சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்…

0

தகிக்கும் சுடு மணலில் தீபங்களைப் போலவே உருகிய தாய்மார்களின் கண்கள் மனசாட்சி உள்ள எவரையும் நிச்சயமாக கரைய வைத்துவிடும். அதில் தியாகமும் உன்னதமும் மகத்துவமும் நிரம்பியிருந்தன. நாம் போரில் தோற்றவர்களாயினும் நேர்மையுடன் போராடித் தோற்றவர்கள் என்ற முகங்களால் அழுதாலும் நாங்கள் நிமிர்ந்தே நிற்கிறோம்.

எங்கள் போராட்டம் நியாயம் நிறைந்தது என்பதால் நீதிக்காக தொடர்ந்து போராடும் முகங்கள் எங்களுடையவை. கொல்லப்பட்டவர்களின் நீதிக்காக திரண்டிருந்த மக்களின் மனங்கள் அக்கினித் தீயில் தகித்துப் போராடுவதை கண்டிருந்தோம்.

குருதியும் பிணங்களுமாய் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தொகையாய் மக்கள் கொல்லப்பட்ட இடத்தில், நாங்கள் கண்ணீரோடும் பூக்களோடும் தீபங்களோடும் கூடியிருப்பது அஞ்சலிக்க மட்டுல்ல, இந் நிலத்தில் வாழ்ந்திருக்கவுமே.

நினைவழியா முள்ளிவாய்க்கால்
2009இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்க்காலுக்கு வெளியில், தமிழர் தேசம் மிக கடுமையாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாட்களில் ஈழப் படுகொலைகளுக்கு எதிராகவும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் எழாத வகையில் தமிழர் தேசம் எங்குமே இனப்படுகொலைகள் நடந்தன.

முள்ளிவாய்க்காலுடன் இனப்படுகொலைகள் முடியாது நீள்வதைப் போல, முள்ளிவாய்க்காலுக்கு வெளியிலும் இனப்படுகொலைகள் நடந்தன. அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக இனப்படுகொலைப் போருக்கு எதிராக மாணவர் சமூகமாக குரல் கொடுத்தோம்.

இதனால் பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்களை எதிர்கொண்டோம். எங்கள் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டார். மாணவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள். அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அன்றைய நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்துப் பேர் சுட்டுக்கொல்லப்படுவது வழக்கமாயிற்று.

2009 முள்ளிவாய்க்காலில் இனவழிப்புப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அங்கு கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத வகையில் மிகவும் அச்சுறுத்தலான இராணுவ ஆட்சி தமிழர் தேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2010 மே மாதத்தில் சமூக வலைத்தளங்களில் ஓரளவுக்கு நினைவேந்தல் நினைவுகூரப்பட்டது. அதேவேளை அன்றைய நாட்களில் ஆலயங்களில் வழிபாடுகளை செய்து, அர்ச்சனைகளை செய்யக்கூட அனுமதி இல்லாமல் மக்கள் தவித்த பேயாட்சியை எதிர்கொண்டோம்.

அழுவதற்கும் அனுமதியில்லை
அண்மையில் ஒரு ஈழப் பாடகரின் முள்ளிவாய்க்கால் குறித்த இசைப்பாடலை தமிழ் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் வெளியிட்டோம். அதிகம் பேசாத அவர், சில வார்த்தைகளைத்தான் உதிர்த்தார். “சாகடிக்கப்போம், ஆனால் அழக்கூடாது” என்பதுதான் அந்த வார்த்தைகள்.

கொத்துக் கொத்தாக கொல்லுவோம், சரணடைந்தவர்களையும் உயிருடன் கையளிக்கப்பட்டவர்களையும் காணாமல் ஆக்குவோம் ஆனால் அழக்கூடாது என்பதெல்லாம் எவ்வளவு அடக்குமுறை? போரில் நாம் இழந்தது எங்கள் பிள்ளைகளை. போரில் நாம் இழந்தது உங்கள் உறவுகளை. அவர்களை நினைந்து அழக்கூடாது என்று கண்ணீருக்குத் தடைபோடுகிற அரசின் கீழ்தான் நாம் வாழ்கிறோம்.

போரில் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அரச திணைக்களங்களின் புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு மேன்மைக்குரிய மன்னார் ஆயர் இராசப்பு யோசேப் அவர்கள், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியாக பகிரங்கப்படுத்தினார். இறுதிப் போரில் மாத்திரமே இந்த மக்களின் இழப்பு பதிவாகியுள்ளது.

அதிலும் போர் துவங்கிய காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மக்கள் போரின் முடிவுக்குப் பின்னர் ஆமற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் அடிப்படையில் இந்த காணாமல் ஆக்கட்டமை பற்றிய விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போரில் கொல்லப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இந்த ஒன்றரை இலட்சம் மக்களில் அடங்குகின்றனர்.

அழுகையும் ஓர் ஆயுதமே
எங்கள் அழுகையை மிகப் பெரிய ஆயுதமாக சிறிலங்கா அரசு கருதுகிறது. எங்கள் கண்ணீரை மிகப் பெரிய ஆயுதமாக சிறிலங்கா அரசு கருதுகிறது. அதனால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகளின்மீது பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நினைவேந்தலுக்கு எதிராக பல அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அங்கு அரசுடன் இணைந்திருக்கும் தரப்புக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதில் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக அங்குள்ள உறவுகள் கூறுகிறார்கள். ஆனால் எந்தந் சூழ்ச்சிகளாலும் முள்ளிவாய்க்காலின் அவலத்திற்கான நீதியை தடுத்துவிட முடியாது என்பது மாத்திரம் உறுதியானது.

2010களில் வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசு ஏற்படுத்திய தடைகள்தான் முள்ளிவாய்க்கால் நோக்கி மக்கள் பெரிய அளவில் சென்று அஞ்சலி செலுத்தும் மனநிலையை உருவாக்கியது. அத்துடன் வருடம் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு போராட்டமாக விஸ்தரிப்பு பெற்று வருகின்றது.

அத்துடன் கிழக்கில் இருந்து பல இளைஞர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்திருந்தார்கள். அத்துடன் இம்முறை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிருதல் பெரும் போராட்டமாக தமிழர் தாயகம் எங்கும் நடந்திருந்தது. அதனையும் தடுக்கும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இப்படியான அரசின் அடக்குமுறைகள் இன்னமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வலுப்பெறச் செய்யும்.

சிங்கள இளைஞனை உருக்கிய கண்ணீர்
இப்படியான தடைகள் முள்ளிவாய்க்கால் நோக்கி சிங்கள மக்களை வரச் செய்யும் என்பதற்கு சாட்சியாக பல சிங்கள மக்களை இம்முறை முள்ளிவாய்க்காலில் கண்டேன். முஸ்லீம் இளைஞர்கள்கூட வந்திருந்தார்கள். மொழியால் நாங்களும் தமிழர்கள், இந்த வலி மிகு இடத்திற்கு முஸ்லீம் மக்களும் வரவேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் வந்த சில சிங்கள பத்திரிகையாளர்கள் இந்த ஆண்டும் வந்திருந்தார்கள். முள்ளிவாய்க்கால் வந்த ஒரு சிங்கள இளைஞரின் சமூக வலைத்தளப் பதிவு குறித்த செய்தி ஒன்று மனதை மிகவும் நெகிழச் செய்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் சிங்கள இதயங்களை தொடுமொரு துயரம் என்பதே இதில் புலனாகிறது.

எங்கள் சொந்த மக்களை அழ வைத்து நாங்கள் வென்றது போர் அல்ல என்றும் ஒரு தென்னை மரத்தின் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதன் மூலம் முள்ளிவாய்க்காலில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூறுகின்றார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் படுகொலையை அடையாளப்படுத்த இந்த தென்னை மரங்கள் போதாது என்றும் அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் அழுது கண்ணீர் வடிக்கும் தாய்மார் ஈடி இணையில்லாதவர்கள் என்றும் தனது பிள்ளையின் இழப்பின் வலி தாய் ஒருவருக்கு மட்டுமே தெரியும் என்றும் அந்த இளைஞர் கூறியிருப்பது சிறந்த நெகிழ்வும் துவக்கமுமாகும். எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை உண்டு.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதைப்போல, இத்தகைய மாபெரும் மனிதப் பேரவலத்தை விளைவித்தமைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. கடந்த காலத்தில் இப் பேரவலத்தை மேற்கொண்டவர்கள், மரணத்தைவிடவும் கொடிய துன்பங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.

ஆனால் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு நீதி நிலைநாட்டப்படுகின்ற போதுதான், ஈழத் தமிழ் மக்களின் காயங்களுக்கு அது மருந்தாகும். அவர்தம் வாழ்வில் அது விடுதலையாகும். இனவழிப்பிலும் ஒடுக்குமுறையின் துயரத்திலும் முள்ளிவாய்க்கால் முடிவற்றிருப்பதனால், எம் விடுதலை போராட்டத்திலும் முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதனை நோக்கி சிங்கள மக்களும் உலக மக்களும் வருவார்கள், புரிவார்கள் என்றே நம்பி இருக்கிறது ஈழநிலம்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights