இஸ்‌ரேல் – ஹமாஸ் யுத்தம் 4: காஸா எனும் திறந்தவெளி சிறைச்சாலை!

0

23 லட்சம் பாலஸ்தீனர்களை அடைத்து வைப்பதற்காக இஸ்‌ரேல் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திறந்தவெளி சிறைச்சாலையை உங்களுக்குத் தெரியுமா? அதுதான் காஸா பிரதேசம்.

‘‘நீ வளர்ந்ததும் என்னவாக ஆக விரும்புகிறாய்?’’ என்று அந்த சிறுவனிடம் கேட்கிறார்கள். அவனுக்கு 10 வயது கூட ஆகியிருக்காது. மழலைத்தன்மை மாறாத வெகுளியான முகம். ஆனால் அவன் சொல்லும் பதில், பாலஸ்தீன மக்கள் வசிக்கும் காஸா பகுதியின் சூழலை உணர்த்திவிடுகிறது. ‘‘நான் வளர்ந்ததும்… ஆனால், பாலஸ்தீனத்தில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆவது அரிது. எந்த நிமிடத்திலும் நாங்கள் சுட்டுக் கொல்லப்படலாம். சாதாரணமாகத் தெருவில் நடக்கும்போதுகூட தோட்டா துளைக்கலாம். இதுதான் இங்கு எங்கள் வாழ்க்கை’’ என்கிறான். மனம் பதறுகிறது.

சிறைச்சாலை என்பது நம் கற்பனையில் எப்படி இருக்கும்?! மூன்று பக்கங்களிலும் சுவர், ஒரு பக்கம் கம்பிக்கதவு, அதில் வெளிப்பக்கமாகத் தொங்கும் பூட்டு. இந்த வடிவத்தை மாற்றி, திறந்தவெளி சிறைச்சாலை என்ற முறை இப்போது பிரபலமாகி வருகிறது. கைதிகள் இயல்பான வேலைகளை அங்கு செய்யலாம். கண்காணிப்பு இருக்கும், அதில் கடுமை இருக்காது. தண்டனைக்காலத்தை பயனுள்ள வழியில் செலவிடுவதற்கான ஏற்பாடு!

காஸா நகரம்

ஆனால், 23 லட்சம் பாலஸ்தீனர்களை அடைத்து வைப்பதற்காக இஸ்‌ரேல் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திறந்தவெளி சிறைச்சாலையை உங்களுக்குத் தெரியுமா? அதுதான் காஸா பிரதேசம். 41 கி.மீ நீளமும் 12 கி.மீ அகலமும் கொண்ட நீள் செவ்வக நிலப்பகுதி. மேற்கில் மத்தியத் தரைக்கடல் இருக்க, கிழக்கிலும் வடக்கிலும் இஸ்‌ரேல் நிலப்பரப்பு இருக்க, தெற்கில் எகிப்து இருக்க, மத்தியில் 365 சதுர கி.மீ பரப்பில் இருக்கிறது காஸா. இங்கிருந்து எந்த வழியாகவும் மக்கள் வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் இது திறந்தவெளி சிறைச்சாலை.

அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் பகுதிகளில் தாக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்டு, பணயக்கைதிகளுடன் காஸா பகுதிக்குத் திரும்பி வந்தனர். உடனே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யுவாவ் காலன்ட் இப்படி சபதம் போட்டார்… ‘‘காஸா பகுதி முழுமையாக முற்றுகையிடப்படும். அங்கு மின்சாரம் தரப்படாது. உணவு, தண்ணீர், எரிபொருள் எதுவும் போக முடியாதபடி வழிகள் அடைக்கப்படும்.’’

காஸாவில் ஏற்கெனவே தினமும் 13 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கும். அங்கிருந்த ஒரே மின் உற்பத்தி நிலையமான Deir al-Balah மின் உற்பத்தி நிலையம் அக்டோபர் 11-ம் தேதி மூடப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட மின்சாரமே இல்லை. அங்கு மருத்துவமனைகள் ஜெனரேட்டர் உதவியுடன்தான் இயங்கி வருகின்றன. எரிபொருள் எடுத்துச் செல்ல தடை போடப்பட்டதால், அதையும் இயக்க முடியாத நிலை. இஸ்‌ரேலின் இந்த முற்றுகை, காஸா பகுதியில் மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. காஸாவில் வசிக்கும் மக்களில் 75% பேர் ஏற்கெனவே ஐ.நா உதவிகளை எதிர்பார்த்து இருக்கும் அகதிகள்.

தண்ணீருக்கே மக்கள் திண்டாட வேண்டிய நிலை. ஏற்கெனவே அங்கு கிடைப்பது உப்புத்தண்ணீர்தான். தண்ணீர் இறைக்கும் நிலையங்கள், கழிவுநீரை சுத்திகரிக்கும் அமைப்புகள் என்று எல்லாமே மின்சரம் இல்லாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், தண்ணீர் டேங்குகள் என்று பலவற்றையும் குண்டுவீசித் தாக்கியதால், ஐந்து லட்சம் மக்களுக்குக் குடிநீர் கிடைப்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள்

போர் முழக்கம் செய்துவிட்டு, இன்னொரு உத்தரவையும் இஸ்ரேல் போட்டது. ‘ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வடக்கு காஸா பகுதியை காலி செய்துவிட்டு தெற்கு காஸாவுக்கு 24 மணி நேரத்துக்குள் போய்ச் சேர வேண்டும்’ என்றது இஸ்ரேல். வாடி காஸா நதிக்கரை வரை யாரும் வசிக்கக்கூடாது. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. காஸா பகுதியில் மக்கள் மிகவும் அடர்த்தியாக வசித்த பகுதி காஸா நகரம். அந்த நகரையே இஸ்ரேல் உத்தரவுப்படி காலி செய்ய நேர்ந்தது. ஜபாலியா, ஷாடி என்று இரண்டு ஐ.நா அகதி முகாம்களில் வசிக்கும் மக்களும் அங்கிருந்து காலி செய்து, தெற்கு காஸாவில் உள்ள ஆறு அகதி முகாம்களுக்கு நகர்ந்துள்ளனர். இதனால் அங்கு நெரிசல் அதிகரித்துள்ளது.

தாக்குதல் ஆரம்பித்த முதல் இரண்டு வாரங்களிலேயே காஸாவில் கிட்டத்தட்ட 5,000 கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ‘வடக்கு காஸாவில் 15% கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றவை ஆகிவிட்டன’ என்று ஐ.நா கூறியுள்ளது. ஏற்கெனவே காஸாவில் பலர் வீடற்றவர்களாக அகதிகள் முகாம்களில் இருக்கிறார்கள். ‘நெரிசலான அந்தப் பகுதியில் வசிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரின் வீடுகளில் ஜன்னல்கள், கதவுகள், பாதுகாப்பான கூரை என்று எதுவும் இல்லை’ என ஐ.நா அகதிகள் பராமரிப்பு அமைப்பு கூறுகிறது. ஏற்கெனவே அங்கு 72 ஆயிரம் வீடுகள் போரால் நொறுங்கியிருந்தன. இம்முறை தாக்குதலில் இன்னும் பல ஆயிரம் வீடுகள் நொறுங்கிவிட்டன. ஒவ்வொருமுறையும் இஸ்ரேலின் குண்டு தாக்குதலில் வீடுகள் நொறுங்குவதும், திரும்பக் கட்டப்படுவதும், அடுத்த தாக்குதலில் அவை நொறுங்குவதும் தொடர்கதை ஆகிவிட்டது. The Global Shelter Cluster என்ற அமைப்பு, ‘காஸாவில் வசிக்கும் எல்லோருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டுமென்றால், இன்னமும் 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளைக் கட்ட வேண்டும்’ என்று முன்பு கூறியிருந்தது. இஸ்ரேலின் தாக்குதல் இந்தத் தேவையைப் பல மடங்கு அதிகரிக்கலாம்.

காஸா மக்களின் துயரம் 1967-ம் ஆண்டு ஆரம்பித்தது. எகிப்தின் வசமிருந்த காஸா பகுதியை அந்த ஆண்டில் இஸ்ரேல் திரும்பவும் கைப்பற்றியது. அதன்பின் 2005-ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் காஸா பகுதியை வைத்திருந்து, அங்கு 21 யூதக் குடியிருப்புகளை அமைத்தது. காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால், தங்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், யூதக் குடியிருப்புகளை அகற்றக் கோரியும் காஸா மக்கள் போராடினர். பல நேரங்களில் அது வன்முறைப் போராட்டமாக மாறியது.

காஸா நகரம்

கடந்த 93-ம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தப்படி, பாலஸ்தீன சுயாட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன்பின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகள் பாலஸ்தீன சுயாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளை நிர்வாகம் செய்யும் அதிகாரம் பாலஸ்தீன அரசிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், ராணுவம், வான் கட்டுப்பாடு, நீர்நிலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பெரும்பாலான அதிகாரங்கள் இஸ்ரேல் வசமே இருந்தன. ஒரு பக்கம் பாலஸ்தீன அரசு நிர்வாகம் செய்தாலும், காஸா மற்றும் மேற்குக்கரையை இஸ்ரேல் ராணுவம் கடுமையாக அடிக்கடி தாக்கி வந்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில் 2006-ம் ஆண்டு பாலஸ்தீன சுயாட்சி அமைப்புக்குத் தேர்தல் நடைபெற்றது. யாசர் அராபத் உருவாக்கிய ஃபதா கட்சியை அந்த ஆண்டு பாலஸ்தீன மக்கள் நிராகரித்தனர். 1987-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பு அங்கு பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்திருந்தது. அந்தத் தேர்தலில் ஹமாஸ் ஜெயித்தது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கும் ஃபதா கட்சியினருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் இறந்தார்கள். ஒரு கட்டத்தில் மேற்குக் கரைப் பகுதி ஃபதா கட்சியின் அதிகாரத்துக்குள் செல்ல, காஸா முழுமையாக ஹமாஸ் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இந்த மோதல்கள் தொடங்குவதற்கு முன்பாகவே, காஸா பகுதி யூதர்கள் வசிக்கத் தகுதியற்ற ஆபத்தான இடம் என்பதை இஸ்ரேல் அரசு உணர்ந்தது. 2005-ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமராக ஏரியல் ஷெரோன் இருந்தபோது, அங்கிருந்த 21 யூதர்கள் குடியிருப்புகளும் அகற்றப்பட்டன. சுமார் 9,000 யூதர்கள் காஸாவிலிருந்து வெளியேறினர். தங்கள் ராணுவமும் முழுமையாக காஸாவிலிருந்து வெளியேறிவிட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. ஆனால், அதற்குள் காஸாவை அது திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருந்தது.

காஸா மக்கள் மேற்கில் இருக்கும் மத்தியத் தரைக்கடல் வழியாக எங்கும் வெளியேற முடியாது. வடக்கிலும் கிழக்கிலும் சுமார் 60 கி.மீ நீளத்துக்கு இஸ்‌ரேல் – காஸா எல்லைப் பகுதியில் ஏழு மீட்டர் உயர சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர்களுக்கு 300 மீட்டர் நெருக்கமாக யாரும் வரமுடியாது. ‘மனிதர்கள் நடமாடக்கூடாத பகுதி’ என அது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்சார்கள், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் மெஷின் கன்கள், ராணுவப் பாதுகாப்பு என்று கடுமையான காவல் உண்டு. ஒரு சின்ன அசைவு தெரிந்தாலே, துப்பாக்கிகள் முழங்கும். தரைக்கு அடியில் சுரங்கம் அமைத்து வந்துவிடக்கூடாது என்று அங்கும் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. தெற்கில் எகிப்து எல்லைப் பகுதியில் 14 கி.மீ நீளத்துக்கு அமெரிக்கா உதவியுடன் எகிப்து சுவர் எழுப்பி, கம்பிவலைத் தடுப்புகளையும் அமைத்துள்ளது. சிறைச்சாலையின் சுவர்களை விட இவை வலிமையானவை.

இந்த வழிகளிலும்கூட அவ்வளவு சுலபமாக வெளியேற முடியாது. காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை கிடைக்காது. ஆபத்தான கட்டத்தில் அவர்கள் மேற்குக் கரை மற்றும் ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்கான பரிந்துரைக்கப்படுவார்கள். அவர்களை எல்லை தாண்டி அழைத்துச் செல்ல பாலஸ்தீன சுயாட்சி அரசு மற்றும் இஸ்ரேல் அரசு இரண்டுமே பர்மிட் வழங்க வேண்டும். கடந்த 2008 முதல் 2022 வரை இப்படி சிகிச்சைக்காக உதவி கோரிய விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் அனுமதிக்காக காத்திருக்கும் காலத்திலேயே இறந்துவிடுவார்கள்.

காஸா நகரம்

காஸாவில் வசிக்கும் நிறைய பேருக்கு மேற்குக்கரையில் உறவுகள் இருக்கிறார்கள், நிலங்கள் உள்ளன, வியாபாரம் இருக்கிறது. அவர்களும்கூட பர்மிட் இல்லாமல் எல்லை தாண்ட முடியாது. எகிப்து எல்லையைத் தாண்டி போகவும், அந்த எல்லை வழியாக உள்ளே வரவும், பொருள்களை எடுத்து வரவும், எகிப்து மற்றும் இஸ்ரேல் என இரண்டு நாடுகளின் அனுமதி வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.

தற்போதுகூட காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதும், அந்தப் பகுதி மக்களுக்கு பல நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகள் எகிப்தின் ரஃபா எல்லைக்குத்தான் வந்தன. அவற்றை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கவில்லை. அந்த எல்லையை குண்டு வீசியும் தாக்கியது. சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்திற்குப்பிறகு 20 லாரிகளை மட்டும் அனுமதித்தது. உணவு, மருந்துகள், தண்ணீரை மட்டும் அனுமதித்த இஸ்ரேல், எரிபொருள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

ஹமாஸ் என்ற அமைப்பை ஒடுக்குவதற்காக கடந்த 17 ஆண்டுகளாக காஸாவின் 23 லட்சம் மக்களை நிரந்தரமாக முற்றுகையில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது இஸ்ரேல். ஐ.நா சபையின் United Nations Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) வெளியிட்ட அறிக்கை ஒன்று, ‘‘இந்தத் தடை காரணமாக காஸா மக்கள் உணவு, தண்ணீர், கல்வி, மருத்துவம் என்று எல்லா தேவைகளுக்கும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கிறார்கள். அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. காஸா மக்களுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனை கொடுத்திருக்கிறது இஸ்ரேல்’’ என்று வருந்துகிறது.

ஐ.நா சிறப்புத் தூதர் ஃபிராங்காஸா அல்பனீஸ் என்பவர்தான் காஸாவை ‘திறந்தவெளி சிறைச்சாலை’ என்று முதலில் குறிப்பிட்டார். பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வரை பலரும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இஸ்‌ரேல் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ச்சியாக மறுத்துவருகிறது.

முற்றுகை, தடைகள், நெருக்கடி என்று ஆண்டுக்கணக்கில் அடக்குமுறைக்கு ஆளாவதால், இஸ்ரேல் மீதான பாலஸ்தீனர்களின் கோபம் பெருமளவு அதிகரித்துள்ளதே தவிர, இணக்கமான அமைதிக்கு இது உதவவில்லை.

(நாளை பார்க்கலாம்…)

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights