உலகக்கிண்ண கிரிக்கெட்டின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று(16) மோதுகின்றன.
லீக் சுற்றில் இரு அணிகளுமே 9 ஆட்டங்களில் தலா 7 வெற்றிகளுடன் 2 மற்றும் 3-ஆம் இடத்தைப் பிடித்து, அரையிறுதிக்கு வந்துள்ளன.
லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
தென்னாப்பிரிக்கா அணி, உலகக் கிண்ண போட்டிகளில் கடைசி கட்டத்தில் தடுமாறி வெளியேறிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. பங்கேற்ற 9 தொடர்களில் இதுவரை 4 முறை அரையிறுதி வரை முன்னேறி, அதில் தோல்வி கண்டு வெளியேறிய நிலையில் இம்முறை அவ்வரலாற்றை மாற்றியமைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதலில் களத்தடுப்புச்செய்த இரு ஆட்டங்களிலுமே தென்னாப்பிரிக்கா தோல்வியுற்றமையால் நாணய சுழுற்சியில் வென்று துடுப்பெடுப்பை தெரிவு செய்வது அணிக்கு சாதகமான சூழல் இருக்கும். ஏனெனில், அணியின்துடுப்பெடுத்தாடும் திறன் பலமானதாகவேயுள்ளது.
முதல் 6 துடுப்பாட்ட வீரர்களில் 4 போ் சதம் அடித்திருக்கின்றமை குறி்ப்பிடத்தக்கது.
பந்த வீச்சில் மாா்கோ யான்சென், லுங்கி இங்கிடி ஆகியோா் வேகப்பந்துவீச்சிலும், கேசவ் மஹராஜ், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோா் சுழற்பந்துவீச்சிலும் நம்பிக்கை அளிக்கின்றனா்.
ஆஸ்திரேலியா, 5 முறை கோப்பை வென்ற வெற்றிகரமான அணியாக இருக்கிறது. அதிலும் கடந்த 6 தொடர்களில் 4 முறை வாகை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் தொடக்கத்தை மோசமானதாக அமைத்தாலும், அடுத்தடுத்து 7 வெற்றிகளைப் பெற்றது ஆஸ்திரேலிய அணி.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்,இரட்டைச் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பிய கிளென் மேக்ஸ்வெல்,அடுத்தடுத்து சதங்கள் விளாசிய டேவிட் வாா்னரும் ஓட்டங்களை குவிப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம்
.
ஒருநாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 109 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவே 55 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 50-இல் வென்றிருக்க, 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை; 3 ஆட்டங்கள் ‘டை’ ஆகியிருக்கிறது. அதுவே, உலகக் கிண்ண போட்டிகளில் இவை 7 முறை சந்தித்திருக்க, இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. 1 ஆட்டம் ‘டை’ ஆனது குறிப்பிடத்தக்கது.