சிங்கள சவேந்திர சில்வாவுக்கு செங்கம்பள வரவேற்பு: ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!

0

தமிழீழப் போராட்டத்தைக் குழப்பியடிக்கும் மோசடிகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகின்றன. மாவீரர் நாள்(?) கேலிக் கூத்துக்குப் பின் இரண்டகர்கள் இப்போது அரசியல் சதுரங்கத்தில் பிரகடனக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு தூண்’ கொள்கை’ப் புகழ் ஜிடிஎஃப் சுரேன் சுரேந்திரனின் கதையாடலில் இமய மலையிலிருந்து உருட்டப்பட்டுள்ள இமாலயப் பிரகடனம்! இதை அறியாத்தனமாக யாராவது ஆதரித்து விட்டால் அவர்கள் அந்த இமாலயத் தவற்றுக்காக வருந்துவதற்குப் பொருத்தமான பெயர்தான்!

thiyagu சிங்கள சவேந்திர சில்வாவுக்கு செங்கம்பள வரவேற்பு: ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!அடுத்து இந்திய இந்துத்துவ ஆளும் கும்பலின் ஆசியோடு சென்னையிலிருந்து விரியப் போவது ‘தமிழ்நாட்டு மக்களின் கூட்டுப் பிரகடனம்’.’ இரண்டகர்களுக்கு இனிய முகம், இது முதிய முகம் என்று தன் முகத்தை இரவல் (அல்லது வாடகைக்கு) கொடுத்திருப்பவர் பழ. நெடுமாறன். கட்டியம் உரைக்க இருக்கவே இருக்கிறார் காசி ஆனந்தன். நெடுமாறன் தலைமையில்தான் கூட்டுப் பிரகடனத்துக்கு மாநாடு கூட்டப் போகிறார்கள். ‘ஐயா’’ இந்த வயதில் இந்த அளவுக்குத் தாழ்ந்து போவார் என்று நம்புவது உலகத் தமிழர்களுக்குக் கடினமாகத்தான் உள்ளது.

காசி ஆனந்தனும் பழ. நெடுமாறனும் தமிழீழத்துக்காக எந்தக் காய் நகர்த்துவதாக இருந்தாலும் அதற்கு முன் உலகத்தமிழர்களிடம் அவர்களின் அண்மைய மோசடிக்கு வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். பிரகடனம், பிலாக்கனம் எல்லாம் பிறகுதான்!

இராசபட்சேக்கள் நடத்திய இனவழிப்புக்கு முழுக்க முழுக்க உடந்தையாக இருந்த இந்திய அரசு, பன்னாட்டு அரங்கிலும் இனவழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளானோரை சூழ்ச்சித் திறத்தோடு இன்றளவும் பாதுகாத்து வரும் இந்திய அரசு… இப்போதும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்கு ‘யாமிருக்க பயமேன்?’’ என்று சேதி சொல்லியிருக்கிறது. அதற்கு இந்திய சாணக்கியம் கண்ட வழிதான் சிங்கள இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்குப் படாடோபமான வரவேற்பு!

தமிழினவழிப்புப் போரில் கோழைத்தனமாக அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்த சிங்களப் படைப் பிரிவுகளின் முதன்மைத் தளபதிகள்  ஐந்தாறு பேரில் ஒருவர்தான் சவேந்திர சில்வா. இவர் தலைமையிலான படைப் பிரிவுகள் இழைத்த போர்க் குற்றங்கள் ஐநா அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. அவரே இந்தக் குற்றங்களைத் தன் வீரச் செயல்களாகப் பீற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை.

சவேந்திர சில்வாவின் போர்க் குற்றங்கள் சிங்களத்தின் தமிழினவழிப்புப் பெருங்குற்றத்தில் முக்கியக் கூறுகளாகும். யுகோஸ்லாவிய இனக்கொலைகளில் ஸ்லோபடான் மிலோசெவிக்கின் தளபதிகள் பன்னாட்டு நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டது போல் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர்தான் சவேந்திர சில்வாவும்.

சவேந்திர சில்வாவின் கொடுங்குற்றப் புகழ்’ உலகெங்கும் பரவிக் கிடக்கிற ஒன்று. செவ்விந்தியர்களை இனவழிப்புச் செய்து நிறுவப்பெற்றதும், உலகெங்கும் பற்பல இனவழிப்புகளை முன்னின்று நடத்தியதும், இன்றளவும் இசுரேலின் நெட்டன்யாகு வரை எத்தனையோ இனக்கொலைக் குற்றவாளிகளுக்கு ஆபத்பாந்தவனுமாகிய அமெரிக்காவே சவேந்திர சில்வாவின் போர்க் குற்றங்களைக் கேட்டு ‘அதிர்ச்சி’யுற்று’ அவர் அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகளுக்குப் பன்னாட்டு அரசுகள் பயணத் தடை விதிக்கப் பரிந்துரைத்தார். சிங்கள அரசோ இந்தக் குற்றவாளிகளை ஐநாவிற்கும் பன்னாட்டு அரசுகளுக்கும் தூதுவர்களாக அனுப்பி அவர்களுக்கு அரசதந்திரச் சட்டக் காப்பு வழங்கியது. சவேந்திரா கையில் தமிழர்களின் குருதிக் கறையோடு ஐநாவுக்குச் சென்றதும், ஐநா அமைதிக் காப்புப் படைகளில் பொறுப்பேற்றதும் எவ்வளவு பெரிய கொடுமை!
Mulli 2009 சிங்கள சவேந்திர சில்வாவுக்கு செங்கம்பள வரவேற்பு: ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திய போருக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கும் வழிகாட்டலுக்குமான காரணங்களை ஆய்வு செய்த நோர்வே நாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டிய செய்தி: இந்திய அரசு இந்திய மண்ணில் பொதுமக்களுக்கு – குறிப்பாகப் பழங்குடி மக்களுக்கு – எதிராகப் ‘பச்சை வேட்டை’’ போன்ற உள்நாட்டுப் போர் நடவடிக்கைகளை நிகழ்த்த இலங்கையில் வைத்து ஒத்திகை பார்க்க விரும்புகிறது என்பதாகும். இப்படிப் பார்க்கும் போது, இந்திய IARAANUVATHஇராணுவப் பயிற்சிக் கழகத்தில் பயில்படையினரின் பயிற்சி நிறைவு விழாவுக்கு முதன்மை விருந்தினராக சவேந்திர சில்வா அழைக்கப்பட்டது பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பயிற்சி நிறைவு செய்த ஒவ்வொருவர் கையிலும் வாள் கொடுத்தாராம் சவேந்திரர்! கொலைகாரன் கொடுத்த கொலைவாள் இந்தப் பயில் படையினருக்கு என்ன கற்றுத்தரும்? ஒன்றே ஒன்றுதான்: ‘அப்பாவிப் பொதுமக்களை வதைக்கவும் அழிக்கவும் தயங்காதீர்! என்னைத் தேடி வந்த விருதுகளும் பரிசுகளும் மரியாதைகளும் உங்களையும் தேடிவரும்!’’

இந்தியாவைத்தான் நம்பியிருக்கிறோம் என்று நாளும் புலம்பிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் பேர் அறிஞர்கள் இனி மோதிக்கும் அமித்சாவுக்கும் முதுகு சொரிந்தால் போதாது, சவேந்திர சில்வா போன்ற தளபதிகளுக்கும் ‘போற்றி போற்றி’’ பாட வேண்டியதுதான்!

தமிழர்கள் இந்த இனக்கொலைக் குற்றவாளிகள் ஒவ்வொருவரையும் கூண்டிலேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குற்றவாளியின் பெயரையும், முகத்தையும், அவர் செய்த கொடுஞ்செயல்களையும் நினைவில் வைத்துக் கொள்வதோடு உலகெங்கும் பரப்பவும் வேண்டும். எந்த நாடும் இனவழிப்பு உள்ளிட்ட பன்னாட்டுக் குற்றம் புரிந்தோரை வரவேற்று மதிப்பளிப்பது கிடக்கட்டும், நுழையவே அனுமதிக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் [TGTE] இந்த இனக் கொலைக் குற்றவாளிகளில் முதன்மையான பன்னிருவர் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பட்டியலில் ஆறாவது இடத்தில் சவேந்திர சில்வா இடம்பெறுகிறார். மகிந்த இராசபட்சே, சந்திரிகா, கோத்தபாயா, சரத் பொன்சேகா, ஜகத் டயஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சவேந்திர சில்வா! சவேந்திராவுக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது போல் இந்தியாவும் தடை விதிக்க வேண்டும்! உலக நாடுகள் ஒவ்வொன்றும் தடை விதிக்க வேண்டும்! இலங்கையும் தடை விதிக்குமளவுக்கு தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்.

சவேந்திராவுக்கும் போர்க் குற்றம், மாந்தக்குல விரோதக் குற்றம், இனக் கொலை ஆகிய பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்த ஒவ்வொருவருக்கும் ஐநாவும் உலக நாடுகளும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டம் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தின் முகன்மைக் கூறுகளில் ஒன்று. எந்த வல்லரசுக்கும் பாதந்தாங்கும் முயற்சி இந்தப் போராட்டத்துக்கு உதவாது.

தமிழீழ மக்களின் ஒன்றுபட்ட போராட்ட வலிமையையும், தமிழக மக்களின் உறுதியான தோழமையையும், உலகத் தமிழர்களின் ஆக்கத் துணையையும், முற்போக்கு வரலாற்று ஏரணத்தையும், இனவ்ழிப்புக்கு ஆளான இனத்திற்கே உரிய அற வலிமையையும் நம்பித் தொடர்ந்து சலியாது போராடுவோம்! வெல்வோம்!

—தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights