மக்களை அங்கு வாழ விடாது எவரும் தடுக்கவில்லை!

0

பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். செயலகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொன்னாவெளி பிரதேசத்தில் இருந்து தற்போது தான் மக்கள் வெளியேறியதாக ஒரு பொய்யான கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது. ஆனால் அதில் உண்மை கிடையாது. மக்களை அங்கு வாழ விடாது எவரும் தடுக்கவில்லை.

ஆனால் அங்கு வாழும் சூழலுக்கேற்ற வகையிலான குடி நீர் முழுமையாக அற்றுவிட்டது. நிலப்பரப்பகள் எல்லாம் உவர் நிலமாக மாறிவிட்டது. அதனால் எதுவிதமான பயிர் செய்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியது. இதனால் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததாக தெரியவில்லை.

அது மட்டுமல்லாது சுண்ணக்கல் அகழ்வதற்கான திட்டம் உடனடியாக முன்னெடுக்கப்படும் விடயம் ஒன்றல்ல. அதுமட்டுமல்லாது மக்களது கருத்துக்களும் அதில் உள்வாங்கப்படும். அதேநேரம் குறித்த பகுதியை ஆய்வு செய்தால்தான் அங்கு குறித்த செயற்பாட்டை முன்னெடுக்கலாமா அல்லது கைவிட வேண்டுமா என்ற நிலைக்கு வரமுடியும்.

குறிப்பாக ஆய்வுகளை மேற்கொள்ள சென்றபோது திட்டமிட்டவகையில் சில விசமிகள் அதை தடுக்கின்றனர். இதேநேரம் ஆய்வு செய்தால் தான் ஒரு நிலைப்பாட்டை எட்டமுடியும். மாறாக ஆய்வின் முடிவுகள் பாதகமாக வருமாயின் அதை தடுப்பதற்கும் பின்னிற்கமாட்டேன்.

மக்களுக்கு ஏதாவதொரு அபிவிருத்தி அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்க வரும் சந்தர்ப்பங்கள் அல்லது ஏதுநிலைகள் வரும்போதெல்லாம் இதர தமிழ் தரப்பினர் அவற்றை தடுக்கத்தான் முயற்சித்தார்களே தவிர அதை ஆராய்ந்து சிறப்பான தீர்மானங்களை எடுப்பதற்கு ஒருபோதும் முன்வருவதில்லை.

குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக கிடைத்த 13 ஆவது அரசிலைமைப்பின் ஊடாகத்தான் எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு ஓர் ஆரம்பமாக அமையும் என நான் அன்றிலிருந்து கூறிவருகின்றேன்.

ஆனால் அதை கடுமையாக எதிர்த்தார்கள். நடைமுறைக்கு கொண்டுவர விடமாட்டோம் என கூச்சலிட்டார்கள். ஆனால் இன்று அவ்வாறு கூச்சலிட்டவர்களே 13 தான் ஒரே வழி என இன்று முணுமுணுக்கின்றார்கள்.

இதேபோன்றுதான் இந்த பொன்னாவெளி விவகாரத்திலும் நான் மக்களுக்கு சாதகமான நன்மை விளைவிக்கும் ஒன்றுதான் என கருதுகின்றேன்.

அதேநேரம் பாதகம் என்று ஆய்வுகள் தெரிவித்தால் அதை நிறுத்துவதற்கும் பின்னிற்கமாட்டேன் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் பொன்னாவெளியில் குடியேறுவதற்கு மக்கள் முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights