வயநாடு நிலச்சரிவு? – விதிகள் சொல்வதென்ன?!

0

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்… 150-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தப் பெருந்துயரம் தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கேரளா முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் மேப்பாடி பகுதியில் அமைந்திருக்கும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை ஆகிய கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணில் புதைந்தன.

நள்ளிரவில் மக்கள் தூக்கத்தில் இருந்த வேளையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், காவல் படையினர், மீட்புக்குழுவினருடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். புதையுண்டவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் மோப்பநாய்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கேரளா அரசு அறிவித்திருக்கிறது. அரசு கட்டடங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன.

வயநாடு துயரத்தைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் பினராயி விஜயன். அப்போது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுகட்டமைப்பு செய்யவும், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனைவரும் பங்களிக்குமாறு பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, ‘தற்போதைய சூழலில், கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’ என்று உறுதியளித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலச்சரிவு பாதிப்புகள், மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. பூகம்பம், சூறாவளி, சுனாமி, வெள்ளம் ஆகியவற்றைப் போலவே, நிலச்சரிவும் ஓர் பேரழிவாகும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, இந்தியாவின் பேரிடர் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
தேசியம், மாநிலம், மாவட்டம் என மூன்று நிலைகளில் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிறுவப்பட்டிருக்கிறது. முதல்வர் தலைமையில் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுகிறது.

Also Read
`மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்கு அதிக நன்மையா?’ – கர்நாடக அரசின் புதிய ஸ்டேட்மென்ட் சொல்வது என்ன?
`மேக்கேதாட்டூ அணையால் தமிழகத்துக்கு அதிக நன்மையா?’ – கர்நாடக அரசின் புதிய ஸ்டேட்மென்ட் சொல்வது என்ன?
மாநிலத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை ஒரு பேரிடர் பாதித்தால், அது அதி தீவிரம் கொண்ட பேரிடராக வகைப்படுத்தப்படலாம் என்கிறார்கள். ஒரு பேரழிவின் அளவு, அதற்கு தேவைப்படும் உதவியின் அளவு, சிக்கலைத் தீர்ப்பதற்கான அரசின் நிவாரண நடவடிக்கைகள், உயிரிப்புகள், பாதிப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒரு பேரிடர், அதிதீவிரம் கொண்ட பேரிடர்’ என்று வகைப்படுத்தப்படும்.

மோடி
மோடி
வயநாடு நிலச்சரிவைப் பொருத்தளவில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன. ஆகவே, உயிரிழப்புகளும் அதிகம், பொருளாதார ரீதியான பாதிப்புகளும் அதிகம் என்ற நிலையில், இதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன.

தேசியப் பேரிடர் என்று அறிவிக்கப்பட்டால், மத்திய அரசிலிருந்து கணிசமான அளவுக்கு நிதியுதவி உள்ளிட்ட உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. எனினும் தேசிய பேரிடர் என்ற ஒன்றே கிடையாது எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு வந்த போது மத்திய அரசு சொன்ன பதிலும், தேசிய பேரிடர் என்று அறிவிக்கும் சிஸ்டமே இங்கு இல்லை என்றுதான் தெரிவித்திருக்கிறார்கள். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் அதற்கான விதிகள் எதுவும் இல்லை.

தற்போதைய சூழலில் கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார் பிரதமர் மோடி. அது தவிர இது தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை, காரணம் கடந்த காலங்களில் அப்படி நடந்ததற்கான எந்த சான்றும் இல்லை.!

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights