நாட்டுக்கான ஒற்றுமையின் சாத்தியம்?

0

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையாக அறிவித்துள்ளேன். எந்தத் திட்டங்களையும் நான் மறைக்கவில்லை.

நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தபோது, நான் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி கடுமையான தீர்மானங்களை எடுத்து அவற்றை உறுதியாகச் செயற்படுத்தியுள்ளேன்” இவ்வாறு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது புதிய கூட்டத்தொடரை (07.02.2024) ஆரம்பித்து வைத்த கொள்கை பிரகடன உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தனது சம்பிரதாயபூர்வமான உரையைத் தவிர்த்திருந்தார்.

சுதந்திர தின வைபவ உரை என்பது ஒரு ஜனாதிபதிக்கு இருக்கின்ற க ௌரவமும் பாரம்பரியமுமான ஒன்று.

ஆனால் அதனை அவர் தவிர்த்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உண்மையில் அவர், நாட்டுக்காக ஏதோ ஒன்றைச் சொல்லியிருக்கிறார் என்பதே இந்த இடத்தில் விளங்கிக் கொள்ளப்படவேண்டும். ஒவ்வொரு ஜனாதிபதியும் வெற்றி முழக்கத்துக்கான அல்லது தம்மைப்பற்றி தம்பட்டம் அடிப்பதற்கான இடமாக அந்த இடத்தினைப் பயன்படுத்திக் கொள்வது வழமை. ஆனால், இம்முறை அது நடைபெறவில்லை.

இருந்தாலும் சுதந்திரதினத்தின் பின்னர் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அங்கு தன்னுடைய நிலைப்பாட்டையும் நாம் எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும், நாடு அடைந்துவரும் முன்னேற்றங்களையும் நமக்குத் தேவையானவைகளையும் செல்லியிருக்கிறார்.

அதேநேரத்தில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையானது நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் எந்த ஒரு ஆழமான கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவில்லை என்பது இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்கள் பற்றியும், ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பிலும், மக்கள் விடுதலை முன்னணி தொடர்பிலும் தன்னுடைய மன ஆதங்கங்களைக் கொட்டித் தீர்ப்பதற்கான உரையாகவே அது அமைந்திருந்தது.

“ஒன்பது மாகாணங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியலமைப்பில் மாகாண சபை அதிகாரங்களின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவோம். தொழிற்கல்வி, விவசாயம் போன்ற துறைகளை உதாரணமாகக் கூறலாம்.

அதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த முடியும். மாகாணங்களுக்கு இடையில் பொருளாதாரப் போட்டித் தன்மையை உருவாக்குவதன் மூலம், ஒன்பது மாகாணங்களும் ஒரே நேரத்தில் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்று சில கருத்துக்களுடன், தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமைப்படுதலைக்குறிப்பிட்டு முடித்துக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும், பாராளுமன்றத்தில் அவர் கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றுவதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியினர் வெளியேறி தங்களது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர்.

ஜனாதிபதி தன்னுடைய பெருந்தன்மையைக் காண்பிக்க முனைகையில் எதிர்க்கட்சித் தலைவர் அணி தம்முடைய தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனாதிபதி தன்னுடைய உரையில் ஒற்றுமையைப் பற்றி விளக்கமளித்திருக்கிறார்.

அவ்வேளையிலேயே ஒற்றுமைக்குலைவு வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றுமைக்குலைவும், கருத்தொருமைப்பாடின்மையும் இலங்கையின் வரலாற்றில் இன்று நேற்று உருவான விடயமல்ல.

இந்தக் கருத்தொருமைப்பாடின்மை காரணமாகவே இத்தனை அரசியல் கொள்கைகளும், அரசியல் கட்சிகளும் உருவாகின. இதற்கு தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு பார்க்கப்படத் தேவையில்லை.

இதனாலேயே இலங்கை நாட்டில் இன்றும் இன, வர்க்க பேதப் பிரச்சினைகள் தொடர்வதாகச் சொல்ல முடியும். ஒருவர் ஒன்றுக்காக நடவடிக்கை எடுத்தால் மற்றையவர் அதனை எதிர்ப்பதும் எரிப்பதும் குழப்புவதும் இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.

(தமிழ் மக்களது பிரச்சினைகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் கொண்டுவரப்பட்ட தீர்வுகளையும் எடுத்துக்காட்டலாம்.) வரலாற்றில், 1949இல் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸில் இருந்து சிலர் பிரிந்து சமஷ்டி கட்சியை உருவாக்கிக் கொண்டனர். 1951ல், ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

இது சுதந்திரம் கிடைத்த சில வருடங்களில் உருவான பிரிவாகும். அதேபோன்று, அண்மைய உதாரணமாகச் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தனிவழி சென்ற மஹிந்த அணியினர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கின் கொண்டனர்.

அதேநேரத்தில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிய சஜித் பிரேமதாச அணியினர், ஐக்கிய மக்கள் சக்தி என்ற தனியொரு அணியை உருவாக்கிக் கொண்டனர். பிரிவுகளுக்கும் கருத்தொருமைப்பாடின்மைக்கும் இதுபோன்று பல உதாரணங்களைக் கூற முடியும். இவ்வாறான நிலையில், நாம் எதனை அடையப்போகிறோம்.

நமக்காகக் காத்திருப்பது என்ன என்பதனையே நாம் சிந்திக்க வேண்டுமாக இருந்தாலும் தவறவிடுகிறோம். ஒரு ஜனாதிபதியோ, எதிர்க்கட்சித் தலைவரோ நாட்டைப்பற்றிச் சிந்திப்பதனைத் தவிர்த்துத் தனிப்பட்ட கோப தாபங்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கிச் செயற்படுவது நாட்டுக்குப் பாதகமானதே. இந்த இடத்தில், கடந்த கால தவறுகளைத் தயக்கமின்றி சீர்தூக்கிப்பார்த்து, அவற்றிலிருந்து பாடம் கற்று, நாட்டுக்கான தேசியப் போக்கை மீண்டும் உருவாக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்காத வரை நாடு தழுவிய தேசிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த அரசியல் தலைவர்களுக்கு முடியாது என்றே சொல்லிக்கொள்ள முடியும். அவ்வாறானால் அவர்களுக்கு அந்த ஞானம் இல்லை என்றே அர்த்தப்படும். உலகின் மற்றைய காலனித்துவ நாடுகளைப் போலவே இலங்கையும் காலனித்துவவாதிகளின் கைகளால் பெரும் துன்பங்களை அனுபவித்தது. 1505-1948 வரை நம்மைச் சுரண்டிய மற்றும் சூறையாடிய காலனித்துவ ஆட்சியாளர்கள் மீது 1948க்குப் பின் தொடரும் நமது துன்பங்களுக்குப் பழி சுமத்துவது தவறாகும்.

தங்களது தவறுகளை மறைப்பதற்காகவே இது நடைபெறுவதாகவும் கொள்ளமுடியும். அது போன்றே அண்மைய காலங்களில் நடைபெற்றுவருகின்ற தேசிய அரசியல் செயற்பாடுகளும் இருந்து வருவதாகக் கொள்ளலாம். கடந்த காலப் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் மறந்து நாட்டின், மக்களின் தேவையறிந்து செயற்பட முனைவதே காலத்தின் தேவையாகும்.

இந்த இடத்தில், பகீஸ்கரிப்பதும், வெளியேறுவதும், வெளிநடப்புச் செய்வதும் நாட்டிற்குப் பயன் விளைவிக்குமா என்பது நினைவில் கொள்ளப்படவேண்டும்.

இவ்வாறான நிலையில்தான், தமிழ் மக்களது அரசியல் தீர்வு விடயம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குள், சிங்களக் கட்சிகளின் ஒருமைப்பாடின்மைகளுக்கு மத்தியில் பெரிது படுத்தப்படும் விடயமாக இல்லை என்பது புலப்படுகிறது. நாட்டின், நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினை முன்வைக்க முடியாது. வெளிநடப்பொன்றே தீர்வு, எதிர்ப்புகளைக் காண்பிப்பதொன்றே முடிவென்றெண்ணும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்ற நாட்டில் எவ்வாறான எதிர்பார்ப்புகளை நாம் கொள்ளமுடியும்.

ஜனாதிபதி உள்நாடு, வெளிநாடு என்ற வித்தியாசமின்றி போகும் இடமெல்லாம், பேசும் நேரத்திலெல்லாம் ஒற்றுமையைப் பற்றியே பேசும் நிலையை உருவாக்கியது யார் என்று மாத்திரமே நாம் கேட்டுக் கொள்ள முடியும்.

1948இல் முடிவுக்கு வந்த ஏறக்குறைய நான்கரை நூற்றாண்டு காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தபோது, ஏற்படுத்தத் தவறிய ஒற்றுமை எதிர்வரும் காலத்திலேனும் ஏற்படுமா என்பது சந்தேகமே.

வரலாற்றில் தவறுகளை இழைத்தவர்களாகவே வாழப்பழகிப்போன இலங்கையில் இன மற்றும் சமூகப் பிளவுகளைக் களைந்து இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான மற்றும் கலாசாரங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுமா, அரசியல் ஒற்றுமை உருவெடுக்குமா? காலத்தின் கைகளில் விட்டுவிடுவோம்.

லக்ஸ்மன்—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights