வருமானம் தரும் வான்கோழி!

0

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக விளங்குகிறது. பலர் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். இயற்கை விவசாயத்திற்கு கால்நடையின் பங்கு அவசியமாக இருப்பதால் கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஆடு, மாடு வளர்பைப் போல கோழி வளர்ப்பிலும் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் நாட்டுகோழிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதை பலர் விரும்பி வளர்க்கிறார்கள். அதில் நல்ல லாபமும் பார்க்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் நாட்டுக்கோழிக்கு இருக்கும் வரவேற்பைப் போல மருத்துவக்குணம் நிறைந்த கின்னிக்கோழி, வான்கோழிகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இந்த மாவட்டத்தின் சில பகுதிகளில் வான்கோழி இறைச்சிக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. வட மாவட்டங்களில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் வான்கோழி பிரியாணி விற்பனை சூடுபிடிக்கும். இதனை மக்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்வார்கள். அதேபோன்ற சூழல் தற்போது குமரி மாவட்டத்திலும் தொடங்கி இருக்கிறது. ஒரு சில கோழி இறைச்சிக் கடைகளில் வான்கோழி இறைச்சியும் நன்றாக விற்பனை ஆகிறது. ஆனால் இந்தக் கோழிகள் பெரும்பாலும் வேறு மாவட்டங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் வான்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். வான்கோழி இறைச்சிக்கு மக்கள் மத்தியில் உருவான வரவேற்பைப் பார்த்து நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கக்கன்புதூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வான்கோழி வளர்ப்புத் தொழிலில் குதித்திருக்கிறார். 30 கோழிகளில் தொடங்கிய இவரது வான்கோழி வளர்ப்புப் பயணம் தற்போது 100 கோழி என உயர்ந்திருக்கிறது. மேலும் இதை அதிகரித்து ஒரு பண்ணையாகவும் திட்டுமிட்டு வரும் சுரேஷைச் சந்தித்தோம்.

தென்தாமரைக்குளம் பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறேன். இதுதவிர வேறு சில இடங்களில் வேலை செய்வேன். இதில் கிடைக்கும் வருமானம்தான் எனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தது. வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். அப்போது பலரிடம் ஆலோசனை கேட்டேன். கடைசியாக வான்கோழி வளர்க்கலாம் என முடிவு செய்தேன். தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகை சமயங்களில் வான்கோழி இறைச்சி அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த 3 வருடத்திற்கு முன்பு வான்கோழி வளர்ப்பில் இறங்கினேன்.

முதலில் வான்கோழிக் குஞ்சுகளை எப்படி வாங்குவது? எங்கு வாங்குவது என எதுவும் தெரியாமல் இருந்தது. சில நண்பர்கள் வழிகாட்டலுடன் ஈரோட்டில் இருந்து வான்கோழிக் குஞ்சுகளை வாங்கினேன். அங்கு ஒரு ஜோடி வான்கோழிக் குஞ்சு ரூ.800 என வாங்கினேன். ஆர்டர் கொடுத்தால் அவர்கள் நேரடியாக வந்து கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். வான்கோழிக் குஞ்சுகளைப் பெரும்பாலும் ஜனவரி மாதத்தில்தான் வாங்குவது நல்லது.

தீபாவளி பண்டிகைக் காலம் வரை வளர்த்துவிட்டு அதனை விற்பனை செய்ய வசதியாக இருக்கும். அப்போது நான் 30 வான்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்தேன். குஞ்சுகளுக்கு சுமார் 2 மாதங்கள் வரை கோழித்தீவனத்தை தீனியாகக் கொடுப்பேன். அதனைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் எனது வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வேன். தோப்புப் பகுதி மற்றும் சாலையோரம் உள்ள மண்ணில் கிடைக்கும் புழு, பூச்சிகளை வான்கோழிக் குஞ்சுகள் கொத்தித் தின்னும். அவ்வளவுதான், இதைப் பராமரிப்பதற்காக பெரிய அளவுக்கு மெனக்கெடத் தேவையில்லை.

நான் வான்கோழி வளர்ப்பதை அறிந்த சுற்றுவட்டார மக்கள் தீபாவளி பண்டிகையின்போது வீட்டிற்கு வந்து வாங்கிச் சென்றார்கள். முதல் வருடம் 30 வான்கோழி வளர்த்தேன் அல்லவா? அதில் பெரும்பாலானவை பெட்டைக் கோழிகள். இதனால் எனக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. பெட்டைக்கோழி எடை குறைவாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு 2வது வருடம் ஆண் கோழிக்குஞ்சுகளை அதிகமாக வாங்கி வளர்த்தேன். இரண்டாவது வருடத்தில் மொத்தம் 60 வான்கோழிகளை வளர்த்து விற்றேன். தற்போது 3வது வருடமாக 100 வான்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து வருகிறேன். சில குஞ்சுகள் திருடு போய்விட்ட நிலையில் என்னிடம் தற்போது 78 வான்கோழிகள் உள்ளன. இதில் 10 வான்கோழி மட்டுமே பெட்டைக் கோழிகள். மற்றவை ஆண் கோழிகள். வழக்கம்போல ஜனவரி மாதத்தில் குஞ்சு வாங்கி வளர்த்து வருகிறேன். தற்போது ஒவ்வொரு கோழியும் சுமார் 5 கிலோ எடை அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் 5, 6 மாதங்கள் வரை இருக்கிறது. அதற்குள் இந்தக் கோழிகள் நல்ல எடையுடன் வளர்ந்து விடும். குறிப்பாக ஆண் கோழி 15 கிலோ வரை வளரும். பெட்டைக்கோழி 12 கிலோ வரை வளரும்.

பெண்கோழிகள் முட்டையிடத் தொடங்கினால் தொடர்ச்சியாக 90 நாட்கள் வரை முட்டையிடும். முட்டையிடும்போது வான்கோழிகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டகையில் இடாது. அவற்றை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் இடங்களில்தான் முட்டையிடும். அந்த முட்டைகளைத் தேடிப் பார்த்து எடுத்து வருவேன். வான்கோழி முட்டையில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது. இழுப்பு (மூச்சுவிடுவதில் சிரமம்) நோய் உள்ளவர்களுக்கு இந்த முட்டை ஒரு அருமருந்தாகப் பயன்படுகிறது. இதனால் பலர் என்னைத் தேடி வந்து முட்டைகளை வாங்கிச் செல்கிறார்கள். கடந்த வருடம் ஒரு முட்டை ரூ.25க்கு விற்பனை செய்தேன். ஆனால் இந்த வருடம் ரூ.30க்கு விற்பனை செய்து வருகிறேன். மக்கள் அதிகளவில் கேட்கிறார்கள். தேவைக்கு ஏற்ப என்னால் கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறது. இப்போது தீபாவளி சமயத்தில் வான்கோழிகள் நன்றாக விற்பனை ஆகிறது. சிலர் முழுக் கோழியாக வாங்கிச் செல்கிறார்கள். முழுக் கோழியாக வாங்குபவர்களுக்கு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்கிறேன். இறைச்சியாக வாங்கினால் ரூ.600க்கு விற்பனை செய்கிறேன். கடந்த வருடம் 26 கோழிகள் ஒரே நாளில் விற்பனை ஆனது. அப்போது எனக்கு ரூ.40 ஆயிரம் கிடைத்தது. அடுத்த வருடம் 200 கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்க்க இருக்கிறேன். இன்னும் எனது வான்கோழி வளர்ப்பைப் பெரிதுபடுத்தி பண்ணை ஆக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறேன்’ என்கிறார்.
தொடர்புக்கு:
சுரேஷ்: 97515 98613.

மீதமாகும் உணவு

சுரேஷ் வளர்க்கும் வான்கோழிக் குஞ்சுகளை முதலில் 2 மாதம் வரை கொட்டகையில் அடைத்து வைத்து கோழித் தீவனம் வழங்குகிறார். அதன்பிறகு திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் மிச்சமாகும் உணவுகளை வாங்கி வந்து கோழிகளுக்கு தீவனமாக வழங்கி வருகிறார்.

கண்நோய், மண்டைவீக்கம்

வான்கோழி வளர்க்கும்போது கோழிகளை கண்நோய், மண்டை வீக்கம் அதிகமாக பாதிக்கும். இதனை ஒரே இடத்தில் வைத்து வளர்க்கும்போது இந்த பாதிப்பு வரும். நான் காலை, மாலை நேரங்களில் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வதால், இந்த பாதிப்புகள் இதுவரை எனது வான்கோழிகளுக்கு வந்ததில்லை. கண்நோய் வரும்போது மட்டும் மெடிக்கலுக்கு சென்று அதற்கான சொட்டு மருந்தைக் கேட்டு வாங்கி வந்து, கோழியின் கண்களில் விடுவேன் என கூறுகிறார் சுரேஷ்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights