இதுவரை 27 நாடுகளிலிருந்து LGBTQ+ விளையாட்டு வீர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் திருநர் சமூகத்தினர் பற்றிய செய்திகள் எப்போதும் கவனம் ஈர்ப்பவை. இந்த ஆண்டு, தங்களை LGBTQ+ சமூகத்தினர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட 191 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 186 LGBTQ விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 27 நாடுகளிலிருந்து LGBTQ+ விளையாட்டு வீர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவிலிருந்து 32, பிரேசில் நாட்டிலிருந்து 30, ஆஸ்திரேலியாவிலிருந்து 22, ஜெர்மனி நாட்டிலிருந்து 13, ஸ்பெயின் நாட்டிலிருந்து 12, பிரிட்டன் மற்றும் கனடாவிலிருந்து தலா 11, நெதர்லாண்டில் இருந்து 10, ஃபிரான்ஸிலிருந்து 9, நியூஸிலாந்திலிருந்து 7, ஆப்பிரிக்காவிலிருந்து 4, ஆசியாவிலிருந்து 3 பேர் என… LGBTQ+ விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலகளவில், இன்னும் 67 நாடுகளில் திருநர் சமூகத்தினர் தங்களை வெளிப்படையாக அறிவித்துக்கொள்வதை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த நாடுகளைச் சேர்ந்த LGBTQ+-வினர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தாலும் தங்கள் பாலினம் பற்றி வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பார்கள். இருப்பினும், ஒலிம்பிக் போட்டிகளில் LGBTQ+-வினர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது என்பது, அது பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
உலக நாடுகளின் மொத்த கவனமும் குவிந்துள்ள ஒலிம்பிக் போட்டியில், திருநர் சமூகத்தினர் பங்கேற்பது அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான சம உரிமையையும் முழுமையான புரிந்துணர்வையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், `நமது ஒலிம்பிக் உலகில், நாம் அனைவரும் ஒன்று’ என்ற கருத்தைப் பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
1900-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்குபெற்ற ஒரு தடகள வீரர், LGBTQ+ பிரிவைச் சேர்ந்தவர் என்று பின்னர் அறியபப்ட்டார். இவரே, ஒலிம்பிக்கில் முதன்முதலில் பதக்கம் வென்ற திருநர் சமூகத்தினர். அதேபோல 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வென்ற ஒரு தடகள வீரரும், ‘இன்டெர்செக்ஷுவல் (Intersexual)’ என்று பின்னர் அறியப்பட்டார். 1976-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க தடகள வீரர் கைடலின் ஜென்னர், 2015-ம் ஆண்டு தான் ஒரு திருநங்கை என்று வெளிப்படுத்தினார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மிட்சாம் 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 10 மீட்டர் பிளாட்பார்ம் டைவிங் பிரிவில் தங்கம் வென்றார். இவர் 2008-ம் ஆண்டு, தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்று அறிவித்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த டாம்டேலி 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் டைவிங் போட்டியில் ஆண்கள் பிரிவில் தனது முதல் பதக்கத்தை வென்றார். தொடர்ந்து, அமெரிக்க திரைப்பட எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான டஸ்டின் லான்ஸ் பிளாக் என்பவருடன் தான் உறவில் இருப்பதாக 2013-ம் ஆண்டு தனது யூடியூப் சேனலில் அறிவித்தார்.
திருநர் சமூகத்தினர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, கரியர் நிறைவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பாலினத்தை வெளிப்படையாக அறிவிக்கும் நிலை மாறி, போட்டிகளில் பங்கேற்கும்போதே தங்களின் பாலினம் பற்றி வெளிப்படையாக அறிவிக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சி.
திருநர் சமூகத்தினருக்குக் கிடைக்க வேண்டிய சமூக ஆதரவுக்கான தூரம்… இன்னும் அதிகம் இருக்கிறது!