சின்னச்சாமியின் வயது இப்போது 70துக்கும் அதிகம். அவரின் தந்தை பெரியசாமி 20ஆம் நூறாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலியில் இருந்து மஸ்கெலியாவில் தேயிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்ய கங்காணி ஒருவரால் கூட்டி வரப்பட்டவர். அவரின் மகன் தான் சின்னசாமி.
“உலகில் எங்கும் இல்லாத வகையில் சிவ வழிபாடும், ஒளி வழிபாடும், பாத வழிபாடும் ஒருங்கே அமைந்துள்ளதால் தான் இந்த இடம் சிவன் ஒளி பாதம் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது” என்று தனது பழைய நினைவுகளை சின்னசாமி எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
உலகில் நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவில் அமைந்துள்ள சிவனொளிபாத மலை, இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளதுடன், “சிறிபாத” என சிங்கள மக்களாலும் “Adam’s Peak“ என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது. சிவனொளிபாத மலை என்பது அதன் வரலாற்றுக்கு மாறாக, பௌத்தர்களால் பெயர் மாற்றப்பட்ட அல்லது வேறுவிதமாகக் கூறப்பட்ட பல தளங்களில் ஒன்றாகும்.
கொழும்பிலிருந்து ஹட்டன் செல்லும் வீதியில் உள்ள கினிகத்தேனை, கரோலினா சந்தியிலிருந்து நோட்டன் பிரிட்ஜ், லக்சபான, மவுசாக்கல ஊடாக நல்லதண்ணி எனும் மலையடிவாரத்தை சென்றடைந்து, அங்கிருந்து கால்நடையாக படிகளில் ஏறி மலைக்கு செல்ல முடியும். இதுவே இந்த மலையை அடைய இலகுவான வழியாகும்.
அத்துடன், கொழும்பிலிருந்து இரத்தினபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள குருவிட்ட என்னுமிடத்திலிருந்து கிழக்கு நோக்கி எக்னெலிகொட, எம்புல்தெனிய, குருளுவான ஊடாக பாலபெத்தலே என்னுமிடத்தை அடைந்து அங்கிருந்து கால்நடையாக மலைக்கு செல்லவும் முடியும்.
“நான்கு மதத்தினரும் தத்தமது தெய்வங்களாக நினைத்து ஒற்றுமையாக வழிப்படும் சிவனொளிபாதமலை போன்ற இன்னொரு இடம் உலகில் எங்குமே இல்லை. கி.பி 399 – 412 காலப்பகுதியில் பௌத்த நூல்களைத் தேடி நேபாளம், இந்தியா, மற்றும் இலங்கைக்கு இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணம் மேற்கொண்ட சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவியான பாஹியான் ( Fa-hsien – கிபி 337 – கி. 422) , மற்றும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இப்னு பதூதா (Ibn Battuta-1304-1369) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா ஆகியோரின் குறிப்புகளில் சிவனொளிபாத மலை, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வழிபடும் இடமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. விஞ்ஞான அல்லது தொல்பொருள் ரீதியாக எந்தவித ஆதாரங்களும் இல்லாது இருந்தாலும், பலநூறு ஆண்டுகளாக இலங்கையின் உள்ள அனைத்து இன மக்களாலும் ஒற்றுமைடன் வழிபட்டு வரப்பட்ட சிவானொளிபாத மலை, பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத போக்கு காரணமாக திட்டமிட்ட பௌத்த மயமாக்களின் ஊடாக பிரச்சினைக்கு உரிய ஒன்றாக மாறி இருக்கின்றது.” என்கிறார் ஆய்வாளரும், எழுத்தாளரும், இலங்கையின் வரலாறு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு எழுதிவரும் ஊடகவியலாளர் என். சரவணன்.
இம்மலையில் புராதன காலத்தில் சிவனாலயம் அமைந்திருந்ததாகவும், லிங்க வழிபாடு நிலவிய காலத்திலிருந்து இம்மலையை இந்துக்கள் தமது புனித மலையாகக் கருதி வழிபட்டு வருவதாகவும் அங்குள்ள மக்களிடம் பேசும்போது அறியக்கூடியதாக இருந்தது.
சிவனுக்கு சூரிய வழிபாடு செய்வது என்பது இந்து மதத்தின் தொன்மையான வழிபாடாகும். இம்மலை உச்சியில் விசாலமான, மனித உருவிற்கு அப்பாற்பட்ட ஒரு பாதச்சுவடு காணப்படுகின்றது. இப்பாதத்தை இந்துக்கள் சிவனின் பாதச்சுவடு எனக்கருதி வழிபடுகிறார்கள். இதன் காரணமாக இது ‘சிவனடிபாதம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதேவேளை, அது இராவணனின் அடிச்சுவடு என்று சிலர் கூறினாலும் அதற்குப் போதிய ஆதாரம் இல்லை.
”ஆரம்பத்தில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக சிவனொளிபாதம் இருந்தபோதும் காலத்துக்குக் காலம் பௌத்தர்களின் ஆதிக்கத்தின் கீழும் இருந்துள்ளது. மீண்டும் இந்துக்களின் செல்வாக்கு மேலோங்கியும் காணப்பட்டுள்ளது. 1345 இல் அரேபிய யாத்திரிகரான இபின் பதூதா இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாதம் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆதிக்கத்தில் இந்து மதத்தின் செல்வாக்கு பெற்ற இடமாக இருந்துள்ளது. இபின் பதூதா மலையைத் தரிசிக்க ஆரியச் சக்கரவர்த்தியிடம் விருப்பம் தெரிவித்தபோது 15 பிராமணர்களையும், 4 யோகிகளையும், உதவிக்கு மேலும் 50 பேரையும் மன்னன் அவருடன் அனுப்பி வைத்ததாகவும், மலையில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் தான் கண்டதாகவும் இபின் பதூதா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.” என்கிறார் இலங்கையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம்.
பௌத்தமதம் இலங்கைக்கு அறிமுகமாவற்கு முன்பிருந்தே சிவனொளிபாத மலையில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். புத்தபகவான் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. இதில் முதல் தடவை இலங்கைக்கு வந்தபோது சிவனொளிபாதமலை இலங்கையின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியிருந்தது. இம்மலையில் மகாசுமன் எனும் தேவகுமாரன் இருந்ததாகவும் அவனுக்கு பௌத்த நெறிகளைப் போதிக்க வேண்டியே புத்தபகவானின் முதல் விஜயம் அமைந்திருந்தாகவும் பாளி நூல்கள் கூறுகின்றன.
எனினும், சிவனொளிபாத மலையிலுள்ள பாதம் புத்த பகவானுடையது அல்ல என்பது ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்ட முடிவாகும். ஏனெனில் புத்த பகவான் இலங்கைக்கு வரவில்லை என்பதே பல ஆய்வாளர்களின் ஏகோபித்த கருத்தாகவுள்ளது. புத்த பகவான் இந்திய கரையை ஒருபோதும் கடந்ததில்லை எனவும் இந்தியாவின் விந்திய மலைகளுக்கு தெற்கே ஒருபோதும் வரவில்லை எனவும் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். சமகால இந்திய நூல்களிலும் இலக்கியங்களிலும் புத்த பகவான் இந்தியாவிற்கு வெளியே சென்றமை பற்றிய எந்தக் குறிப்புக்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிவனொளிபாத மலையில் உள்ள மலைக் கடவுளை மகாயான பௌத்தர்களால் வணங்கப்பட்ட ‘சமந்த பத்திர’ எனும் தெய்வம் எனக் பேராசிரியர் பரணவித்தான குறிப்பிடுகிறார். அதேவேளை இக்கடவுள் ஓர் யக்ஷ தெய்வமாகிய சுமண எனவும், சுமண என்பதே “சமன்” எனும் தெய்வமாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமண எனும் பாளி சொல்லின் சமஸ்கிருத வடிவம் ‘யமன்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்த கி.மு 145-101 காலப் பகுதியில் சிவனொளிபாத மலையில் சிவ வழிபாடு நிலவியதோடு, இப்பகுதியில் தமிழர்கள் செறிந்து வாழ்ந்துள்ளமையும் தமிழர்கள் சிவனொளிபாத மலைக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளமையும் குறிப்புக்கள் மூலம் தெரிய வருகிறது.
“இம் மலையின் உச்சிக்குச் செல்வதற்கு மொத்தமாக ஏழு வழிகள் உள்ளன. இவ்வழிகளில் உள்ள இடப்பெயர்களில் பல பண்டைய காலம் முதல் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை இங்கு தமிழர்கள் வாழ்ந்தமையை உறுதி செய்கிறது. இரத்தினபுரி-குருவிட்ட வழியில் கிளிமலை, ஆண்டியமலை, ராமகல்லு, குங்குமம், ஊசிமலை, மோகினி அருவி, இராஜமலை ஆகிய இடங்களும், ஹட்டன் வழியில் நல்ல தண்ணி, சாமி மடம், காசி ஆறு, செம்மடம், உமைச்சாமி மடம், ஊசி மலை போன்ற இடங்களும் மலையைச் சுற்றிக் காணப்படுவதால் புராதன காலம் முதல் இப்பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்திருந்தமை இந்த இடப் பெயர்கள் மூலம் உறுதியாகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் ‘சிவனடி பாதம்’ என்ற பெயர் பிரசித்தி பெற்று விளங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இக்காலப் பகுதியில் சிவனொளிபாத மலையை அண்டிய பகுதிகளில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் சிவனடிபாதம் என்ற பெயரே எழுதப்பட்டுள்ளது. நோட்டன் பிரிட்ஜ், மஸ்கெலியா, ஹட்டன் போன்ற இடங்களில் ‘சிவனடி பாதம்’ என்ற பெயருடன் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை இன்றும் நாம் காணக் கூடியதாகவும் உள்ளது” என்று வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் கூறுகின்றார்.
இவ்வாறு நீண்ட காலமாக இலங்கையில் உள்ள மூவின மக்களாலும் ஒற்றுமையுடன் வழிபட்டு வந்த இந்த மலையை கடந்த சில வருடங்களாக சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
சிவனடிபாத மலை அடிவாரத்தில் பல வருடங்களாக மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகை 2018ஆம் ஆண்டு அகற்றப்பட்டு மும்மொழிகளிலும் கௌதம புத்த பகவானின் ஸ்ரீ பாதஸ்தானம் என்ற புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அமைக்கப்பட்டமை அப்போது சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருந்ததுடன் பிரச்சினைக்கு இதுவே அடிகோலிட்டுமிருந்தது.
ஆரம்பத்தில் அம்பகமுவ பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் இருந்த இந்தப் பகுதி, நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டபோது புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்ட நிலையில், பௌத்தர்களின் வணக்கஸ்தலமான சிவனடிபாதமலை சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் செல்வதை ஏற்க முடியாது என்றும் அப்போதைய அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவுப்படுத்த முடியும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்குப் பின்னர் முதன் முதலாக கூடிய மஸ்கெலியா பிரதேச சபை கன்னி அமர்வின் போது இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுமிருந்தது.
இதனையடுத்து, அன்றைய தினமான 2018 மார்ச் 28ஆம் திகதி புதிய பெயருடன் கூடிய பெயர்க்கல் அடிவாரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சிவனொளிபாதமலை இருப்பதை விரும்பாத சில இனவாத சக்திகளே இவ்வாறு திட்டமிட்டு இந்த வேலையை செய்திருக்கலாம் என்பதே அப்பகுதியை சேர்ந்த மக்களின் கருத்தாகும்.
இதனையடுத்து, முன்பு இருந்ததை போன்ற பெயர்பலகையை அங்கு மீண்டும் வைப்பதற்கு மஸ்கெலியா பிரதே சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த விடயம் சற்று தணிந்தது.
“இது மிகவும் உணர்வுபூர்வமாக அணுக வேண்டிய விடயம். புதிதாக மஸ்கெலியா பிரதே சபை ஸ்தாபிக்கப்பட்ட தினமன்றே இப்புதிய பெயர்க்கல் இங்கு வைக்கப்பட்டது. இது குறித்து நான் அப்போது அரசாங்க அதிபரிடம் வினவிய போதும் அது குறித்து தனக்கு எவரும் அறிவிக்கவில்லையென்றே தெரிவித்தார். எமது மத உரிமையை விட்டுக்கொடுக்க முடியாத, அதே நேரம் இவ்விவகாரத்தை மென்போக்கோடு அணுக வேண்டும். எனவே நாங்களும் அதனையே அப்போது செய்தோம்” என்றார், இந்த விடயம் குறித்து எம்முடன் பேசிய மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் செண்பகவல்லி.
இந்த பெயர் மாற்ற விவகாத்துக்கு பின்னர், சிவனொளிபாத மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் ஆலயத்தில் உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், இந்நிகழ்வுக்கு அதிகளவான தமிழ், சிங்கள பக்தர்கள் வருகை தந்துமிருந்தனர்.
“கடந்த காலத்தில் இனவாத மற்றும் மதவாத சக்திகள் சிவனொளிப்பாத மலையின் பெயரை மாற்ற முயற்சிகளை முன்னெடுத்தனர். இதனையடுத்து, இந்தியாவில் உள்ள இந்து மத குருக்களும் இங்குள்ள பெளத்த தேரர்களுடன் இணைந்து மலையடிவாரத்தில் சிவனின் சிலையை பிரதிஷ்டை செய்தோம். இப்போது படிப்படியாக சிவனொளிப்பாத மலை அடிவாரம் என்ற பெயரை இப்பகுதி பெற்றுள்ளது. இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் மதவாதிகள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளின் போது, மக்கள் மத்தியில் மேலும் முரண்பாடுகள் ஏற்படாதவாறு நாம் செயற்பட வேண்டும்” என, இந்த விடயம் குறித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் கூறுகின்றார்.
எது எவ்வாறாக இருந்தாலும், “சிவனொளிபாதமலை” என்கிற பெயர் இலங்கைச் சூழலில் மாத்திரமல்ல தமிழர்கள் மத்தியில் இருந்தும் அழிந்துபோய் “ஸ்ரீ பாத” என்று அழைக்கிற நிலைபெற்றுள்ளதை தற்போது காண முடிகிறது. “ஸ்ரீ பாத” மட்டுமே அதன் பெயர் என்று நிலைநிறுத்தும் சிலரின் இலக்கு சாத்தியப்பட்டிருக்கிறது என்றே இதனை எடுத்துக்கொள்ள முடியும்.
“உலக மத ஒற்றுமைக்கே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவந்த ஒரு பிரதேசம் ஒரு மதத்தவர் மாத்திரம் சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டதற்கு அரச இயந்திரம் வழங்கி வரும் ஆசீர்வாதமும், நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதமும் அடிப்படையான காரணங்கள். இந்த சக்திகளை எதிர்கொள்ளும் வலிமை ஏனையோருக்கு இல்லாமல் போனதும் அதே காரணங்கள் தான்” என்கிறார். ஆய்வாளர் என்.சரவணன்.
இத்தனை காலம் மத ஒற்றுமைக்கு உதாரணமாக இருந்த சிவனொளிபாதமலை இனிவரும் காலங்களில் “ஸ்ரீ பாத” என மத முரண்பாடுகளின் முன்னுதாரணமாக மட்டும் ஆகிவிடாமல் பாதுகாப்பது அனைத்துத் தரப்பினரின் கடமையாகும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு, தமிழ்த் தரப்பின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தரப்பின் பேரம் பேசும் சக்தி இல்லாமல் செய்யப்பட்ட நிலையில், சிங்கள பொளத்தமயமாக்கல் என்பது தீவிர நிலையை நோக்கி முன்னேற்றமடைந்தது.
இவ்வாறான பேரினவாத போக்கானது அரசியல் நிலைமைகளின் காரணமாக தற்போது சற்றே தணிந்த நிலையில் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் சற்று உக்கிரமடைந்த இந்த நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் குறைந்து உள்ளதுடன், மென்மையான போக்கு பின்பற்றப்படுகின்றது.
“1970 காலப்பகுதியில் சுமார் 260க்கும் மேற்பட்ட இடங்கள் இலங்கையில் தொல்பொருள் உள்ள இடங்களாக வரைபடமொன்று தாயரிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சில இடங்களில் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலை உள்ளிட்ட இவ்வாறு ஒரு சில இடங்களில் முன்னெடுக்கப்படும் பொளத்த மயமாக்கல் நடவடிக்கை நாட்டில் தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், 260க்கும் மேற்பட்ட இடங்களை பொளத்த மயமாக்கின்றால் இலங்கையின் நிலை என்னவாகும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
“காலா காலமாக தமிழர்கள் வழிபடும், சிங்கள மக்கள் சொந்தம் கொண்டாடும் இடங்களில் முன்னர் பௌத்தம் இருக்கவே இல்லை என தமிழ் மக்கள் வாதிடுவது பிழையானதாகவே இருக்கும். ஏனென்னால் தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சமணம், வைணவம், பெத்தளம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றியமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. எனவே, பௌத்தம் என்பது பொதுவானது. தமிழர்களும் வழிப்பட்டு உள்ளனர். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், சிங்கள பௌத்தம் என்று தனியுரிமை கொண்டாடும் போது அங்குதான் பிரச்சினை தீவிரமாகின்றது. ஏனென்றால் தமிழ் மக்கள் காலம் காலமாக வழிபட்டு வந்த இடங்களை திடீரென பறிக்க முயல்வது பாரிய பின்விளைவுகளுக்கு வழியினை ஏற்படுத்தி விடும்.” என்கிறார் ஆய்வாளர் என்.சரவணன்.
எல்லாள மன்னனுடன் யுத்தத்துக்கு புறப்பட்ட துட்டகைமுனு மன்னன், கதிர்காமத்தில் உள்ள முருகனிடம் வழிபாடு செய்ததுடன், யுத்தத்தில் வெற்றிப்பெற்றால் கோவில் கட்டுவதாக நேர்த்திக்கடன் செய்து சென்றதாகவும், பின்னர் யுத்தத்தில் வென்று விகாரைகள் கட்டியதுடன், கதிர்காம கந்தனுக்கு கோவில் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு பார்க்கும் போது அந்த காலப்பகுதியில் இருந்து சிங்கள மக்களும் கதிர்காம முருகனை வழிப்பட்டு வந்துள்ளதாக தெரிகின்றது. எனினும், எல்லாள மன்னனே கதிர்காம முருகனிடம் நேர்த்திக்கடன் வைத்தாக கூறப்படுவதால் அதற்கு நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே அங்கு மக்கள் முருகனை வழிப்பட்டு வந்திருக்க வேண்டும். எனவே அங்கு தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்துள்ளதாக பார்க்க முடியும். அத்துடன், அங்கு தமிழர்கள் முன்னெடுத்த வழிபாடுகள் இல்லாதொழிக்கப்பட்டு முழுமையாக சிங்கள பௌத்தம் ஆக்கிரமித்துள்ளதால்தான் சிக்கலான நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தமிழ் மக்கள் கதிர்காமத்துக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். அதிலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இருந்து காட்டு வழியில் கால்நடையாக சென்று கதிர்காம கந்தனை வழிப்பட்டு வரும் பாரம்பரியம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வடக்கு – கிழக்கில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றவும்¸ தமிழர்கள் தமது நிலங்களுக்கு செல்வதை தடுக்கவும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
“நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள், தொல்பொருள் இட ஒதுக்கீடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், வனப்பகுதி மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் என்பவற்றின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்பானது 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது”என இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்து ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுவரும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஓக்லாந்து நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
அறிக்கைக்கான ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து செயற்பட்ட ஓக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டல், ”தமிழர்கள் அவர்களது பரம்பரை நிலங்களை பயன்படுத்த அனுமதி மறுப்பது, கிராமங்களின் பெயரை மாற்றுவது, தேவாலயங்கள் மற்றும் இந்து கோவில்களை பௌத்த விகாரைகளாக மாற்றுவது¸ சிங்கள மேலாண்மையை நிலைநாட்டும் நினைவுச்சின்னங்களை நிறுவுவது போன்றவை தமிழர் வரலாறு மற்றும் கலாசாரத்தை அழிக்கும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“மிகவும் பழமைவாய்ந்த தமிழர்களின் அடையாளமான திருகோணேஸ்வரத்தை அரசியலுக்குள் புகுத்தி அனைத்து அரசியல்வாதிகளும் சின்னபின்னமாக்கி உள்ளதாக” திருகோணமலையை சேர்ந்த சமூக ஆர்வலரான பொன்னுதுரை சற்சிவானந்தம் தெரிவிக்கின்றார்.
”2007ஆம் ஆண்டுக்கு பிறகு, இங்குள்ள சிங்கள அரசியல்வாதிகளும், அரசாங்க தரப்பினரும் இரத்தினபுரியில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு தவறான பின்னூட்டங்களளை வழங்கி தொழில்முயற்சியாளர்களாக அழைத்து வந்து தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளனர். திருகோணமலையில் எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அதனை விடுத்து அவர்களை இந்த புனிதமான ஆலய சூழலில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுத்தியது தவறான விடயமாகும். தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் உள்ள திருகோணேஸ்வரத்தின் புனித தன்மையை பாதுகாப்பதுடன், தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை எதிர்காலத்திலும் உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
2001ஆம் ஆண்டு இங்கு தான் வந்தபோது 3 கடைகள் மாத்திரமே இருந்ததாக கூறும் லிங்கேஸ்வரி, தற்போது 56 கடைகள் இங்கு உள்ளதாக கூறுகின்றார். மூன்று பிள்ளைகளின் தாயரான, பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த லிங்கேஸ்வரி, அங்குள்ள நான்கு கடைகள் மாத்திரமே தமிழர்களின் கடைகள் என்றும் தமிழ் வியாபாரிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றார்.
“எங்களது கடைகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியாது. திருவிழா காலங்களில் சிங்கள வியாபரிகளின் கடைகள் உள்ள பகுதிகளில் மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஆனால், தமிழ் வியாபாரிகளுக்கு அந்த வசதி இருக்காது. நான் இந்த கடையை ஆரம்பித்து 23 வருடங்கள் ஆகின்றன. இந்த 23 வருடத்திலும் எனக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. எங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை. நாங்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பினால் வேறு விதத்தில் பழிவாங்கப்படுவோம்.” என்று தனது இயலாமையை வெளிப்படுத்துகின்றார்.
திருகோணமலை, சேருநுவரவை சேர்ந்த கருணாரத்தன என்ற சிங்கள் வியாபாரி, இங்கு 2003ஆம் ஆண்டில் இருந்து கடையொன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கின்றார். எனினும், இங்கு கடையை அமைக்க இடமளிக்கப்பட்ட பின்னர் இத்தனை வருடங்களாக தமக்கு வேறு எந்த உதவிகளையும் அரசாங்கம் செய்யவில்லை என்று கூறுகின்றார்.
”திருகோணேஸ்வரத்திலும் இதே நிலைதான், அதிகளவில் தமிழ் மக்கள் வாழ்ந்த அங்கு இன்று சிங்கள குடியேற்றங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கதிர்காமத்துக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம். அதற்கு வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் ஏற்கெனவே திட்டமிட்ட வரைப்படத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன” என்று ஆய்வாளர் என்.சரவணன் சுட்டிக்காட்டுகின்றார்.
“யுத்தம் முடிவடைந்த பின்னர், புதிய விகாரைகள் கட்டப்பட்டன, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத உரிமைகள் மறுக்கப்பட்டு, புத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் முழு ஆசீர்வாதத்துடன் நடைபெறுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் கோயில்கள், நிலங்கள், புராதன சின்னங்கள் பௌத்தமயமாக்கப்பட்டுள்ளன. தமிழர் பகுதியில் விகாரைகள் ஏன்? இதுதான் மக்களின் கேள்வி. இந்நிலையில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை தொல்லியல் இடங்களாக அறிவித்து கையகப்படுத்துவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்கிறார் வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.
இவ்வாறு, தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழர் தரப்பால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளதுடன், அரசாங்கம் மதம் மற்றும் மொழி அடிப்படையில் பாரபட்சம் காட்டவில்லை என்றே கூறுகின்றது.
“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஏனைய மதங்களை இரண்டாம் பட்சமாக்க வேண்டும் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், அரசாங்கம் மற்றும் அமைச்சு, மதம் மற்றும் மொழி அடிப்படையில் எவரையும் மலினப்படுத்தவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொன்மை வாய்ந்த இந்து கோயில்களை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரங்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்து மத கலாசாரத்தையும், மத சின்னங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தின் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய காலத்தில் (2023 மே 28ஆம் திகதி) திவயின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் வெளியிட்ட கருத்தினை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட முடியும்.
“இலங்கையில் பல இனங்கள் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை. மேலும், பெரும்பான்மையானவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். ஸ்ரீ பாத, கதிர்காமம் என அனைவரும் வழிபடும் சில தலங்கள் உள்ளன. அத்துடன், சிங்கள பௌத்தர்களிடம் ஏராளமான தொல்லியல் சான்றுகளும் உள்ளன. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் பௌத்த சிதைவுகள் அதிகம். ஏனெனில் அந்தக் காலத்தில் பௌத்தம் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அரிதான சந்தர்ப்பங்களில், இந்துக்களும் பௌத்த இடிபாடுகளில் வழிபடுகின்றனர். அந்த மக்கள் அதனை தமது உரிமைகள் என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், எவ்வளவு காலத்திற்கு முன்பு அந்த நடவடிக்கைகளுக்குச் சென்றார்கள் என்பது இப்போது மக்களுக்குத் தெரியாது. பிரச்சினைக்கு இதுவும் காரணம்” – என பேராசிரியர் அனுர மனதுங்க குறிப்பிடுகின்றார்.
சிவனொளிபாதமலை மற்றும் கதிர்காமம் போன்றே தமிழ் – சிங்கள மக்கள் ஒற்றுமையுடன் வழிபடும் தலமாக நைனாதீவு உள்ளது. சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாண நகரத்தில் இருந்து தென்மேற்கே ஏறக்குறைய 37.3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கின்றது. சிங்கள மக்கள் இதனை நாகதீப என அழைத்து வருகின்றனர். நயினா தீவுக்கு தரை வழி பாதை இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை வாகனத்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் “நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்” என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோயிலின் அண்மையில் ஒரு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதுடன், இதனை நாகவிகாரை என்று அழைக்கின்றனர். பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகின்றனர். அத்துடன், இந்த விகாரையில் உள்ள சில பௌத்த பிக்குகளை தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக தமிழர்களே வசித்து வருகின்றனர்.
நாகத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த தீவில் உள்ள வணக்கஸ்தலங்களில் தமிழ் – சிங்கள மொழிபேசும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதாக அங்குள்ள நாக விகாரையின் கலல்லேகம தம்மதிலக தேரர் தெரிவிக்கின்றார்.
இனம், மதம், மொழி பாராமல் இங்கு பக்தர்கள் வந்து செல்லுகின்றனர். இந்த தீவில் உள்ள தமிழ் மக்கள் எம்மீது அன்புடன் உள்ளனர். இங்கு எந்த பேதங்களும், வேறுபாடுகளும் இல்லை. அண்மையில் நடைபெற்ற நாகபூசணி அம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்பதற்கான ஆண் யானையை அழைத்துவர எமது விகாரையின் நாயக்க தேரர் ஏற்பாடுகளை செய்திருந்தார். இங்கு வருவோர் கோயிலுக்கும் செல்கின்றனர். தமிழ் பக்தர்கள் விகாரைக்கும் வருகின்றனர்” என்று அனைவருக்கும் பொதுவான வணக்கஸ்தலமாக நைநாதீவு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாகவிகாரையின் ஒரு பகுதிகளில் தமிழ் கடவுகளின் உருவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை அங்கு செல்பவர்களால் அவதானிக்க முடியும்.
மத ஒற்றுமையின் புன்னிய பூமியாக காணப்படும் நைனாதீவில் நடத்தப்படும் அமுதசுரபி அன்னதான மண்டபத்துக்கு தமிழர்கள் மட்டுமன்றி பௌத்தர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களும் வந்து தங்கி இளைப்பாறி செல்வதாக அன்னதான சபையின் உறுப்பினர் மதியாபரணன் அம்பிகைபாகன் தெரிவிக்கின்றார்.
“இது சிறிய தீவாக இருந்தாலும் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் இதனை சுற்றுலா தலமாக அல்லாமல், தங்களுடைய ஆன்மீக வழிபாட்டு தலமாக நினைத்து இங்கே வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் எந்தவொரு பாகுபாடும் காட்டுவதில்லை. இந்த அமுதசுரபி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பௌத்த யாத்திரிகளர்கள் வந்து தங்கி சமைத்து விகாரைக்குரிய தானத்தை கொடுக்கின்றனர். ஹம்பாந்தோட்டை முதல் அநுராதபுரம், கண்டி, கம்பஹா என பல பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வருகின்றார்கள். வார இறுதியில் இங்கு அதிக கூட்ட நெரிசலாக காணப்படுவதுடன், இங்கு இன, மத, குல, சாதி என எந்த பேதமும் இல்லை” என்றார் மதியாபரணன் அம்பிகைபாகன்.
வடக்கு – கிழக்கில் தமிழ் பகுதிகளில் பௌத்த விகாரைகள் உருவாக்கப்பட்டு, சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்ர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படும் நிலையில், இந்து ஆலயங்களில் தமிழர்களின் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் அழிக்கப்பட்டு, அதுவும் பௌத்தமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்களின் மனத்தில் இழையோடி கொண்டுள்ளது. இந்த நிலையை நீக்கி அனைத்து இன மக்களும் தமது வழிபாடுகளை அச்சமின்றி மாற்றமின்றி முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் தேவையாகும். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதும் முக்கியமானதாகும்.