நாகரிக அரசியலின் தேவை

0

கோவணம் கழன்று விழுவது கூட தெரியாமல், கோட்- சூட்டிற்காக நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்க முடியாது’ என்று முற்போக்கு எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார்.

அதாவது, அரசியல் என்றாலும் சரி, ஆன்மீகம் என்றாலும் சரி, சமூக வாழ்வு என்றாலும் சரி ஒவ்வொரு தனிமனிதனும் சமூகமும் எல்லாவற்றுக்கும் முன்னதாக நல்ல அடிப்படை பண்பியல்புகளோடும், ஒழுக்க விழுமியங்களோடும் தம்மை முதலில் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கைச் சூழலில் அரசியல்வாதிகள் சிலபோதுகளில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து கொள்கின்ற விதங்களைப் பார்க்கின்ற போது, இதற்கான தேவை அரசியல் பரப்பில் இன்னும் அதிகரித்து வருவதை வெளிப்படையாகவே உணரக் கூடியதாக உள்ளது. பாராளுமன்றத்தில் பல துறைசார்ந்தவர்கள் எம்.பிக்களாக அங்கம் வகிக்கின்ற போதிலும் கூட, க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண தரம் சித்தியடையாத கணிசமானவர்களும் எம்.பிக்களாக இருந்ததாக இருப்பதாகப் பல தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன.

ஒரு சாதாரண அரச தொழிலுக்கே பல கல்வித் தகமைகள் கோரப்படுகின்ற நாட்டில், எம்.பிக்களாக தெரிவு செய்யப்படுவோர் இவ்வாறு குறைந்த கல்வித் தகுதியுடன் இருப்பது கவனிப்பிற்குரிய விடயம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், கல்வி அறிவு மட்டுமே ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்கி விட மாட்டாது.

பிரதிநிதித்துவ அரசியலைப் பொறுத்தமட்டில் சான்றிதழை அடிப்படையாகக்கொண்ட தகுதிகளை விட, வேறுபல பண்புகள் முக்கியமானவை. குறிப்பாக, சமூக சிந்தனை, பொறுப்பும், பொறுப்புக்கூறலும், சோரம்போகாத தன்மை, நெஞ்சுறுதி, மக்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு, சமூகப் பிரச்சினையில் தைரியமாக முன்னிற்றல் என அப்பட்டியலில் பல விடயங்களை உள்ளடக்கலாம். இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பொது ஒழுக்கமும் நாகரிகமான அரசியல் கலாசாரமும் இன்னும் கட்டியெழுப்பப்பட வேண்டியிருக்கின்றது என்பதை நாம் பல தடவை நேரிடையாகவே கண்டு, உணர்ந்திருக்கின்றோம்.

அண்மையில். ஒரு குறிப்பிட்ட செயற்றிட்டம் தொடர்பில் அம்பாறை மாவட்ட எம்.பிக்கள் இருவரிடையே ஏற்பட்டிருந்த நானா நீயா போட்டி நாகரிக அரசியலைக் கடந்து, நடுச் சந்திக்கு வந்திருந்தது நினைவிருக்கலாம். ஏம்.பிக்கள் தமக்கிடையே விமர்சிப்பதும், பரஸ்பரம் வசைபாடுவதும் வழக்கமானதுதான். இதுவும் ஒரு வகை அரசியலாகவே இன்று மாறியிருக்கின்றது.

ஆனால், மேற்படி அம்பாறை மாவட்ட விவகாரத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே மற்றைய எம்.பிக்கு ஒரு ‘புனைபெயர்’ சூட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகநூலில் தோன்றிய மற்றைய முஸ்லிம் எம்.பி. தன்னை விமர்சித்த எம்.பிக்கு தன்பங்கிற்கு அவரும் ஒரு புனைபெயரை’ வைத்தார். இதனைப் பார்ப்பதற்கு அவர்களது அரசியல் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்த ஒளிப்படத்தைப் பார்த்து அவர்கள் சிரித்துக்கொள்ளலாம். இதை விட மோசமான எத்தனையோ நிகழ்வுகள் நமது அரசியலில் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது.

ஆனால், இவை ஒரு பண்பட்ட அரசியலின் அடையாளமல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் இதனையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களே நினைத்து முகம் சுழிக்க, வெட்கப்பட நேரிடலாம். முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போட்டிப் போட்டுக்கொண்டு பாராளுமன்றத்தில் உரையாற்றியது கிடையாது.

முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும் தமது மக்களின் அபிலாசைகளை அல்லது தங்களது பிரதேசங்களில் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகப் பாராளுமன்றத்திற்குள் உள்ளேயும் வெளியேயும் போராடியது கிடையாது. இந்திய நடிகைகளை அழைத்து வந்து மலையக மக்களை சில தமிழ் அரசியல்வாதிகள் களிப்பூட்டியதைப் போல இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அதனை ஒத்ததாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் கட்சிப் பாடல்களாலும், வீராப்புப் பேச்சுகளாலும் தமது சமூகத்தை உணர்ச்சியூட்டுகின்றனர் எனலாம்.

தேர்தல் காலத்தில் ‘அம்பியாக’ இருந்தோர்கள் பதவி கைக்குக் கிடைத்தால் மக்கள் விடயத்தில் ‘அந்நியனாக’ மாறி விடுவதைப் பல தடவை கண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தில் கிரமமாக உரையாற்றாத, அந்த வரப்பிரசாதங்களை சமூகத்திற்காகப் பயன்படுத்தாத எத்தனையோ முஸ்லிம் எம்.பிக்கள் இதற்கு முன்னரும் இருந்தனர், இப்போதும் உள்ளனர். இப்படியே போனால், இனியும் உருவாகலாம்.

சில முஸ்லிம் எம்.பிக்களுக்கு சபையிலும் சபைக்கு வெளியிலும் தமது சமூகத்தின் பிரச்சினைகளை எவ்வாறு முன்வைப்பது, எப்படி ஏனைய சமூகங்களுக்குப் புரிய வைப்பது என்ற அடிப்படை நுணுக்கம் கூட தெரியாது. தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தெளிவாக,ஒரு கோர்வையாக முன்வைக்கின்ற எம்.பிக்கள் பலர் உள்ளனர். எஸ்.ஸ்ரீதரன், ஆர். சாணக்கியன் என பலரை உதாரணமாகக் கூறலாம். ஆனால், இப்படியாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைத் தெளிவுறப் பேசக்கூடிய முஸ்லிம் எம்.பிக்கள் அரிது. ஓரிருவர் அதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். மீதமுள்ள முஸ்லிம் எம்.பிக்கள் பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கம்புக்கும் நோகாமல், எழுவாயும் இல்லாமல் பயனிலையும் இல்லாமல், தொடர்பற்ற விடயங்களை தொடர்புப்படுத்திப் பேசிவிட்டுப் போகின்றனர்.

எந்தவித முன் தயார்ப்படுத்தலும் இல்லாமல் பாராளுமன்றத்திலும் வெளியிலும் விடயங்களைக் கையாள்வதைக் காண்கின்றோம் பல முஸ்லிம் எம்.பிக்கள் பாராளுமன்றத்திற்கு வருகின்றார்களா? வந்தால் தூங்குகின்றார்களா? அல்லது எத்தனை முறை வருகைதந்துள்ளார்கள்? எத்தனை தடவை பேசினார்கள்? எப்போது கடைசியாகப் பேசினார்கள்? என்பது கூட தெரியாது. பாராளுமன்ற பதிவுகளில் இருந்துதான் அத்தவற்றைத் தேடி அறிய வேண்டியுள்ளது.

ஆகவே, சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் குரல்கொடுக்காமல், எதிரிகளுடன் போராடாமல் முஸ்லிம் மக்கள் பிறநிதிகள் அநாகரிகமான முறையில் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும். அது முஸ்லிம் அரசியல் பற்றிய பிழையான விம்பத்தையே கட்டமைக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. ஆனால், இந்தப் பண்பு முஸ்லிம்களின் அரசியலுக்கு மட்டும் உரியதல்ல. தேசிய அரசியலில் இதுபோன்ற நடத்தைக் கோலங்கள் பலமுறை வெளிப்பட்டிருக்கின்றது. தமிழர் அரசியலில் கூட அவ்வப்போது தலைகாட்ட முனைகின்றது என்பதை மறந்து விடக் கூடாது.

நமது பாராளுமன்றத்திற்குள் எம்.பிக்கள் சண்டித்தனம் புரிந்ததைப் பார்த்திருக்கின்றோம். ஆண்-பெண் எம்.பிக்களிடையே நாகரிகமற்ற உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

உயரிய சபையில் தெருச்சண்டை பிடித்த மக்கள் பிரதிநிதிகளைக் கண்டுள்ளோம். போதைப்பொருள், பெண்கள், கொலைகளுடன் தொடர்புபட்ட எம்.பிக்கள் பற்றிய கதைகளும் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்திற்கு வெளியே தமது கோவணங்கள் கழன்று விழுந்தது கூட தெரியாமல், கிரீடங்களுக்காக அலைந்த எம்.பிக்கள், தலைவர்கள், அரசியல்வாதிகளை நாம் மறந்து விடவில்லை. துப்பாக்கிகளைப் பகிரங்கமாகக் காட்டி மிரட்டியவர்கள், கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், போதைப்பொருள் வர்த்தகத்தின் காவலர்கள், பெரும் சண்டியர்கள், மனித உரிமை மீறல்கள் பலவற்றுக்குத் துணை நின்றவர்கள் எம்.பிக்களாக, அமைச்சர்களாக, ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதும் கற்பனையல்ல.

ஆக, இந்தப் பண்பு முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி இலங்கை அரசியலுக்கே பொதுவான ஒரு ‘ட்ரெண்டாக’, போக்காக மாறியிருக்கின்றது. இதனை இப்போதே மாற்றியமைக்காவிட்டால், இதுதான் எதிர்காலத்தில் எழுதப்படாத அரசியல் நியதி என்றாகிவிடும். அதாவது நாகரிகமற்ற செயலில் ஈடுபடுதலும், சண்டித்தனமும், போதைப்பொருள் வர்த்தகமும், சபலப்புத்தியும், ஏமாற்றுதலும், டீல் செய்யும் திறனுமே ஒரு அரசியல்வாதிக்கான அடிப்படைத் தகுதிகளாக மாறிவிடும்.

அது நிகழ்ந்து விடாது தடுப்பதற்கு அரசியல்வாதிகளும் சமூகமும் முன்வர வேண்டும். இலங்கையைச் சிங்கப்பூராக, துபாயாக, ஐரோப்பாவாகப் பௌதீக அடிப்படையில் மாற்றியமைப்பதற்கு முன்னதாக, அரசியல், சமூக அடிப்படையில் நமது பண்புகளை, நாகரிகத்தை,விழுமியங்களை அந்த நாடுகளில் உள்ளதைப் போல மாற்றி அமைப்பது அவசியமாகும்.

–மொஹமட் பாதுஷா–

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights