அம்பிட்டிய தேரரின் பேச்சு நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றது | அவர் உடன் கைது செய்யப்பட வேண்டும் – கலாநிதி ஜனகன்
மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டிய தேரரின் தமிழர்களுக்கு எதிரான பேசும் காணொளி ஒன்று அண்மை நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது இதில் அவர் தமிழர்களை வெட்டி சாய்ப்பதாக பகிரங்கமாக கூறுகின்றார்.
இவ்வாறான செயலை பார்க்கின்ற போது நாட்டில் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என்று தெரியவில்லை.
ஒரு மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மத குரு இவ்வாறு இன்னொரு இனத்தவர்களை குறி வைத்து தொடர்ச்சியாக அவமதிப்பது என்பது நமது நாட்டின் நல்லிணக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல்.
நாட்டில் நல்லிணக்கம் என்பது உண்டா எனும் கேள்வியை என்னுள் எழுப்ப தோன்றுகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் ரீதியில் செயல்படும் அம்பிட்டிய தேரர் உடன் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், என்பதுடன் மதகுருக்கள் என்ற பெயரில் பிற மதத்தை இழிவு படுத்தாத வகையில் உடன் சட்டம், ஒழுங்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.
இவரைப் போன்ற ஒருவரின் செயல் நாட்டிலுள்ள மரியாதைக்குரிய தேரர்களின் பெருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இவர் தனது தனிப்பட்ட இலாபத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடிக்கடி வம்புக்கு இழுத்து கொச்சைப்படுத்தும் செயலை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்ல இவர் அண்மைக்காலமாக பொலிஸ் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் கலங்கங்களை ஏற்படுத்துவதையும் சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இவரை போன்றவர்கள் தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அவர்களும் பொலிஸ் துறைக்கு பொறுப்பான கௌரவ அமைச்சர் அவர்களும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். என்று கலாநிதி ஜனகன் அவர்கள் தெரிவித்தார்.