காலம், தேவை, பயன் அறிந்து செயப்படாத அரசியல்

0

தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான   (நவம்பர் 13)  நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை  வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் அரசாங்கத்தின் முன்னுதாரணமான நடவடிக்கை. ஆனாலும் அது எப்படி நடைபெற்றது என்பது சற்று பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டியது.  மலையகம், கிழக்கு, வடக்கு என ஓவ்வொரு மாகாணப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாக மாகாண அரசுகள் அறிவிக்க, வேறு வழியில்லாமல் அரசாங்கம் அந்த விடுமுறையை பொதுவானதாக அறிவித்தது. ஏற்கெனவே இந்நாள் சரியாக  கணக்கிலெடுக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறையை முன்னரே வழங்கியிருக்க முடியும்.

நாட்டில் தமிழர்களின் விடயங்கள் கணக்கிலெடுக்கப்படாமையையே இது காட்டி இருக்கிறது. இப்படித்தான் மக்களுக்கும் நாட்டுக்கும் தேவையான விடயங்களை மறந்து காலத்திற்குத் தேவையற்ற விடயங்களுக்குள் அரசியல்வாதிகள் மூக்கையல்ல தலையை புகுத்தி வீணான பிரச்சினைகளை உறுவாக்கிவிடுகிறார்கள்.

கடந்த வாரம் உலகளவில் பலவாறாக விமர்சிக்கப்பட்டதுதான் இலங்கையின் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிச் சுற்றுக்களுக்குள் செல்லாமல் மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து நாடு திரும்பியது.

இந்த விடயத்துக்குள் அரசியல்வாதிகள் மூக்கை நுழைத்ததன் காரணமாக பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் கிரிக்கெட் அணி தோல்விகளைச் சந்தித்தமையானது வழமையான அல்லது பெருந்தன்மையாக பார்க்கப்படுதல் வேண்டும்.

ஆனால் அது தவிர்க்கப்பட்டு, தோல்வி  பெரிதுபடுத்தப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால சபையை நியமித்து பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் அக்குழுவுக்கு இடைக்காலத் தடைவிதித்து, அத்துடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு என ஒன்றன் பின் ஒன்றாக எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. அதனால் பல பிரச்சினைகளும் உருவாகியிருக்கின்றன.

இது ஏன் என்ற கேள்வி பலரிடம் உருவாகத்  தொடங்கியுமிருக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் முந்திரியாய் முந்திக்கொண்டதற்கு அவர் தடைபோட்டதைத் தவிர. சற்று ஒதுங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை கிரிக்கெட் விடயத்திற்குள் இருந்து தப்பித்துக் கொண்டதாகவே சொல்லமுடியும்.

இவ்வாறான அரசியல் நுழைவுகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கைக் கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்புரிமைக்கு இடைக்காலத் தடையை விதித்துள்ளது. ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைச் சீர்செய்வது யார் என்ற சிக்கல் இப்போது தோன்றிவிட்டது. இதற்கு முன்னர் உதைபந்தாட்ட சம்மேளனம், ரக்பி என இருக்கின்ற வேளையில் இதுவும் நடந்தேறியிருக்கிறது. இவ்வாறு சர்வதேச அளவில் நடைபெற்று வருகின்ற இலங்கையின் விளையாட்டுத் துறைக்கு எதிரான நடவடிக்கைகள் நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையின்மையையே காட்டி நிற்கின்றது.

அந்தவகையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விவகாரத்தை நோக்கினால், அரசியலால் செய்து முடிக்கவேண்டிய விடயங்களை விட்டு அரசியல் பயன்படுத்தத் தேவையற்றவைகளுக்கு அதனைப் பயன்படுத்தி வாங்கிக் கட்டிக்கொள்ளுதல்தான் தற்போது நடைபெற்றிருக்கிறது.

நமது நாட்டில் அரசியலை நடத்துவதற்காக ஏதுமில்லை என்பதனால், கிடைப்பதைக் கொண்டு அரசியல் நடத்த முனையும் சிலரால் இந்த நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வகையிலான குற்றச்சாட்டுக்கள் இப்போது வலுத்து வருகின்றன. அந்த வகையில்தான் காலம், தேவை, பயன் அறிந்து செயப்படா அரசியலால் பயன் ஏதும் உண்டோ என்று எண்ணத் தோன்றுகிறது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்ற நிலை மாறிப்போயிருக்கிறது. எடுத்ததற்கெல்லாம் குற்றஞ்சாட்டுவதும் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலை முன்னேற்றகரமானதாகக் கொள்ளப்படாது. இதிலிருந்து சிறந்த சிந்தனையுள்ள அரசியல்வாதிகளின் தேவை உணரப்படுகிறது.

காலத்தின் முன்னே பயிர் செய்கின்ற, எதிர்காலம் அறிந்து, உணர்ந்து அதற்காக பணியாற்றுகின்ற அறிவுஜீவிகள் அரசியல்வாதிகளாக உருவாக்கப்படவேண்டும். ஆனால், அவ்வாறான அரசியல்வாதிகள் நமது நாட்டில் இருக்கிறார்களா என்ற கேள்வியைத்தான் நாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்களால் அதற்கான வழிகள்  உருவாக்கப்படவேண்டும். அது காலம் காலமாக நடத்தப்படவில்லை. அந்த அறிவு மக்களிடம் இல்லையானால் அதற்கான அறிவை  வழங்குவதற்கான  செயற்றிட்டங்களை சரியானமுறையில் அரசோ, அரசு சாரா தரப்பினரோ மேற்கொள்ளவேண்டும். அதனை யார் மேற்கொள்வது என்ற முடிவில்லாமலே காலம் கடந்து கொண்டிருக்கிறது.
தேர்தல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அரசியலால் ஏதும் பயன் விளையாது என்பது எத்தனை அரசியல்வாதிகளால் உணரப்பட்டிருக்கிறதோ என்று மக்கள் அச்சப்படும் நிலை தோன்றிவிட்டது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், மோசமான நிலைமைகளுக்கும் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான, தூரநோக்கற்ற முடிவுகளே காரணமாகும். அதற்கு நல்லதோர் உதாரணம்தான் பதவிகளை விட்டும், நாட்டைவிட்டும் ஓடவேண்டிய நிலையை எதிர்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ அறிவித்த இயற்கை விவசாய முறையாகும். உண்மையில் அத்திட்டம் நாட்டுக்கும் உலகுக்கும் தேவையானது.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை உணராது திடீரென எடுத்த முடிவு, அவரை மிக மோசமான எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியவராக ஆக்கிவிட்டது. அதனால் விளைந்தது பதவி துறப்புடன்  அவமானமுமாகும்.

அது போலவே இதுவரை தீர்க்கப்படாத இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் இவ்வாறான நாட்டின் எதிர்காலம் குறித்த தூரநோக்கற்ற சிந்தனைகளும் மக்கள் நலனில் அக்கறையின்மையும் எனப் பல விடயங்களே காரணமாகும். சரியான அரசியல்வாதிகள் இன்மையும், திறமையற்ற தீர்க்கமாக செயற்பட முடியாத எதிர்க்கட்சிகளும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இதனை தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத இயலாமையின் வெளிப்பாடு என்றே சொல்லவேண்டும்.
1948இல் நாடு ஆங்கிலேயரியமிருந்து சுதந்திரமடைந்தது முதல் இன்றுவரையில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தால், அண்டைய நாடும், மேற்கு நாடுகளும் இங்கு முட்டு கொடுக்கவேண்டிய நிலை உருவாகியிருக்காது என்பது வெளிப்படையானது.

ஈழத் தமிழர்களது இனப்பிரச்சினை விடயம் முழுப் பூசணியை சோற்றில் புதைப்பது போலவும், பூனை கண்ணை மூடிக்கொண்டு நான் ஒன்றையும் காணவில்லை என்பதற்கும் ஒப்பானதாகவே இருந்து வருகிறது.

அவசர அவசரமாக சிறிலங்கா கிரிக்கெட் விவகாரத்துக்கு முழு பாராளுமன்றமும் அல்லோல கல்லோலமாகி, ஏகோபித்த முடிவுக்கு வந்து வாக்கெடுப்பு தேவையற்றதாகிப்போன போதும் சபாநாயகரிடம் வாக்கெடுப்பு கோரும் கட்சிகள் ஏன் தமிழர்களின் புரையோடிப்போன நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க முடியாது என்ற கேள்வி இந்த இடத்தில்தான் தோன்றுகிறது.

ஓவ்வொரு ஜனாதிபதியையும், ஒவ்வோர் அரசாங்கத்தையும், ஒவ்வொரு கட்சியையும், அவர்களுடைய நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் குற்றஞ்சாட்டியபடியே நாடு இத்தனை தசாப்தங்களையும் கடந்து வந்திருக்கிறது. கடந்து வந்த பாதையின் படிப்பினைகளை நாட்டின் அரசியல் கட்சிகளோ, அரசில்வாதிகளோ இன்னமும் உணரவில்லை. நாட்டில் இல்லாத ஒரு பிரச்சினை எப்படி சாத்வீகம், அஹிம்சை, ஆயுதம், இராஜதந்திரம் என்று தமிழர் தரப்பு பயணித்தது என்ற கேள்வியை யாரும் தம்மிடம் கேட்பதாகத் தெரியவில்லை.

இருந்தாலும் நாட்டிற்குத் தேவையானதென்று தாங்கள் நினைக்கின்ற விடயங்களுக்கு தமிழர்களைப் பயன்படுத்தியதுதான் வரலாறாக இருந்திருக்கிறது. உதாரணமாக பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட தந்திரத்தையும், தமிழர்களைப் பிரித்தாளும் தந்திரத்தினையும் சுட்டிக்காட்டமுடியும்.“தானறியா சிங்களம் தலைக்குச் சேதம்” என்பது போன்று தமிழ் மக்களது விவகாரத்தில் தன் நாட்டு மக்கள் மீதே பெரும் போர் தொடுத்து தாம் வெற்றி பெற்றதாக அறிவித்து இன்னமும் அம் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குத் தயக்கம் காட்டி வரும் சிங்களப் பேரினவாதம் எதனை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது.

அந்தவகையில்தான், காலம் அறிந்து, மக்களின் தேவை, எதிர்பார்ப்பு, அதனால் ஏற்படும் பயன் அறிந்து செயப்படுகின்ற அரசியலை நம் நாட்டு அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு தொக்கி நிற்கிறது.

லக்ஸ்மன்—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights