முன்னைய தலைவர்களை விட மோசமானவரா?

0

ராஜபக்‌ஷக்களும் அவர்களது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கடந்த கால சம்பவங்களிலிருந்து,  குறிப்பாக  2022 கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும்  கோப் என்று அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமை எடுத்துக் காட்டுகிறது.

31 உறுப்பினர்களைக் கொண்ட அக்குழுவிலிருந்து கடந்த ஒரு வாரத்தில்
11 உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

அக்குழுவின் தவிசாளராக பொது ஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர்.

இவ்வாறு கோப் குழுவிலிருந்து விலகியவர்களில் முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விகரமரத்னவே கடந்த வாரம் தமது இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்தார். ஆனால், அவர் மற்றொரு விடயத்தையே தமது கடிதத்தில் இராஜினாமாவுக்கான பிரதான காரணமாகக் குறிப்பிட்டு இருந்தார்.

கோப் குழுவில் எவ்வளவு தான் ஊழல்கள் மோசடிகளை அம்பலப்படுத்தினால் அவை தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே அவ்விடயமாகும். அடுத்ததாக அவர் கோப் குழுவின் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே மரபு என்றும்,  எனவே, ஆளும் கட்சியைச் சேர்ந்த அபேகுணவர்தனவை நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டு இறுதியாகப் பெயர் குறிப்பிடாது ஊழல்களில் ஈடுபட்டோர்களை ஊழல்களை ஆராயும் இக்குழுவுக்கு நியமிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தமிழ் உறுப்பினர் (இலங்கை தமிழரசுக் கட்சியின் சாணக்கியன் இராசமாணிக்கம்) ஒரு முஸ்லிம் உறுப்பினர் (ஐக்கிய மக்கள் சக்தியின் எஸ்.எம். மரிக்கார்) உள்ளிட்ட இராஜினாமா செய்த 11 பேரும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொதுஜன முன்னணியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகி பின்னர் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பவர்களுமாவர்.

சபாநாயகரால் கோப் குழுவுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் தமது பெரும்பான்மை வாக்குகளாலேயே அதன் தலைவரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால், குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அடிப்படையைப் பார்க்கும்போது, ஆளும் கட்சியின் விருப்பத்துக்கு மாறாக குளித்தலைவரை தெரிவு செய்ய முடியாது. ஏனெனில், ஒவ்வொரு கட்சிக்கும்  பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் விகிதாசாரப்பபடியே குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, குழுவில் பெரும்பான்மை பலம் ஆளும் கட்சியிடமே எப்போதும் செல்கிறது. எனவே, பொதுஜன முன்னணியின் தலைவர்களின் ஆலோசனையின் படியே அபேகுணவர்தன தவிசாளராக நியமிக்கப்பட்டார் என்று முடிவு செய்வதில் எவ்வித தவறுமில்லை.
ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவை எதுவும் எந்தவொரு நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படாததால் அவர் நிரபராதி என்றும் எனவே அவரை கோப் குழுவின் தலைவராக நியமித்ததில் எவ்வித் தவறும் இல்லை என்றும் பொதுஜன முன்னணியினர் வாதிடலாம். ஏனெனில், அவர்கள் இதற்கு முன்னர் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் தொடர்பாகவும் அவ்வாறு மென்மையாகத் தான் நடந்து கொண்டுள்ளனர்.
அக்கட்சியின் இரத்னபுரி மாவட்ட
எம்.பி. பிரேமலால் ஜயசேகர் 2015இல் அரசியல் எதிரி ஒருவரைக் கொலை செய்ததற்கு இரத்னபுரி மேல் நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், கம்பஹ மாவட்ட எம்.பியான பிரசன்ன ரணதுங்க ஆறு கோடி ரூபாய் கப்பம் பெற்றார் என்று மேல் நீதிமன்றமொன்றால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவராவார். ஆனால், அவர்கள் அத்தீர்ப்புக்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர் என்ற அடிப்படையில் பொதுஜன முன்னணி அவர்களுக்குப்   பாராளுமன்றத்துக்கு வர வாய்ப்பு அளித்தது. சட்டப்படி அதுசரி தான். ஆனால், மேன்முறையீடு விசாரணை செய்யப்பட்டு முடியும் வரையாவது அக்கட்சி மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மதித்திருக்க வேண்டும்.
11 உறுப்பினர்கள் இராஜினாமா செய்திருந்தும் கோப் குழு முதன்முறையாகக் கடந்த புதன்கிழமை அபேகுணவர்தனவின் தலைமையில் கூடியது. அதுவும் சட்டப்படி சரி தான். ஏனெனில், சட்டப்படி அக்குழு கூடிச் செயற்படுவதற்கான கோரம் இந்த இராஜினாமாக்களால் பாதிக்கப்படவில்லை. எனினும் குழுவின் தலைவரை ஊழல் பேர்வழி என்று கூறி குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இராஜினாமாச செய்யும்போது அக்குழுவின் நம்பகத்தன்​மை எவ்வகையானது என்ற கேள்வி எழுகிறது.
குழுவின் நம்பகத்தன்மை ஏதுவாக இருப்பினும் எதிர்க்கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு வித சவாலாகவே பொதுஜன முன்னணி அபேகுணவர்தனவை கோப் குழுவின் தலைவராக நியமித்துள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க   பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார். பொதுஜன முன்னணியின் உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவராக இருந்தபோது கடந்த நவம்பர் மாதம் கிரிக்கெட் சபையில் ஊழல்களைப் பற்றித் தோண்டித் தோண்டி கேள்விகளை எழுப்பிய குழு உறுப்பினர் ஒருவரை அவர் சைகை மூலமாகத் தடுத்ததாகவும் எனவே,  அவர் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.
உங்களுக்கு ரஞ்சித் பண்டார வேண்டாம் என்றால் நாங்கள் ரோஹித்த போன்ற ஒருவரையே நியமிப்போம் என்ற சவாலையே பொதுஜன முன்னணி விடுத்துள்ளது என்று அனுர குமார கூறியிருந்தார்.

பொதுஜன முன்னணியின் தலைவர்கள் இவ்வாறு செய்பவர்கள் தான். உதாரணமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேர்வின் சில்வா பல ஊடகவியலாளர்களை இம்சித்து சில ஊடக அலுவலகங்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆவார். ஆயினும் பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ஜனாதிபதியாக இருக்கும் போது மேர்வின் சில்வா ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் விடயத்தில் பொதுஜன முன்னணியின் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டம் பெற்றவர்களும் நடந்து கொண்ட முறையைப் பார்க்கும் போது அவர்களுக்கும் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது என்றே கேட்க வேண்டியிருக்கிறது.

உதாரணமாக, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் பேராசிரியர் சரித்த ஹேரத் ஆகிய இதற்கு முன்னர் கோப் குழுவின் தலைவர்களாக இருந்தவர்களும் ரோஹித்தவும் அரசாங்கத்தின் எந்தவொரு தவறான நடவடிக்கையையும் எதிர்க்கவில்லை.

அவர்களும் அவற்றை ஆதரித்தனர். நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் நான்கு பிரதான நடவடிக்கைகள் காரணமாகியதாகவே பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு வர்த்தகர்களுக்கு பாரியளவில் வரிச் சலுகை வழங்கியமை, 2021 ஆம் ஆண்டு இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்தமை, 2021 ஆம் ,ஆண்டு டொலரின் பெறுமதி வேகமாக உயரும் போது அதனைச் செயற்கையாக 203 ரூபாவாக வைத்திருக்க கையிருப்பில் இருந்த வெளிநாட்டுச் செலாவணியை வெளியேற்றியமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டிலிருந்தே நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையைப் புறக்கணித்தமை அந்த நான்கு தவறுகளாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்‌ஷக்கள் உள்ளிட்ட சில அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என்று அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் இந்த நான்கு காரணங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதால் திறைசேரி 65,000 கோடி ரூபாவை வருடாந்தம் இழக்கும் என்று அப்போதே சில நிபுணர்கள் சுட்டிக் காட்டியனர்.

ஆனால் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களான பொருளாதார நிபுணர்கள் அதனை வரவேற்றனர். அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்று பொருளியல் நிபுணராகக் கருதப்படும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கூறினார்.

திடீரென இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என விவசாயத்துறை நிபுணர்கள் கூறிய போதும் அத்தடைக்கு எதிரான விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகளின் சதி என்றே பொதுஜன முன்னணியின் படித்தவர்களும் கூறினர்.

எனவே, நாட்டின் நலம் தொடர்பிலான கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கும் ரோஹித்தவுக்கும் இடையே வேறுபாடு இல்லை. கற்றவர்கள் தாம் பெற்ற கல்விக்கு ஏற்ப நடந்துகொள்ளாத வரை ரோஹித்தவின் நியமனம் போன்ற நியமனங்களால் புதிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

எம்.எஸ்.எம். ஐயூப்—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights