பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடித்தது.
வாக்கெண்ணும் பணிகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரச் சுமையிலிருந்து மீள உதவும் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய அனைவரும் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முன்பு அறிவித்தபடி நாடு முழுவதும் சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நேரத்தை நீடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
பாகிஸ்தானின் பெரும்பாலான வாக்குச்சாவடி நிலையங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
எனினும், மக்கள் வரிசையில் நிற்கும் இடங்களிலும், தேர்தல் ஆணையம் இரண்டு மணி நேரம் வாக்களிப்பை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் சந்தேகத்திற்கிடமான ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.