்த தேர்தலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பகிஷ்கரித்து ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்திருந்தன.
அந்த தேர்தலில், மஹிந்த வெற்றிபெற்ற நிலையில், எதிர்கட்சித் தலைவராகப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ‘‘ரணில் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறி சிங்களவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. ரணில் ஒரு அரசியல் குள்ளநரி என்று கூறி விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களை எனக்கு வாக்களிக்க விடவில்லை. இதில் விடுதலைப் புலிகள் என்னைப் புரிந்து கொண்டளவுக்கு சிங்கள மக்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே எனது கவலை’’ என்று கூறியிருந்தார்.
தற்போது ஒரு தேர்தல் காலம். ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. அதற்கான வாக்கு வேட்டைகளுக்காக ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இதில் தாம் வெற்றிபெறத் தமிழ் மக்களின் வாக்குகள் பிரதானம் என்பதனால் அவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று உறுதி மொழிகளை வாரிவழங்கி வருகின்றனர்.தமிழ் மக்களைக் கவர பல்வேறு பிரயத்தனங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான தேர்தல் பரபரப்பு நேரத்தில், ‘‘விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து என்னை வெளியில் அழைத்து வந்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான். அவர்தான் என்னை கொழும்புக்கு வரவழைத்தார். இந்த உண்மை இப்போது வரை யாருக்கும் தெரியாது. பலரும் மஹிந்த ராஜபக்ஷ தான் பிரித்தார் கோட்டாபய ராஜபக்ஷதான் அழைத்தார் என்று கூறுகின்றனர். அது தவறு என்னைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியே வரவழைத்தவர் ரணில் விக்ரமசிங்க தான்’’ எனக் கருணா அம்மான் நேரம், காலம் தெரியாமல் காட்டிக்கொடுத்துள்ளதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான தமிழர் வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஜனாதிபதித் தேர்தலில் கருணா அம்மானைப் பிரித்த குற்றத்திற்காக விடுதலைப்புலிகளினால் தோற்கடிக்கப்பட்டவரான ரணில் விக்ரமசிங்கவுக்கு, தற்போது அதனைப் பிரிந்து வந்த கருணா அம்மானே பகிரங்கமாகக் கூறியுள்ள நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அது பாதகமாகவே அமையும்.இதனால் அப்போதைய நிலையில் ‘‘விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானைப் பிரித்தது நான்தான் ‘‘என சிங்கள மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து மகிழ்வடைய முடியாத துரதிர்ஷ்ட நிலையிலிருந்த ரணில் விக்ரமசிங்க,தற்போது அந்த விடயத்தைக் கருணா அம்மானே பகிரங்கமாகக் கூறியுள்ள நிலையிலும், அதனால் மகிழ்வடைய முடியாத துரதிர்ஷ்ட நிலையில்தான் உள்ளார். இந்த தேர்தல் காலத்தில் இவ்விடயத்தை கருணா அம்மான் பகிரங்கமாகக் கூறி உறுதிப்படுத்தியதை ரணில் விக்ரமசிங்க கூட விரும்பியிருக்க மாட்டார்.