இலங்கைக்கு ஏமாற்றம் ; 3 பந்துகள் மீதம் இருக்க மே.தீவுகளிடம் தோல்வி

0

இலங்கைக்குக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் கடுமையாக மோதிக்கொள்ளப்பட்ட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 இரண்டாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்து ஏமாற்றத்திற்குள்ளானது.

232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் ஸ்டெஃபான் பஸ்கால் (33), ஸ்டீவன் வெடபேர்ன் ஆகிய இருவரும் 49 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பஸ்காலைத் தொடர்ந்து ஜொஷுவா டோன் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வெடபேரன், ஜொர்டன் ஜோன்சன் (39) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

வெடபேர்ன் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும், 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் (184 – 4 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் ஓட்ட வேகமும் வெகுவாக குறைந்தது.

ஆனால், நேதன் சோலி (27 ஆ.இ.), தாரிக் எட்வர்ட் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 26 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தினுர கலுபஹன, சினேத் ஜயவர்தன ஆகிய இருவரும் தலா 39 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் இலங்கை 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.

தினுர கலுபஹன, சுப்புன் வடுகே, மல்ஷா தருப்பதி ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதாலேயே இலங்கை நல்ல நிலையை அடைந்தது.

இலங்கையின் ஆரம்பம் நான்காவது தடவையாக சிறப்பாக அமையவில்லை.

விஷேன் ஹலம்பகே (0), அணித் தலைவர் ஸ்னேத் ஜயவர்தன (11) ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறினர்.

லீக் சுற்றில் 3 போட்டிகளில் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற புலிந்து பெரேரா இந்தப் போட்டியில் ஓரளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 24 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து சுப்புன் வடுகே 31 ஓட்டங்களையும் தினுர கலுபஹன 53 ஓட்டங்களையும் மல்ஷ தருப்பதி 42 ஓட்டங்களையும் பெற்று அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

அவர்களை விட ஷாருஜன் சண்முகநாதன் 14 ஓட்டங்களையும் விஹாஸ் தெவ்மிக்க 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு 23 உதிரிகள் கிடைத்தது.

பந்துவீச்சில் ரனெய்க்கோ ஸ்மித் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் எட்வர்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights