தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதரின் வெற்றியும், வீழ்ச்சியும்.

0

மதராஸ் மாயவரத்தில் (தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில்) பிறந்தவர் கி. தியாகராஜன். இவரது அப்பாவின் பெயர் கிருஷ்ணாசாமி. அம்மாவின் பெயர் மாணிக்கம்மாள். இந்த ஜோடிக்கு மொத்தம் 3 குழந்தைகள். 2 மகன்கள் மற்றும் 1 மகள். இவர்களுள் மூத்தவர் தான் தியாகராஜன். தியாகராஜனின் அப்பா கிருஷ்ணசாமி தங்க நகை வேலையை தொழிலாக கொண்டிருந்தார் என்றும், இவர் திருச்சி அருகே வேலை செய்து வந்தார் என்றும் அறியப்படுகிறது.

தியாகராஜன் அவர்களுக்கு இளம் வயதில் இருந்தே படிப்பில் பெரிதாக நாட்டம் இருந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், இவர் பெரும்பாலும் இசை நிகழ்ச்சிகளை காண செல்வதில் அதீத ஈடுபாடு கொண்டிருந்ததே ஆகும். முக்கியமாக, பாடல்கள் மீது பேரார்வம் கொண்டிருந்த தியாகராஜன், மீண்டும் மீண்டும் ஒரே இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு, அப்பாடல்களை அச்சு பிசறாமல் பாடும் திறன் கொண்டிருந்தார்.

ஒருமுறை திருச்சியில் ஒரு நாடகசபா நடத்திய அரிச்சந்திரா நாடகத்தில் அரிச்சந்திரன் மகனாக நடிக்கும் வாய்ப்பு தியாகராஜன் அவர்களுக்கு ககிடைத்தது. அந்நாடகத்தை காண வந்த மதுரை பொன்னு அய்யங்கார் எனும் வயலின் இசை கலைஞர், தியாகராஜனின் திறமையை கண்டு வியந்தார். முக்கியமாக, இவரது குரல்வளத்தில் இருக்கும் திறனை கண்டு, இவருக்கு முறையாக இசை கற்றுக் கொடுக்க முன் வந்தார். இச்சமயத்தில் தான், நாடக ஆசானாக விளங்கி வந்த நடராஜன் என்பவர் தியாகராஜன் அவர்களுக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தார்.​கி.தியாகராஜன்-ல் இருந்து தியாகராஜ பாகவதராக…

கர்நாடக இசையை முறையே 6 ஆண்டுகள் கற்று தேர்ந்தார் தியாகராஜன். இவரது பாட்டு கச்சேரி ஒன்றில் பல சங்கீத மேதைகள் வாத்தியங்கள் வாசிக்க, 4 மணி நேரத்திற்கும் மேல், இசை கச்சேரி இனிதே நடந்து முடிந்தது.

கச்சேரி முடிந்த கையோடு, சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி அவர்கள் தியாகராஜன் அவர்களுக்கு ‘பாகவதர்’ எனும் பட்டத்தை வழங்கினார். அதன் பின்னர், தியாகராஜன் என அழைக்கப்பட்டு வந்த இவர், தியாகராஜ பாகவதர் என பரவலாக அழைக்கப்பட்டார்.

இளம் பருவத்தில் இருந்தே நாடகங்களில் நடிக்க துவங்கினார் தியாகராஜ பாகவதர். இவர் ஆரம்பத்தில் நிறைய பெண் வேடம் ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1920-களில் இவர் நடித்த ‘பவளக்கொடி’ நாடகம் பின்னாளில் 1934ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் இவர் அர்ஜுனன் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. அந்த காலத்தில் மதராஸ் மாகாணம் முழுக்க பல ஊர்களில் இத்திரைப்படம் 9 மாதங்களுக்கு மேல் ஓடியதாக அறியப்படுகிறது. தொடர்ந்து இவர் நடித்த சிந்தாமணி, அம்பிகாபதி, ஹரிதாஸ் போன்ற திரைப்படங்கள் வெற்றிப்பெற்றன.

குறிப்பிடும் வகையில், இவர் நடித்து 1944ல் வெளியான ஹரிதாஸ் எனும் திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு மேல் திரையரங்கில் ஓடி மாபெரும் வரலாற்று சாதனை படைத்தது. 3 தீபாவளியை கண்ட திரைப்படம் என புகழப்பட்ட திரைப்படமும் இதுவே ஆகும்.

​ஊடகவியலாளர் லட்சுமிகாந்தன்…

இப்படி துவக்கத்தில் இருந்தே ஏற்றம் மட்டுமே கண்ட MKT எனும் மாயவரம் கிருஷ்ணசாமி தீயகராஜன் அவர் வீழ்ச்சி அடைய முழு காரணமாக அமைந்தது, ஊடகவியலாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு. லட்சுமிகாந்தன் ஒரு சர்ச்சைக்குரிய ஊடகவியலாளராக அச்சமயத்தில் காணப்பட்டார்.

இவர் ‘சினிமா தூது’ எனும் வார இதழ் நடத்தி வந்தார். இதில், சினிமா நட்சத்திரங்கள் சார்ந்த அவதூறு செய்திகள் வெளியாகி மக்கள் இடையே நல்ல விற்பனையாகி வந்தது. சில நட்சத்திரங்கள் லட்சுமி காந்தனின் இந்த செயலை நிறுத்த பணம் கொடுத்து வந்ததாகவும், இதையே ஒரு தொழில் முறையாக கொண்டு லட்சுமி காந்தன் தொடர்ந்து நடிகர், நடிகைகள் சார்ந்து தவறான செய்திகளை பிரசுரம் செய்து வந்தார்.

ஒருக்கட்டத்தில் இவர் மீது கடும்கோபம் கொண்ட தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீமல்லு நாயுடு ஆகியோர், மதராஸ் கவர்னரை சந்தித்து, இவரது பத்திரிகை லைசன்ஸை தடை செய்ய கோரினர். விசாரணைக்கு பிறகு, லட்சமிகாந்தன் அவருடைய லைசன்ஸ் தடை செய்யப்பட்டது.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

லட்சுமி காந்தன் மீண்டும், இந்து நேசன் என்ற பெயரில் வேறொரு பத்திரிகை துவங்கி, அதே செயலில் ஈடுபட துவங்கினார். இம்முறை, தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் குறித்து பல அவதூறு செய்திகளை பரப்பினார்.

இச்சமயத்தில் தான் 1944ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி காலை புரசைவாக்கத்தில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்த லட்சுமிகாந்தனை ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினர். கத்திகுத்துக்கு ஆளாகி இருந்த நேரத்திலும், லட்சுமிகாந்தன் வக்கீல் மற்றும் போலீஸ் இடையே நடந்த சம்பவத்தை விளக்கி வாக்குமூலம் அளித்தார்.

பின்னர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமிகாந்தன் வயிற்றில் இரத்தப்போக்கு நிற்காத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

​தோல்வியில் முடிந்த மேல்முறையீடு, உறுதியான தண்டனை…

சந்தேகத்தின் பெயரில் போலீசார் 6 நபர்களை கைது செய்தனர். இதில், தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீமல்லு நாயுடுவும் அடங்குவர். வழக்கு விசாரணையின் முடிவில், பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் உட்பட நால்வர் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்து பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் மேல்முறையீடு செய்தனர். மதராஸ் உயர் நீதிமன்றமும் இவர்களது தீர்ப்பை உறுதி செய்தது.

தியாகராஜ பாகவதர் விடுதலை….

பின்னர், அன்று உட்சபட்சமாக கருதப்பட்ட லண்டன் Privy Counsil-ல் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் பிரைவி கவுன்சில் தீர்ப்பு அளிப்பதற்குள் இவர்கள் ஏற்கனவே 30 மாதங்கள் சிறையில் கழித்திருந்தனர். இதன் பின், இவர்கள் குற்றமற்றவர்கள் என பிரைவி கவுன்சில் தீர்ப்பை உறுதி செய்தது.

விடுதலைக்கு பின் தியாகராஜ பாகவதர் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. சில படங்களில் நடிக்க பாகவதர் ஒப்புக்கொள்ளவும் இல்லை. 1944ல் சிறைக்கு செல்லும் முன் இவர் 10 படங்களுக்கும் மேல் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற பிறகு, தனது வாழ்நாளில் இவர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கையே 14 என்ற எண்ணிக்கையில் சுருங்கியது.

தியாகராஜ பாகவதரின் இறப்பு

வழக்கு நடத்தவே தியாகராஜ பாகவதர் தனது சொத்தில் பெரும் பகுதியை செலவழித்தார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. தனது கடைசி நாட்களை இரத்தக்கொதிப்பு மற்றும் நீரிழிவு பிரச்சனைகளில் அவதியுற்று வந்தார்.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இவர் பொள்ளாச்சியில் ஒரு இசை கச்சேரி நடத்தியதாகவும், அங்கே இவரது கச்சேரிக்கு வந்த ஒருவர் நீரிழிவு குணமாக அளித்த மருந்து சரியாக வேலை செய்யாமல், இவரது உடல்நிலை மேலும் மோசமடைய காரணம் ஆனது என்றும் அறியப்படுகிறது.

1959, அக்டோபர் 22ம் நாள் மதராஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகவதர் ஒரு வாரம் சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நவம்பர் 1ம் தேதி மாலை காலமானார். இவர் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் 1960ல் வெளியான ‘சிவகாமி’ ஆகும்

 

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights