ஹைதராபாத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இந்தியாவின் சுழலா, இங்கிலாந்தின் அதிரடி மட்டை வீச்சா?

0

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐசிசிஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்ததொடர் இடம் பெற்றுள்ளதால் இரு அணிகளும் வெற்றிகளை குவிக்க தயாராக உள்ளன.

கடைசியாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-2 என இழந்திருந்தது. அதன் பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழக்கவிலை. இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி உள்நாட்டில் 16 டெஸ்ட் தொடர்களை வென்று குவித்துள்ளது. இதில் 7 தொடர்களை முழுமையாக கைப்பற்றியதும் அடங்கும். ஒட்டுமொத்தமாக கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நிலையில் மூன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது.

இது 1980 காலக்கட்டத்தில் மேற்கு இந்தியத்தீவுகளும், அதன் பின்னர் ஆஸ்திரேலியாவும் செலுத்திய ஆதிக்க போக்குக்கு இணையாகவே கருதப்படுகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததில் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதனால் மீண்டும் ஒரு முறை இந்த சுழற்பந்து வீச்சு கூட்டணி எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரும் இருப்பது கூடுதல் பலம்.

பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் ஆகியோர் டாப் ஆர்டரில் சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அவரது இடத்தில் கே.எல்.ராகுல் இடம் பெறக்கூடும். நடுவரிசையில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கக்கூடும்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்செயல்படக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் பிரதானமாக இருப்பார்கள். 3வது சுழற்பந்து வீச்சாளரின் தேவை இருக்கும் பட்சத்தில் அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்படக்கூடும்.

இந்திய அணி சுழற்பந்து வீச்சை பிரதானமாக கொண்டுள்ள நிலையில், இங்கிலாந்துஅணியானது அதிரடி பேட்டிங் அணுகுமுறையுடன் டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறது. அந்த அணி கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றியிருந்தது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியாக விளையாடும் பாணியான ‘பாஸ்பால்’ சிறந்த முடிவுகளை பெற்றுக்கொடுத்தது.

எனினும் இந்த அணுகுமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்திருந்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள், இந்திய சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொண்டு தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ்ஆண்டர்சன் ஆகியோரது அனுபவங்கள் இங்கிலாந்து அணிக்கு, இந்திய மண்ணில் பெரிதும்உதவக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஜாக் லீக்,ரெஹான் அகமது ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

அணிகள் விவரம் இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, அவேஷ் கான்.

இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் கிராவ்லி, ரெஹான் அகமது, பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், மார்க் வுட்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights