சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் – சந்தேகநபர் கைது!

0

மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாகவும் அவர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபர் வந்த முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் 42 வயதுடைய வதுரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights