பிலிப்பைன்ஸில் உயிரிழந்த இலங்கையின் ‘மாலி’

0

விலங்குகள் நல ஆர்வலர்களால் “உலகின் சோகமான” (World’s ‘saddest’ elephant) யானை என பெயரிடப்பட்ட “விஷ்வ மாலி” எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாலி தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே கழித்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது.

மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் முகப்புத்தகத்தில் காணொளியில் அறிவித்துள்ளார். அதில் அவர் “மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் ”என தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை(24) மாலி தனது தும்பிக்கையை சுவரில் தொடர்ந்து தேய்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்(28) யானையின் நிலைமை மிகவும் மோசமடைந்ததுடன், அதிகமாக சுவாசிக்க சிரமப்பட்டுள்ளது. பின்னர் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும், அன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும், பிரேத பரிசோதனையில் யானைக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமனியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாலி, மறைந்த பிலிப்பீனிய குடியரசுத் தலைவர் பெர்டினான்டு மார்க்கோசின் மனைவியான இமெல்டா மார்கோஸுக்கு 1981ஆம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மணிலா மிருகக்காட்சிசாலையில் 1977ஆம் ஆண்டில் வந்த மற்றொரு யானையான ஷிவா, 1990ஆம் ஆண்டில் உயிரிழந்ததிலிருந்து மிருகக்காட்சிசாலையில் மாலி யானை மட்டுமே இருந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில், மணிலா உயிரியல் பூங்கா குழந்தைகளுக்கான தடுப்பூசி மையமாக செயல்பட்டது. அங்கு மாலி அவர்களை மகிழ்விக்க தனது நேரத்தை செலவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights