சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.
இதில் T20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றுப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்துள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற T20 போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் சொதப்பியிருந்தனர். குறிப்பாக களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலும் மிக மோசமாக செயற்பட்டிருந்தனர்.
மூதல் மூன்று வீரர்களை தவிர்ந்த ஏனைய வீரர்கள் எவரும் துப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. இதனால் வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை சந்தித்திருந்தது.
மூன்றாவது T20 போட்டியில் முழு வெற்றியும் இலங்கை அணி கையில் இருந்த போதிலும், இறுதி நேரத்தில் மோசமான துடுப்பாட்டம் காரணமாக அந்த வெற்றியும் இந்திய அணிக்கு கிடைத்துவிட்டது.
இதனால் இலங்கை அணி ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தனர். இறுதிப் போட்டியின் போது ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்கு போத்தல்களையும் வீசத்தொடங்கியிருந்தனர்.
மேலும், இலங்கை அணி வீரர்களை கடுமையாக வார்த்தைகளில் திட்டித்தீர்த்தனர். இது குறித்த காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
குறிப்பாக அண்மையில் நடந்து முடிந்த பெண்களுக்கான ஆசியக் கிண்ண தொடரில் இலங்கை மகளிர் அணி இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக மகுடம் சூடியிருந்தது.
இந்த தொடர் முழுவதும் இலங்கை மகளிர் அணியினர் பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் பிரகாசித்து தொடர் முழுவதும் தோல்வியாத அணியாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.
இந்த வெற்றிக்கு ஜனாதிபதியும் வாழ்த்து கூறியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் இலங்கை ஆடவர் அணியின் மோசமான தோல்விக்கு ரசிகர்கள் அணி வீரர்களை கேலிசெய்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதை காண முடிகின்றது.
ஆடவர் அணியில் மூதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களை தவிர்ந்த ஏனையவர்களை இலங்கை மகளிர் அணியில் இருந்து தெரிவுசெய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இந்த தொடரில் வெற்றிபெற்று ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு இலங்கை அணி பரிசளிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.