நடப்பு T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
தென்னப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
177 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது.
ஒரு கட்டத்தின் போட்டியை முழுமையான தன்வசம் வைத்திருந்த தென்னாப்பிரிக்கா, 18வது ஓவரின் பின்னர் தடுமாறியிருந்தனர். அங்கிருந்து வெற்றி இந்தியாவின் பக்கம் திரும்பியது.
இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு எடுபட்டிருந்தது. கடந்த போட்டிகளில் சுழல்பந்து வீச்சு கைகொடுத்திருந்த நிலையில், இன்றையப் போட்டியில் வேகப்பட்டு வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர்.
அர்ஷ்தீப், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா என மூன்று பந்து வீச்சாளர்களும் இணைந்து முக்கிய ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா பந்து வீசியிருந்தார். எனினும் அந்த ஓவரில் எட்டு ஓட்டங்களை மட்டுமே விட்டுகொடுத்த அவர் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
கிளாசனின் அதிரடியான துடுப்பாட்டத்தின் உதவியுடன் தென்னாப்பிரிக்கா கிட்டத்தட்ட வென்ற போட்டியை இந்திய பந்து வீச்சாளர்கள் மீட்டெடுத்தனர்.
இந்தப் போட்டியின் கிளாசன் 27 பந்துகளில் 52 ஓட்டங்களை குவித்திருந்தார். இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது. 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து இந்திய 176 ஓட்டங்களை குவித்திருந்தது.
கடந்த போட்டிகளில் ஓட்டக்குவிப்பில் தடுமாறிய விராட் கோலி இந்தப் போட்டியில் நிதானமாக துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.
இவரைத் தவிர அக்சர் பட்டேல் 47 ஓட்டங்களை குவித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மஹராஜ், ஆன்டிச் நோர்க்யா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியா அணி 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.