ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தன்னால் முடியாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது மிக தீவிரமான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி வேட்பாளரை தான் நியமிப்பதன் மூலம் வேட்பாளராகும் எதிர்ப்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு தன்னுடன் மனஸ்தாபம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு உறுப்பினர்களே பொருத்தமான வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரித்துள்ளார்.
இலங்கைத்தீவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தமக்கான வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நாமல் ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வருகின்றன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கருத்துக்கள் வேகமாகப் பரவிவருகின்றன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாகவும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மகிந்தவுக்கும், ரணிலுக்கும் இடையிலான இந்த சந்திப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்குவதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்சிகளுக்கிடையே பிளவு
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பொதுஜன பெரமுன கோரிக்கை முன்வைத்ததையடுத்து அது தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கட்சியினிடையே பிளவுபாடுகள் அதிகரித்துள்ளன.
பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என நாமல் தரப்பு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தரப்பு கோரிக்கை முன்வைத்து வருகிறது.
அதன்படி, பொதுஜன பெரமுனவில் சிலர் வெளிப்படையாகவே ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இன்னும் சிலர் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சஜித் தரப்பிலிருந்து சிலர் ரணிலுடன் இணைய தீர்மானித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
தமிழர் தரப்பில் பொது வேட்பாளர்
இவ்வாறான பின்னணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதில் தமிழ் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை.
தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவர் அவசியம் என ஒரு தரப்பினரும் அவசியமில்லை என மற்றுமொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் வாக்கு வேட்டை
எவ்வாறாயினும், வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மிகவும் முக்கியமாக காணப்படுகின்றன.
இதன் காரணமாக தென்னிலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் வடக்கு கிழக்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகள் உந்து சக்கியாக அமைந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.