நாட்டுக்குள் வலுக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற சிங்களவர்களிடமுள்ள அச்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் நியாயமானதுதான்.
ஆனால் அந்த அச்சத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளைத்தான் அவர்கள் மேற்கொள்வதாக இல்லை. அத்துடன், முயற்சிக்காவிட்டாலும் இருக்கும் நெருக்கடியை வலுவாக்கமலிருக்கக்கூட முயலவுமில்லை.
2023 நவம்பர் 27 மாவீரர் தினத் தடைகளும், தடையுத்தரவுகளும், கைதுகளும் அது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் நடவடிக்கைகளும் அதற்கான அண்மைய எடுத்துக்காட்டு.
ஆனால், யாரைத் திருப்திப் படுத்துவதற்காக மாவீரர் தினத்துக்கான தடையுத்தரவுகள் பெற்றப்படுகின்றன என்ற சந்தேகத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.
நெடுமாறனின் அறிவிப்பு, பிரபாகரனின் மகள் துவாகா இவ்வருடத்தில் மாவீரர் தினத்தில் உரையாற்றுகிறார் என்ற அறிவிப்பு போன்றன காரணமாக அமைந்திருக்கலாம். துவாரகாவின் வருகை தொடர்பில் தமிழர்களிடம் சந்தேகம் இருக்கிறது. பல்வேறுபட்ட வகையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சந்தேகங்களெல்லாம் தமிழர்களுக்கே தவிர சிங்களவர்களுக்கல்ல என்பதே உண்மை.
இவை இரண்டும் மட்டுமே சிங்களவர்களின் அச்சத்துக்கு மேலும் தூபமிட்டிருக்கலாம். அதே போன்று வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நடைபெற்று வருகின்ற தமிழர்களின் அரசியல் ரீதியான முயற்சிகளும் காரணங்களாக இருக்கின்றன.
இலங்கையின் அடுத்த சுதந்திர தினத்துக்கான ஆயத்த வேலைகள் இப்போதே ஆரம்பித்து விட்டன. கடந்த வருடத்தில் பௌத்த பிக்குகள் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எரித்தார்கள். அவர்களது அந்த எரிப்பானது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரித்ததாகப் பேசப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் நிகழ்த்திய அக்கிராசன உரையில் பொலிஸ் அதிகாரமற்ற, ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில், அதிகாரங்களைப் பரவலாக்கி புரையோடிப்போயுள்ள இந்த இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அரகலய போராட்டத்தினையடுத்து, ஜனாதிபதியானவுடன் 2023, சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அறிவித்தார். அதன் பின்னர் அதிகாரப் பரவலாக்கம் குறித்து கருத்து வெளியிட்டார் ஆனால், இப்போது 2024ஆம் ஆண்டு சுதந்திர தினமும் வந்து விட்டது.இன்னமும் அது நிறைவேறவில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்ததோ, என்னவோ தங்களுக்கான சுதந்திரம் இல்லையே என்ற மனோநிலையிலிருக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. இதுவே இலங்கையின் தற்போதைய நிலை. இந்திய மக்கள் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போரடி ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. ஆனால், இலங்கையின் சுதந்திரத்துக்காக லண்டன் சென்று பெற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பது மறக்கப்பட்டு தொடர்ச்சியான அடக்குமுறைகளே நடந்த வண்ணமிருக்கின்றன.
இந்திய சுதந்திரத்தின் பின்னர் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை பிரிந்து போயின. ஆனால், பாகிஸ்தானை விடவும் அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், வளமாகவும் வாழ்வதுடன், அவர்களுக்கு மதம் உள்ளிட்ட அனைத்து சுதந்திரங்களும் உண்டு. அவ்வாறு முழுச் சுதந்திரத்துடன் தமிழர்கள் வாழ்வதற்கான சூழலை ஏன் இங்கு ஏற்படுத்த முடியாமலிருக்கிறது என்ற கேள்வி ஒரு பகுதி தமிழர்களிடம் இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் 1948 முதல் 30 ஆண்டுகள் அகிம்சை ரீதியாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாகப் போராடி அப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் மேலும் அடக்குமுறைகளை எதிர்கொண்டுவருகிறார்கள். 1949இல் பதவிக்கு வந்த இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கில், தமிழ், தமிழ் பேசும் மக்களைச் சிறுபான்மையினராக மாற்றுவதற்குமாக கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
அதன் பின் வந்த அரசுகளால், சேருவில, அல்லை – கந்தளாய் வரை குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் மூலம், கிழக்கில் 1921இல் 0.5 வீதமாக இருந்த சிங்கள மக்கள் இப்போது 24 வீதமாக மாற்றமடைந்துள்ளனர்.
வடக்கைப் பொறுத்தவரையில் அனுராதபுரம், வவுனியா, வெலிஓயா என குடியேற்றங்கள் முளைத்தன. ஆனால் கிழக்கைப் போல் விகிதாசாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.
1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம். அதன்மூலம் சிறி கொண்டுவரப்பட்டது. 1958, 1978, 1983களில், பாரிய இனக்கலவரங்கள் உருவாக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது தமிழர்கள் கடல்வழியாகத் தப்பிச்செல்லவேண்டிய நிலையும் உருவாகியிருந்தது. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப்போராட்டம் உருக்கொண்டது. வட கிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். உக்கிரமடைந்த போர் நிலைமையில் 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்பட்டு 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு மாகாணசபை அதிகாரம் உருவாக்கப்பட்டது.
ஆனால், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இன்று வரை தயாராக இல்லை. இது அரசாங்கமே அரசியலமைப்பை மீறும் செயலாகும். ஒருவேளை, இலங்கை- இந்திய ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் நாங்கள் தனி ஈழம் பெற்றிருப்போம், தனி நாடு மலர்ந்திருக்கும் அதனை இந்தியா தடுத்துவிட்டது என்ற ஆதங்கம் தமிழர்களுக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட இயக்கங்களின் மத்தியில் இப்போதும் இருக்கிறது.
இது வரலாறாக இருக்க, இவ்வருடத்தின் மாவீரர் தினக் காலம் தமிழர்களின் மீதான அடக்குமுறையையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் முழுமையான செயற்பாட்டுடனான தன்மையினையும் நாட்டுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தியிருக்கிறது. சர்வதேச நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குமாறு கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் இக் கைதுகள் நடைபெற்றிருக்கின்றமை முக்கியமானதாகும்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடைபெற்றிருக்கின்ற கைதுகள் மிகவும் கேலிக்குரியவைகளாகவே அமைந்திருக்கின்றன.
யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் பெற்றோரைக் கௌரவித்தல், அவர்களுக்கு உமஸ்ரீதவிப் பொருள்கள் வழங்குதல், பிறந்தநாளுக்காக கேக் வெட்டுதல், கேக் விற்றல், மாவீரர் தின நிகழ்விற்கான சிவப்பு மஞ்சள் கொடிகள், அலங்கரிப்புப் பொருள்களை வாகனத்தில் எடுத்துச் சென்றமை, ஒலிபெருக்கி வாடகைக்குக் கொடுத்தமை, வாகனம் ஓட்டியமை, பொலிஸாருடன் சத்தமாக வாக்குவாதம் செய்தமை என்றே செல்கின்றன.
2021ஆம் ஆண்டில் மாவீரர் தினம் தொடர்பான விடயங்களை முகப் புத்தகத்தில் பகிர்ந்தமை. பகிர்ந்தவர்கள் மற்றையவரின் விருப்பமின்றி அவரையும் இணைத்தமை, அவர்களின் பகிர்வுக்கு விருப்பம் தெரிவித்தமை போன்ற காரணங்களுக்காகக் கூட கைதுகள் நடைபெற்றிருந்தன.
சிங்களப் பெரும்பான்மை மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடல்லை.
அவ்வாறு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்பது பல தடவைகளில் நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன. கடந்த வருடத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதித்திருந்தார். ஆனால், இவ்வருடம் முழுமையாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் மௌனத்தைக் கடைப்பிடித்திருக்கிறார். அதற்கு அடுத்த வருடத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான அறிவிப்பு காரணமாக இருக்கலாம்.
இவ்வருடம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு பொலிஸாரால் கோரப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவுகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டமைக்கு நீதிபதிகளுக்குள்ள அச்சமும் காரணம் என்று பாராளுமன்றத்தில் பேசப்பட்டது. ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் போல் இவ்வருடத்திலும் அனுமதிப்பார் என்ற நம்பிக்கையிலிருந்த தமிழ் மக்களின் நம்பிக்கையில் மண் அல்ல பாறையே விழுந்திருக்கிறது.
இந்த இடத்தில்தான் சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும் மனோநிலை ரணிலுக்கும் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
அரசியலமைப்பில் காணப்படும் சரத்துக்களை தங்களுடைய ஏதுக்களுக்காக தேடிக் கண்டுபிடிக்கும் பாதுகாப்புத் தரப்பினரும் சிங்களப் பெரும்பான்மையினரும் தமிழர்களின் உரிமைகளை வழங்குவதற்கு மாத்திரம் தேடாதிருப்பதன் மர்மம்தான் என்ன என்பது தமிழ் மக்களின் கேள்வி.
அடக்குமுறைகளின் வெளிப்பாடாகப் போராட்டங்கள் தோற்றம் பெறுகின்றன. நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற அடக்குமுறைகளின் வெளிப்பாடு என்னவாக இருக்கும். அப்போது நாட்டுக்குள் வலுக்கும் புலிகளின் மீளுருவாக்கம் என்ற சிங்களவர்களிடமுள்ள அச்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம் எனலாம்.
—லக்ஸ்மன்—