“எப்படி வாழ்ந்த நாங்க, இப்ப இப்பிடி கஷ்டப்படுறோமே, இந்த விலைக்கு சாமான் விக்குது…, இவ்வளவு இல்லயா இருந்துது, ஏன் இப்ப இந்தளவு கூடிருச்சு…” இவ்வாறான வார்த்தைகளே இன்று எம்மில் பலர் மத்தியில் சரளமாக பேசப்படுகின்றது. ஏன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்து தாம் உழைத்து வந்த பணத்தில் இங்கு செலவிடுவோரும் தெரிவிப்பது, என்ன சாமான் எல்லாம் நெருப்பு விலை விக்குது என்பதையே.
2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறானதொரு நிலை நாட்டில் தோற்றம் பெற்றது எனக் குறிப்பிட்டால் அது தவறாகாது. ஆம், அதற்கு முன்னர் இலங்கையில் பெருமளவிலான மக்கள் விரலுக்கேத்த வீக்கம் போல் சாமான்ய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நாட்டில் பயங்கரவாதச் செயல் நடந்தேறியது. அதுவும் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள கால கட்டத்தில் அவ்வாறானதொரு செயல் நடத்தப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என ஒரு நாடகம் ஓடியது, அதற்காக சுமார் 300 பேர் வரையில் உயிர் பலியும் எடுக்கப்பட்டது. இதற்கான காரணம் இன்னமும் புரியாத புதிராக உள்ள நிலையில், பலரின் ஊகங்களும், வெளிவரும் தகவல்களும் ஒரு சாராரை நோக்கி கவனத்தை திருப்புகின்றன.
அதனைத் தொடர்ந்து ஆட்சிபீடமேறியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எவ்விதமான தூர நோக்குடைய சிந்தனைகளும் இருக்கவில்லை. பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, தமக்குரிய செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையில், பெருமளவிலான வரி விலக்குகள், வழமைக்கு முரணான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாட்டின் சர்வதேச கடன் தொகை ஓரிரு ஆண்டுகளுக்குள் பெறப்பட்டதாக இல்லாத போதிலும், நாம் கடந்து கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்னதாக பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. சாதாரணமாக நாம் வங்கியில் கடன் பெற்றால் கூட, அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாதா மாதம் மீளச் செலுத்துவதற்கு இயலுமா, பெறும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இதற்கு ஒவ்வொரு மாதமும் ஒதுக்குவதன் அடிப்படையில் கோரும் தொகை வழங்கப்படுகின்றது. திட்டமிடல் என்பது இதில் அத்தியாவசியமாகின்றது.
இந்நிலையில், பத்தாண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட சர்வதேச கடன்களை மீளச் செலுத்துவதற்கு அக்காலத்தில்கூட ஆட்சியில் இருந்த அரசினால் எவ்விதமான திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. சரி இப்போதும் கூட பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்கு திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை. இன்றைய நாள் எமது வீட்டில் எப்படி அடுப்பை எரித்து, வயிற்றை நிரப்பிக் கொள்வது எனும் ஓட்டமே முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி, பலர் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றது. அதுவே நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தமைக்கும், வங்குரோத்து நிலையை எய்தியமைக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோதாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் டபிள்யு.டி.லக்ஷ்மன் மற்றும் துணை ஆளுநரான எஸ்.ஆர்.ஆடிகல, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் காரணமாக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவர்களைப் பற்றி கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டதுடன், ஜனாதிபதியுடன் சர்வதேச ஊடகமொன்று மேற்கொண்ட நேர்காணலின் போதும் இந்த விடயம் பற்றி கேள்விக் கேட்கப்பட்டிருந்தன.
மேலே பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட வேண்டும் போன்றதாக கருத்துகளும் உயர்மட்டங்களிலிருந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், உண்மையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், அவர்களுக்கே அது சாதகமானதாக அமைந்துவிடலாம்.
பெரும்பாண்மை இனத்தவர்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் இன்னமும் ராஜபக்சர்கள் மீதான விசுவாசம் குறைந்தபாடில்லை, நாட்டில் தோன்றிய நெருக்கடிகளுக்கு காரணம் தவறான கொள்கைகள் அல்ல, உலகளாவிய ரீதியில் எழுந்த கொவிட்-19 தொற்றுப் பரவல் தான் என்பது ஆழமாக பதியச் செய்யப்பட்டுள்ளது.
மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவர்கள் பலரும் இவ்வாறான கருத்தையே முன்வைத்து வருகின்றனர். அத்துடன், ராஜபக்ச குடும்பம் நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது எனும் உணர்வும் பெரும்பாண்மை இன மக்களிடையே இல்லாமல் இல்லை. இந்நிலையில், இவர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்படுவது என்பது மக்கள் மத்தியில் ஒருவித அனுதாப அலையை தோற்றுவித்து, அவர்கள் சார்ந்த பிரதிநிதி ஒருவரை மீண்டும் உயர்மட்டத்துக்கு மக்கள் தெரிவு செய்வதற்கு காரணமாக அமைந்துவிடும். இந்த பெயர் வரிசையில் இடம்பெறாத நாமல் ராஜபக்சவுக்கும் தேர்தலில் இது சாதகமான நிலையை தோற்றுவித்துவிடும்.
தேவாலயங்களுக்கு வழிபாட்டுக்காக சென்ற மக்கள் கொன்று குவிக்கப்படப் போகின்றனர் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும், அது பற்றி எவ்விதமான முன்னாயத்த நடவடிக்கைகளும் எடுக்காமல், பொறுப்புக்கூறாமல், இன்றும் சொகுசான வாழ்க்கையையும், வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் வாழும் நாட்டில், பொருளாதார நெருக்கடிக்கும், வங்குரோத்து நிலைக்கும் பொறுப்பாளியாகுங்கள் என ராஜபக்சர்களை எதிர்பார்ப்பது எந்தளவுக்கு நியாயமானதாக அமைந்திருக்கும்?
தமது வருமானத்துக்கேற்ப வாழ்ந்து வந்தவர்களை, ஒரு வேளை உணவைத் தேடிக் கொள்ள தவிக்கவிட்டு, அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கூட வரிசைகளில் காத்திருக்கச் செய்து, உயிர்பலி எடுத்து, நாட்டை விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளி, அன்றாடம் போராடும் நாட்டு மக்களின் ஓலக்குரல் இவர்களுக்கு கேட்காதா?
ஏமாற்றும் படலம், நாடகங்கள் இன்னும் தொடரும்…
—ச.சேகர்–