யாழ். முற்றவெளி முற்று முழுதாக மக்களினால் நிரம்பியிருந்தது, இசையினையும் நிகழ்ச்சிகளையும் காணக் கூடிய மக்களின் எண்ணிக்கை அளவிட முடியாதது.அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த வீரகேசரி கூடிய மக்களின் தொகை ‘ஐந்து இலட்சம்’ எனச் செய்தி வெளியிட்டது. (நிகழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்தவன் என்ற முறையில் அரை மில்லியன் என்ற தொகை சற்று அதிகம் தான், பாதியளவு இருக்கலாம் என எண்ணுகின்றேன்).
இலங்கைப் படையினர் நிகழ்வினை அச்சுறுத்திக் குழப்ப முயன்ற போது, சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தனவே தவிர, மற்றும் படி, நிகழ்வு இறுதி வரை அமைதியாகவே இடம் பெற்றது.
நிகழ்வினை ஒழுங்குபடுத்திய மாணவர்களில் நானும் ஒருவன் என்பதால், மேடை உட்படப் பல இடங்களுக்கும் சென்று வந்ததில் மது போதையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. எந்தவொரு கெட்ட சொல்லும் எங்குமே ஒலிக்கவில்லை. நள்ளிரவில் நிகழ்ச்சி முடிந்த போதும், நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள் உட்பட யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.
தடுப்பரண்கள் எதுவுமில்லை. வெறும் கயிறு மட்டுமே மேடைக்கு முன் கட்டப்பட்டு இருந்தது. கூடியிருந்த இலக்கக் கணக்கான (இலட்சக் கணக்கான) இளைஞர்களில் யாருமே கயிற்றினைத் தாண்டி வர முயலவில்லை. அப்படிக் கட்டுக் கோப்பாக இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
23.04.1990 இல் ஒரு திங்கள் கிழமையன்று. இசை நிகழ்ச்சியினை நடாத்தியது தேனிசைச் செல்லப்பா.
இந்தியப் படை வெளியேறிய பின்பு, இலங்கைப் படையுடனான சண்டை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வு அது.
புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. புலிகளின் மாணவர் (SOLT) அமைப்பிடமே நிகழ்வினை ஒழுங்குபடுத்தி, மக்களை அமர வைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
போராளிகள் மேடைப் பாதுகாப்பினையும், வெளிப் பாதுகாப்பினையும் மட்டுமே முதலில் பார்த்துக் கொண்டனர். அப்போது முற்றவெளிக்கு அருகே கோட்டையில் குடியிருந்த இலங்கைப் படையினரின் கண் முன்னமே நிகழ்வு நடந்தது. அதனால், முதலில் சீருடை அணிந்த/ ஆயுதம் தரித்த புலிகள் தமது இருப்பினை மறைத்து, ஊர்திகளுக்கு உள்ளேயும், மறைவான இடங்களிலும் மட்டுமே, இருந்தனர்.
படையினரும் முதலில் ஆயுதங்கள் எதுவும் இன்றி கோட்டை மதில் மீது வந்து அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மக்கள் கூடக், கூட, படையினருக்குப் பொறாமை வந்திருக்க வேண்டும். சிறிது, சிறிதாக ஆயுதங்களை மக்கள் கூட்டம் முன் காட்டிக் கொண்டு வந்தனர். அதன் பின்னரே புலிகளும் ஆயுதங்களுடன் சுற்றிவந்து வெளிப் பாதுகாப்பினைப் பார்த்துக் கொண்டனர்.
இரு தரப்பினரும் சில மீற்றர் இடை வெளியில் ஆயுதங்களுடன் நேருக்கு, நேர் நீட்டியபடி இருந்தனர். இசை நிகழ்ச்சி தொடங்கியது. மக்கள் எதனையும் பொருட் படுத்தவில்லை, இசையில் மூழ்கிக் கிடந்தனர் இதே, யாழ் மக்கள் தான்.
நிகழ்வின் நோக்கமும், கருப்பொருளும், அப்படிப்பட்டவை. நம்புங்கள் இதே முற்றவெளிதான். முற்றவெளியில் அன்று ஒலித்த தேனிசை செல்லப்பாவின் குரல் இன்றும் காதில் ஒலிக்கின்றது- “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்”.
ஆம், அன்று அங்கு கூடிய மக்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது, அதனால், ஒழுங்கும் இருந்தது, நேற்று முற்றவெளியில் அடிதடி செய்தோருக்கு பொதுவான இலக்கும் இல்லை, தனிப்பட்ட இலக்குகளும் இல்லை. இலக்கில்லாத பயணங்கள் தறி கெட்டே போகும்.
(நன்றி..இலங்கநாதன் குகநாதன்)