ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.(22.02.2012-22.02.2024)

0

மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ… அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் 22.02.2012 கொல்லப்பட்டு விட்டார்!
”2001-ம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்து கொள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன்.

அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. சிறீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறி விட வேண்டும் என்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன்.
ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னைப் பார்த்ததும் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். வெளிச்சக் குண்டுகளை வீசினர். ‘நான் பத்திரிகையாளர்’ என்று கத்தினேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனேட் வைத்து தாக்கினார்கள்.
அந்த இரத்தக் காயத்துடன் முன்னே நடந்து வந்தேன். நிற்க முடியவில்லை. இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அப்போது என் அருகில் வந்த படை வீரர்கள் பலமாகத் தாக்கத் தொடங்கினார்கள்.
என் உடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கினார்கள். நான் மூச்சுவிடக் கஷ்டப் பட்டுக் கொண்டும், தலையில் கண்ணில் காயத்துடனும் நெஞ்சில் வெடிக்காயத்துடனும் இருந்தேன். அப்படியே தூக்கி கனரக வாகனத்தில் வீசினார்கள்.

அந்த மக்கள் பட்ட அவலத்தை விட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை என்றாலும் எனது அனுபவம் தமிழர்களின் வேதனையைச் சொல்லப் போதுமானது” என்று, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் மேரி கொல்வின்.
தமிழர்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை பேசி வந்த போது சொற்பமாக ஒலித்த ஐரோப்பியக் குரல்களில் அழுத்தமானது இவருடையது.
எங்கு உள்நாட்டு யுத்தம் நடந்தாலும் அங்கே மேரி கொல்வின் சென்று விடுவார். அதனாலேயே ‘போர்ச் செய்தியாளர்’ என்ற பட்டம் தாங்கினார்.
2000-ம் ஆண்டில் தான் அவரது பார்வை இலங்கைப் பக்கமாகவும் திரும்பியது. நேரடியாக ஈழம் வந்தார். அப்போது, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தான் அவரது இடது கண்ணின் பார்வை முழுமையாகப் பறிபோனது.

அன்று முதல், கறுப்புத் துணியைக் கண்ணில் கட்டிக் கொண்டு நடமாடினார். இந்தத் தாக்குதலை புலிகள் கண்டித்ததால், இவரை ‘புலி ஆதரவாளர்’ என்று இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் தமிழர் பிரச்சினையை எழுதுவதில் தொடர்ந்து ஆர்வமாக இருந்தார்.
நான்காம் கட்ட ஈழப் போர் என்று அழைக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ நேரத்தில் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை, ஐ.நா. அமைப்புக்கும் புலிகளுக்கும் நடந்த போது இணைப்பாளராக இருந்தவர் மேரி கொல்வின் தான்.
வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்களான நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மேரி கொல்வினின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்துத் தான் வெளியே வந்தார்கள்.
ஆனால், கோத்தபாய ராஜபக்ச – சரத் பொன்சேகா கூட்டணி, வாக்குறுதியை மீறி அந்த இருவரின் உயிரைக் குடித்தது.

அது ஓர் அவசரமான அழைப்பு. ஆனால், சில மணிநேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை…..” என்று தொடங்கி மேரி கொல்வின் எழுதிய கட்டுரை இன்றைக்கும் போர்க் குற்றத்தின் சாட்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இதன் பிறகும், அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அவர் பொருட்படுத்தவில்லை.
எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கை, நம் அனைவருக்குமான தூண்டுதல்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் “A Private War” திரைப்படமும் வெளியே வந்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights