உணவு பெற முயன்ற 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சம்பவம்

0

காசா நகரில் வியாழன் (29) அன்று உணவுப் பொருட்களைப் பெற முயன்ற ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்கான அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஹமாஸுடனான இஸ்ரேலின் போரின் போது நிகழ்ந்த மிக மோசமான துயர சம்பவங்களில் இது ஒன்றாகும்.

காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின்படி, பசியால் பாலஸ்தீனிய பொதுமக்கள் உணவுக்காக உதவி லொரிகளைச் சூழ்ந்திருந்த போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 112 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 760 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முற்றுகையிடப்பட்ட என்கிளேவ் (Enclave)பகுதியில் பெரும் பசி மற்றும் கடுமையான வறுமையின் பின்னணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையானது சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த ஒரு சுயாதீன விசாரணை தேவை என்று கூறியுள்ளது.

பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அந்த அழைப்பை ஆதரித்துள்ளன.

என்ன நடந்தது? – சாட்சியங்கள் தெரிவித்தது என்ன?

மேற்கு காசாவில் உள்ள ஹாரூன் அல் ரஷீத் (Haroun Al Rasheed) வீதியில் குழப்பமான காட்சிகளுக்கு மத்தியில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.

அங்கு பசியால் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு உதவிக்காக திரண்டிருந்தனர்.

கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளால் வியாழன் காலை 4.30 மணியளவில் அனுப்பப்பட்ட குறைந்தது 18 உணவு லொரிகளின் கான்வாய் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புதிதாக வந்த உதவி லொரிகளை சுற்றி திரண்டிருந்தனர்.

இதன்போது, இஸ்ரேலியப் படைகள் விரைவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சாட்சியங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன.

உதவிக்காக வந்த லொரிகள் அப்பகுதியில் இருந்து தப்பிக்க முயன்றன, தற்செயலாக திரண்டிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதனால், காயங்களும் இறப்புகளும் மேலும் மேலும் அதிகரித்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் சி.என்.என். செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளன.

சன நெருக்கடியால், ஆம்பியூலன்ஸ்கள் அவசர உதவிகள் தேவைப்படுபவர்களை அடைய சிரமப்பட்டன,

காசாவில் உள்ள உள்ளூர் பத்திரிகையாளர் காதர் அல் ஜானூன், இஸ்ரேலிய தீயில் இருந்து தப்பிக்க முயன்ற உதவி லொரிகள் மக்கள் மீது மோதியதன் விளைவாக பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்தாக கூறியுள்ளார்.

இஸ்ரேலின் பதில் என்ன?

பாலஸ்தீனியர்கள் உதவி லொறிகளை கொள்ளையடிக்க முயற்சித்ததில் இருந்து இந்த சம்பவம் தொடங்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை ஆரம்பத்தில் தெரித்தது.

“இன்று அதிகாலையில் (வியாழன்), வடக்கு காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவி லொரிகள் நுழையும் போது, ​​காசான் குடியிருப்பாளர்கள் அதனை சுற்றி வளைத்து, விநியோகிக்கப்பட்ட பொருட்களை சூறையாடினர்.

இந்த சம்பவத்தின் போது, ​​ஏற்பட்ட நெருக்கடியில் டஜன் கணக்கான காசா மக்கள் காயமடைந்தனர்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை சி.என்.என். செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது.

பின்னர் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், காசாவில் வியாழன் அன்று உதவி லொரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு தனித்தனி சம்பவங்கள் இருப்பதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.

முதலில், லொரிகள் வடக்கு காசாவில் நுழைந்ததாகவும், மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டதாகவும், பின்னர் லொரிகள் மோதியதில் பலர் காயமடைந்தாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள் ஒரு குழு இஸ்ரேலியப் படைகளை அணுகியது, பின்னர் அவர்கள் பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும், காசாவில் ஒரு உதவித் தொடரணியைச் சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தைக் கலைக்க இஸ்ரேலிய படைகள் எச்சரிக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படை ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது, இது பல மீட்டர் தொலைவில் கூட்டத்திற்கு இணையாக ஒரு தொட்டி ஓட்டுவதைக் காட்டுகிறது.

Oruvan

காசாவில் மனிதாபிமான நிலை என்ன?

காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் செவ்வாயன்று எச்சரித்துள்ளது.

காசா முழுவதும் குறைந்தது 576,000 மக்கள் “பேரழிவு மற்றும் பட்டினியின் பேரழிவு நிலைகளை எதிர்கொள்கின்றனர்” என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐ.நா. உலக உணவுத் திட்டம் (WFP) “மே மாதத்திற்குள் உண்மையான பஞ்சம் ஏற்படும் என்றும் 500,000 பேர் ஆபத்தில் உள்ளனர்” என்றும் எச்சரித்தது.

Oruvan

சர்வதேச சமூகம் என்ன சொல்கிறது?

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல் தெரிவித்தது மற்றும் பதில்களுக்காக இஸ்ரேலை அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறியது.

இன்று மட்டுமல்ல, கடந்த ஐந்து மாதங்களில் இந்த மோதலின் போது பல அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இருந்து இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்பில் இருந்தோம், விசாரணை நடந்துவருகிறது என்பதை புரிந்துகொண்டோம் – என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையால் தான் திகைப்படைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்கவும் வலியுறுத்தினார்.

அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஒரு அறிக்கையில், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு அவசர உதவி தேவை, முற்றுகையிடப்பட்ட வடக்கில் உள்ளவர்கள் உட்பட ஏனையவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு வாரத்திற்கும் மேலாக உதவி வழங்க முடியவில்லை என்றார்.

சவுதி அரேபியாவும் இந்த சம்பவத்தை கண்டித்தது, சர்வதேச சமூகத்தை “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க இஸ்ரேலைக் கட்டாயப்படுத்துவதன் மூலம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க” அழைப்பு விடுத்தது,

அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் “சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு” அழைப்பு விடுத்தது.

இந்த மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்துவதாக கொலம்பியா அறிவித்தது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் செஜோர்னே, என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணைக்கான அழைப்புகளை ஆதரித்தார். பிரெஞ்சு வானொலி நிலையமான பிரான்ஸ் இண்டரிடம் பேசிய செஜோர்னே நிகழ்வுகளை “நியாயப்படுத்த முடியாதது” என்றார்.

முக்கிய தருணத்தில் அரங்கேறிய சம்பவம்

வியாழன் நடந்த சம்பவம் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் நடந்த மிகக் கொடிய ஒற்றைச் சம்பவங்களில் ஒன்றாகும்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சண்டையை இடைநிறுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் காசாவில் மனிதாபிமான உதவியை அனுமதிக்கும் ஒரு முக்கிய தருணத்தை எட்டிய நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

காசாவில் வாகனங்களில் இருந்து உதவி சேகரிக்கும் மக்கள் கொல்லப்படுவது, நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுக்கும் என்று ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத் அல்-ரிஷேக் எச்சரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights