Fidel Castro: உலகமே அதிரும் இந்த பெயரை கேட்டால்.. போர் கண்ட சிங்கம்!

0

கியூபாவை சேர்ந்த புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கியூபா தற்போது தனிப்பெரும் நாடாக உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இருந்து வருகிறது. அப்படி வியப்புக்குரிய நாடாக மாற்றியவர் ஃபிடல் காஸ்ட்ரோ தான். இவர் இல்லை என்றால் இந்த கியூபா நாடு அப்போதே அமெரிக்காவில் இருக்கும் மாநிலத்தில் ஒன்றாக மாறியிருக்கும்.

அமெரிக்காவின் உளவுப்பிரிவும், இஸ்ரேலின் மொசாத்தும் இணைந்து காஸ்ட்ரோ வை 638 முறை கொலை செய்ய முயற்சித்தார்கள், அனைத்திலும் தப்பித்தார்.

மிகப்பெரிய அடிமைத்தனம் கொடுக்கும் அழுத்தம் ஆகச்சிறந்த புரட்சியாளர்களை உருவாக்குகிறது. அப்படி கரும்பு தோட்ட கூலி தொழிலாளியாக இருந்து பின்னாளில் மிகப்பெரிய போராளியாக உருவான் ஃபிடல் காஸ்ட்ரோ. கல்லூரி படிக்கும் காலத்திலேயே போராளியாக உருவெடுத்தவர்.

ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோது ராணுவத்தினரால் ஃபிடல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர் நடத்திய உரை மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவமாக மாறியது.

தன் மீது வன்மத்தை தெளிக்க கூடிய பாடிஸ்டா அரசை வீழ்த்த ஃபிடல் காஸ்ட்ரோ போராளியாக மாறினார். இவருடன் அந்த நேரத்தில் கூட்டு சேர்ந்தவர் தான் உலக புரட்சியாளரான சே குவேரா. 1953 இல் தொடங்கி 1959 வரை கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள் இருவரும் சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி உள்ளனர்.

அதற்குப் பிறகுஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் கியூபாவில் அரசு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கம்யூனிஸ்ட் நாடாக கியூபா அறிவிக்கப்பட்டது. இந்த நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களுக்காக தான் இத்தனை போராட்டங்களும் நடத்தப்பட்டன. கியூபா நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்கள் அனைத்தும் அந்த மக்களுக்கே சொந்தம் என பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

உலகத்தில் சுரண்டல்கள் எங்கு நடந்தாலும் அது என்னுடைய நாடு அதற்கு எதிராக நான் கட்டாயம் போராடுவேன். சுரண்டலை செய்யக் கூடியவர்கள் நமது எதிரிகள் என முழக்கமிட்டவர்ஃபிடல் காஸ்ட்ரோ. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் கியூபா நம்மோடு நட்பு நாடாக இருந்தது.

ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை எதிரி நாடுகள் பல முயற்சிகளை கையாண்டனர். அவருடைய காதலியை வைத்து கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது கையில் துப்பாக்கியை கொடுத்து சிரமப்படாமல் என்னை கொன்று விடு என காஸ்ட்ரோ கூறியுள்ளார். துப்பாக்கியை வீசிவிட்டு கட்டி அணைத்து அவருடைய காதலி அழுதுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கு சிஐஏ 638 முறை முயற்சி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. அத்தனை முயற்சிகளிலும் தப்பித்துள்ளார் காஸ்ட்ரோ. பொருளாதார ரீதியில் கியூபா நாட்டை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் இவருக்கே உரித்தானது.

மிகப்பெரிய போரை கையாண்ட பொழுதும் தனது நாட்டை சரியான முறையில் வழிநடத்தினார். அதற்கு ஏற்றார் போல் தனது மக்களை தயார்படுத்தினார். அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்தார். தற்போது உலக அளவில் கியூபா நாடு கல்வித்தரத்தில் உச்சத்தில் இருந்து வருகிறது.

நாடு முழுவதும் படிக்கக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு கட்டாயம் ஒரு ஆசிரியர் என கம்யூனிசத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் பிடல் காஸ்ட்ரோ. குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த நாட்டில் தனியார் மருத்துவமனைகளே கிடையாது. அனைத்தும் அரசு மருத்துவமனை தான். அனைத்து மருத்துவமனைகளிலும் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் வீடில்லாமல் எந்த மக்களும் இருக்க மாட்டார்கள் அனைவருக்கும் சொந்த வீடு. குறிப்பாக வீட்டு கடன் வட்டி மற்றும் சொத்து வரி என எதுவும் கிடையாது. இத்தனை ஆண்டுகால பயணத்தில் எத்தனையோ இடையூறுகள் வந்தும், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டும் தன்னை உச்சத்திலேயே வைத்து வருகிறது கியூபா. அப்படி தன்னையும், தனது மக்களையும் செதுக்கி கொண்டவர் போராளி பிடல் காஸ்ட்ரோ.

மக்களால் மக்களை ஆண்ட போராளி பிடல் காஸ்ட்ரோவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகை விட்டு மறைந்த பிறகும் இவருடைய எதிரிக்கு இவர் எப்போதுமே சிம்ம சொப்பனம் தான் என்று கூறினால் அது மிகையாகாது.

 

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights