ஜெனீவாவில் பிணை எடுப்பு- சம்பந்தனுக்கு கௌரவ சொகுசு இல்லம்: சர்ச்சையை கிளப்பிய சிங்கள நாளிதழ்

0

2019இல் , எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்திருந்த ஆர். சம்பந்தன் அப் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வருடங்கள் கடந்த போதிலும், எதிர்கட்சி தலைவருக்கு உரித்தான கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் (Mahagama Sekara) காணப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று வரை தொடர்ந்தும் வசித்துவருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல சிங்கள நாளிதழான லங்காதீப, தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமே செயற்படுவதாகவும் இன்று வியாழக்கிழமை வெளியான லங்காதீப நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பந்தனுக்கு ஆடம்பர வீடு

2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட சம்பந்தனுக்கு இந்த உத்தியோபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.

2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக பொறுப்பேற்று 52 நாட்கள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னரும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் சம்பந்தனே வசித்துவந்தார்.

இதேவேளை சம்பந்தன், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பதால் இலங்கை அரசாங்கத்தால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என அமைச்சரவையில் விசேட பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்திருந்தார். 2019 இல் அமைச்சரவைக் கூட்டத்தில் சம்பந்தனைப் பாராட்டி நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அதேநேரம் 2015 ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியமைக்காகச் சில அமைச்சர்கள் அப்போது பாராட்டியுமிருந்தனர்.

இதேவேளை எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்பு பணிகளுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டில் மூன்று கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் வரப்பிரசாதம்

இந்தப் பிரேரணையின் பிரகாரம் கொழும்பு-07 அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மஹகமசேகர மாவத்தையில் ஒன்றரை ஏக்கர் காணியுடன் ஆடம்பர வீடு ஒன்று வழங்கப்பட்டு அதற்கான அதிகாரிகள் மற்றும் பூந்தோட்டங்களைப் பராமரித்தல், வீட்டை துப்பரவு செய்தல் ஆகியவற்றுக்கு தலா இரண்டு பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்துக்கான நீர் கட்டணம் , மின்சார கட்டணம் , தொலைபேசி கட்டணம் மற்றும் நடைமுறைக்கான செலவுகள் அனைத்தும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒன்றரை ஏக்கர் நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள வேலையாட்களுக்கும் அரசாங்கத்தின் மூலமே ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.

அரசியல் வட்டாரங்களின் விமர்சனங்கள்

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு மற்றும் அவர்களின் மனைவிமாருக்கு அரசாங்கத்தால் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டாலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கட்சி தலைவர்களுக்கு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்படுவது வரலாற்றில் இதற்கு முன்னர் ஒரு போதும் இடம்பெறவில்லை என அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உண்மையில் இந்த கௌரவம் அல்லது சலுகை என்பது போர் குற்றம் மற்றும் மனித உரிமை போன்ற விடயங்களில் இலங்கைக்கு எதிரான ஜெனீவா மனித உரிமை பேரவையில் கட்டமான பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதனை மாற்றி அமைத்து நீர்த்துப் போகச் செய்யும் கைங்கரியத்தை சம்பந்தன் செய்திருந்தார்.

இதற்கான சன்மானமாகவே இந்த ஆடம்பர வீடு அப்போது வழங்கப்பட்டிருந்தது.

வெளிப்படையாக இலங்கை அரசியலில் அதி சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கௌரவத்திற்காகக் குறித்த வீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகின்றது.

தமிழர் தரப்பை பொறுத்தவரை அவர்களின் துயரங்களையும் அவலங்களையும் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு அடகுவைத்து, அதில் சம்பந்தன் ஆடம்பர வாழ்வு வாழ்வதாக விசனம் பரவலாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights