உலக இரத்ததான தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேசரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தானங்களில் சிறந்த தானமாக இரத்த தானத்தினை மருத்துவத்துறை முன்னிறுத்துகிறது. பல்வேறு மருத்துவ அறுவைச் சிகிச்சைகளின் போது ஒரு மருத்துவ நோயாளிக்கு தேவைப்படும் முக்கியமான விடயமாக இரத்தம் காணப்படுகிறது.
எல்லோராலும் எல்லோருக்கும் இரத்தத்தினை அளித்துவிட முடியாது ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும் சமயத்தில் அவருக்குரிய வகையாளரைத் தேடிக் கொண்டு வருவது சிரமம். எனவேதான் இரத்ததானம் என்ற பெயரில் விருப்பப்பட்டு வழங்கும் நபர்களிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டு மருத்துவமனை மற்றும் இரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்படுகிறது.
இரத்தப் பிரிவுகளான A,B,O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் பிறந்த தினத்திலே இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்பவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எனப் பார்க்கும்போது இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட வயதினை கொண்டிருத்தல் வேண்டும். இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.
ஆண், பெண் இரு பாலினரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. இரத்ததானம் கொடுப்பதற்கு கடந்த ஓராண்டுக்குள் எந்த வித தடுப்பு மருந்தும் உபயோகித்து இருத்தல் கூடாது போன்ற தகுதிகளினை கொண்டிருத்தல் வேண்டும்.
இரத்ததானம் செய்வதற்குரிய நடைமுறைகள் எனப் பார்க்கும்போது மது அருந்தியதிலிருந்து 24 மணி நேரத்துக்கு பின்னரே இரத்த தானம் வழங்க முடியும் முடிந்தவரை மது அருந்துதலை தவிர்த்தல் வேண்டும். இரத்த தானம் வழங்குவதற்கு முன்பு நன்கு உணவு உண்ட பின்னரே இரத்த தானம் செய்ய வேண்டும். உணவு உறக்கம் ஆகிய இரண்டும் மிகவும் அவசியமாகும். இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகும். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பின்னரே இரத்த தானத்தை வழங்க முடியும். இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும் இவ்வாறான நடைமுறைகளை கையாளுதல் வேண்டும்.
இன்றைய காலத்தில் பலருக்கு இரத்த தானம் அவசியமாகிறது. பல வைத்தியசாலைகளில் இரத்த தட்டுப்பாடு நிலவுகிறது. நாம் கொடுக்கின்ற ஒவ்வொரு துளி இரத்தமும் இன்னொருவரின் உயிரினை காப்பாற்றலாம். வீதி விபத்து ,யுத்தம், அனர்த்தம் குருதிப்புற்றுநோய் போன்ற பல்வேறு காரணங்களினால் சத்திர சிகிச்சைகளின் போது குருதி தேவைப்படும் இடத்தும் மற்றும் குருதி மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தும் போது குருதியை தானமாகப் பெறுபவர்கள் பயனடைகிறார்கள்.
குருதியின் தேவை எச் சந்தர்ப்பத்தில் தேவைப்படுமென திட்டவட்டமாக குறிப்பிட முடியாது. குருதியை பெற்றுக் கொள்பவர்கள் தன் உயிரை மீள பெற்றுக்கொள்வதனால் நன்மை அடைவதைப் போலவே இரத்த தானம் செய்பவர்களும் மறைமுகமாக நன்மையடைகின்றார்கள் .இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்படுவதற்கு சமமாகும், தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் இரத்த தானம் செய்வதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தியும் சமச்சீராக பராமரிக்கும், இரத்த தானம் செய்தல் சிறந்தது இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகிறது, இவ்வாறான மறைமுகமான நன்மைகள் இரத்த தானம் செய்வதனால் கிடைக்கப்பெறுகின்றது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டில் 2023 இரத்த தானத்திற்குரிய கருப்பொருளாக இரத்தம் கொடுங்கள், பிளாஸ்மாவை கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கருப்பொருள் காணப்பட்டுள்ளது. மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும் இரத்த தானம் செய்வதன்
முக்கியத்துவத்தை கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும். முதல் உலக இரத்ததான தினம் 2005இல் அனுஷ்டிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளுடன் இரத்த தான தினம் நிகழ்த்தப்படுகிறது.
இரத்த தானம் வழங்க வேண்டும் என்று ஆர்வத்தில் அனைவராலும் வழங்கி விட முடியாது சில நோய்த் தாக்கம் ஏற்பட்டவர்கள் இரத்த தானம் செய்வதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதாவது எயிட்ஸ், நீரழிவு நோய், இரத்த அழுத்தம் வலிப்பு நோய் உள்ளவர்கள் ஏற்கனவே இரத்தம் ஏற்றப்பட்டவர்கள், பெண்கள் மாதவிடாய் காலங்களில், தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும், வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்களும் இரத்த தானம்செய்வதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய காலப்பகுதியில் இரத்ததானம் பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பினும் அதனை செய்வதற்கு பலரும் முன் வருவதில்லை. உடல் பருமன் அதிகரிக்கும், வேறு நோய்கள் ஏற்படும், உடல் பலவீனமடையும் போன்ற தவறான எண்ணங்களினால் இரத்த தானம் செய்வதற்கு முன் வருவதில்லை இரத்ததானம் செய்வதற்கு 5 தொடக்கம் 10 நிமிடங்கள் போதுமானது. எனவே இரத்த தான செயற்பாட்டில் ஈடுபடுதல் எமது உடலிற்கும் நன்மை பயக்கும்.உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தி ஆகிறது. எனவே இதனால் உடல் பலவீனமடையுமென்றோ எந்த பாதிப்பும் ஏற்படுமென்றோ பின் வாங்கலை விடுத்து முன் வர வேண்டும்.
அரச மருத்துவமனைகள் தனியார் அமைப்புகள் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இரத்த தானம் வழங்கும் செயற்பாடு இடம்பெறுகின்றது.அந்த நேரங்களில் எமது சிறிதளவு நேரத்தை ஒதுக்கி நாம் வழங்குகின்ற குருதிக் கொடையால் இன்னொரு உயிர் பாதுகாக்கப்படும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இருந்தாலும் இரத்த தானம் வழங்கிய பின் சிலவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அவற்றை கவனத்தில் கொள்வோமாயின் மது அருந்துதலை தவிர்க்க வேண்டும், கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளல் ,பலமான பொருட்களினை தூக்குதல் போன்றவற்றினை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத்தினத்தில் ஒருவர் தாமாக முன்வந்து உயிர் காக்க உதவும் இரத்தத்தை அளிப்பவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு தரம், பாதுகாப்பு இரத்தத்தின் இருப்பு மற்றும் நோயாளியின் தேவையைப் பொறுத்து இரத்தம் தொடர்பானவற்றை அளிப்பது ஆகியவற்றிற்காக தொடர்ந்து இரத்த தானம் செய்வதின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் நிகழ்த்தப்படுகிறது.
“உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்”
—சி.கதீசனா (3ம் வருடம் ஊடகக் கற்கைகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)–