கடந்த 25ஆம் திகதி காலை சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பலான, ஷி யான் 6 கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரே சமூக ஊடகத்தில் இட்டிருந்த பதிவில், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம், தாம் வலியுறுத்திய முக்கிய விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.
முதலாவது, கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் பங்கேற்கும் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். இரண்டாவது, கடன் வழங்குநர்கள் அனைவரும் சமமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். மூன்றாவது, கடன் மறுசீரமைப்பு செயற்பாடு நியாயமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் சீனாவுக்கு ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், மத்திய வங்கி ஆளுநரும் பெய்ஜிங் சென்றிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்புகள் பேச்சுக்களில் பெரும்பாலானவற்றில் அவரும் பங்கெடுத்திருந்தார்.
ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணம் பெரும்பாலும் பொருளாதார ரீதியான உதவிகள், ஒத்துழைப்புகள், நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதுடனேயே தொடர்புபட்டிருந்தது.
அதைவிட சீன கடன் வழங்குநர்களுடனான பேச்சுக்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாடுகளுடனும், அவர் தொடர்புபட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் தான், அமெரிக்க தூதுவர் மத்திய வங்கி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியிருக்கின்ற விடயங்கள், சீனா விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் திருப்தியின்மை காணப்படுவதை புலப்படுத்துகிறது.
இழுபறிகளுக்குப் பின்னர், இலங்கைக்கு இரண்டாவது தவணை கடன் கொடுப்பனவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருக்கிறது.
பணியாளர் மட்ட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதால், அடுத்த கட்டத்துக்குள் நகர வேண்டிய நிலையில் இலங்கை அரசா்ங்கம் இருக்கிறது.
இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்திருந்த போதும், சீனாவே முரண்பட்டு வந்தது. ஏனைய நாடுகளுடன் சேர்ந்து கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டுக்கு வர மறுத்தது.
தனியாக இலங்கையுடன் பேச்சு நடத்தி இணக்கத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியது. அதுபோலவே தற்போது இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டியிருப்பதாக சீனா கூறுகிறது.
ஆனாலும் , அந்த இணக்கப்பாடு என்ன என்பது இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.
முன்னதாக சீனாவின் எக்சிம் வங்கி, இலங்கைக்கு வழங்கிய கடன்களை மீள வசூலிப்பதற்கான காலஎல்லையை மிக குறுகிய காலத்துக்கே நீடிப்புச் செய்தது.
அதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டன. இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகள், 10, வருடங்களுக்கு மேல், கடன்களை மீளச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க தயாராக உள்ளன.
ஆனால், சீனாவோ அந்தக் காலஎல்லையை இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிப்பதற்கு தயாராக இல்லை. இதுவரை அதிகபட்சமாக இரண்டு வருடகால அவகாசத்தையே வழங்கியிருக்கிறது.
தற்போது மேலதிக காலஅவகாசத்தை கொடுக்க சீனா இணங்கியிருக்கிறதா என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் இருந்தோ, சீனத் தரப்பில் இருந்தோ பதில் இல்லை.
சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், அது என்ன என்பதை மட்டும் வெளியிடாமல் இருக்கிறது.
ஏற்கெனவே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்ட உடன்பாட்டையும் கூட அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.
இவ்வாறான நிலையில் தான், கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் பங்கேற்கும் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியிருக்கிறார். அவர் இலங்கைக்கு மட்டுமல்ல சீனாவுக்கும் சேர்த்தே அழுத்தம் கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
சீனாவுடன் இரகசியமான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதை அமெரிக்கா எதிர்க்கிறது.
சீனாவின் ஷி யான் 6 என்ற ஆய்வுக் கப்பலுக்கு அரசாங்கம் அனுமதி மறுத்து வந்த நிலையில் திடீரென கடந்த புதன்கிழமை அது கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்கா, இந்தியாவின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் இந்த அனுமதியை வழங்கிய பின்னர் தான், அமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்து வெளியானது.
அதாவது, சீனா தனது பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு, இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கிறதா, கடன் மறுசீரமைப்பை காரணம் காட்டி தனது பாதுகாப்பு நலன்களை அடைவதற்கு முற்படுகிறதா என்ற சந்தேகங்கள் அமெரிக்காவிடம் இருப்பதை தான், ஜூலி சங்கின் இந்த கருத்து உணர்த்தி நிற்கிறது.
இரகசியமான கடன் மறுசீரமைப்பு உடன்பாடு, இலங்கைக்கும் தமக்கும் பாதகமானதாக அமையும் அமெரிக்கா கருதுகிறது.
அதனால் தான், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் கடன் வழங்குநர்கள் அனைவரும் சமமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியிருக்கிறார்.
சீனா தவிர்ந்த பிறநாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கு கூடுதல் காலஅவகாசத்தை அளிக்கும் நிலையில், சீனா மட்டும் அந்தக் கடன்களை குறுகிய காலத்தில் மீளப் பெற்றுக் கொள்வது என்பது தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியாக இருக்கும் என்று மேற்குலகம் கருதுகிறது.
சீனாவுக்கு வழங்கப்படுவதை போன்று சலுகைகளை மேற்குலகம் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் வழங்க முன்வரும் சலுகைகளைப் போலவே, சீனாவும் வழங்க முன்வர வேண்டும் என்று தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த நிலைப்பாடு சாதகமானதாகவே இருந்தாலும், சீனா அதற்கு இணங்க வேண்டுமே. சீனா குறுகிய கால கடன் மறுசீரமைப்புக்கு இணங்கி வந்தால் கூட பரவாயில்லை என்ற மனோநிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது.
அதனால் தான் இப்போது எட்டப்பட்டதாக கூறப்படும் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை பெரிய விடயமாக முன்னிறுத்துகிறது.
ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளோ, தாங்கள் நியாயமற்ற வகையில் நடத்தப்படுவதாக கருதும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் தான் நியாயமான முறையில் கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநரிடம் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியிருக்கிறார்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், கோட்டாபய ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
அவரது செயற்பாடுகளும், அறிக்கைகளும், அரச தரப்புக்கு பல சந்தர்ப்பங்களில் நெருக்கடிகளை கொடுத்திருக்கிறது. அரகலய போராட்ட காலத்தில், அவர் வெளியிட்ட அறிக்கைகளை காரணம் காட்டி, அவர் உள்நாட்டு விவகாரங்களில் இனிமேல் தலையீடு செய்யக் கூடாது என்று கண்டிக்க வேண்டும் என றியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் தலைமையிலான தேசிய பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்திருக்கிறது.
அதேவேளை, கடன் மறுசீரமைப்பு விடயத்தில் அமெரிக்க தூதுவர் சீனாவுடன் காட்டுகின்ற இறுக்கம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் போலத் தெரியவில்லை. சீன ஆய்வுக் கப்பல் விவகாரத்திலும் அமெரிக்க தூதுவர் அழுத்தங்களைக் கொடுத்து வந்தார்.
ஆக, அரசாங்கத்துக்கு தலைவலி கொடுப்பவராக ஜூலி சங் மாறியிருக்கிறார்.
2009இற்குப் பின்னர் கொழும்பில் பதவி வகித்த அமெரிக்க தூதுவர்களில் அதுல் கெசாப் தவிர ஏனைய நான்கு பேரும் பெண்கள்.
அவர்களில், அலெய்னா ரெப்லிட்ஸ் தவிர, ஏனையவர்களான பற்றீசியா புரெனிஸ், மிச்சேல் ஜே சிசன், ஜூலி சங் ஆகிய மூவரும் அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பவர்களாகவே கருதப்பட்டிருக்கின்றனர்.
சீனா கடன் வழங்குநர் என்ற நிலையில் இருந்து இலங்கையை தன் பக்கம் இழுப்பதற்கு முற்படுகிறது.
ஆனாலும், கடன் மறுசீரமைப்பை பிராந்திய பாதுகாப்பு மற்றும் அரசியலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா அவ்வளவு இலகுவாக இடமளிக்காது என்பதையே ஜூலி சங்கின் கருத்து உணர்த்துகிறது.
–நன்றி : வீரகேசரி—