அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

0

 

‘அரகலய’ இன்றைய இளந் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். சுதந்திர இலங்கையின் 75 ஆண்டுகால வரலாற்றில் அரகலயவுக்கு தனியான இடமுண்டு. ஆனால் இது இலங்கையர்கள் எழுச்சி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இலங்கை சுதந்திரமடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளேயே மிகப்பெரிய மக்கள் போராட்டம் 1953இல் வெடித்தது. இது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. கடந்தவாரக் கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

தோட்டத்துறை மூலம் வந்த பெருமளவிலான வெளிவருமானத்திற் கணிசமான பகுதி பிரித்தானிய முதலாளிகளிடையே போகிற விதமாகவே தேயிலை வணிகம் நடத்தப்பட்டு வந்தது. ரப்பர், தென்னை உற்பத்தி வருமானத்திலுங் கணிசமான பகுதி தரகர்கட்கும் கப்பற் கம்பனிகட்கும் போய்ச் சேர்ந்தது. இந்தத் துறைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட அந்நியச் செலாவணி அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதிக்கு விரயமானது. இலங்கையின் நெல் உற்பத்தி நாட்டின் தேவைக்குப் போதாத நிலையில், உணவுக்கான அரிசியின் குறிப்பிடத்தக்க பகுதி இறக்குமதியானது. எனவே, பொருளாதார நெருக்கடி ஒன்று, வரக் காத்திருந்தது.

இருந்தபோதும் 1952 தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை, பொருளாதார நெருக்கடி ஏற்படாமை, இடதுசாரிக் கட்சிகளிடையே ஒற்றுமையின்மை என்பன இதற்குக் காரணமாகின. 1951இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். டி.எஸ். சேனநாயக்க தனக்குப் பிறகு தன் மகன் டட்லி சேனநாயக்கவை பிரதமராக்குவதற்கான நடவடிக்கைகளை அறிந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க எரிச்சலடைந்தார். டி.எஸ். சேனநாயக்கவை விட அரசியல் அறிவிலும் விவாதத் திறமையிலும் சிறந்து விளங்கிய பண்டாரநாயக்க டி.எஸ். சேனநாயக்கவுக்குப் பின்னர் தானே பிரதமராவார் என்று எதிர்பார்த்தார். இது நிகழாது என்ற நிலையிலேயே அவர் பிரிந்து சென்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றின் முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோற்றம் பதவிப் போட்டியினாலும் தனிப்பட்ட இழுபறியினதும் விளைவாகவே நேர்ந்தது. இன்று இவ்விரு கட்சிகளிலிருந்து ஏற்பட்ட பிரிவுகளும் இதே காரணங்களுக்காகவே நிகழ்ந்தன என்பதே இலங்கையின் வரலாறு.

1952 தேர்தலில் வெற்றி பெற்ற சில காலத்தில் குதிரையில் இருந்து விழுந்து டி.எஸ். சேனாநாயக்க மரணமடைந்தார். இந்த எதிர்பாராத நிகழ்வு அடுத்த பிரதமர் யார் என்ற அரசியல் வினாவை எழுப்பியது. தூன் இறந்தால் தனது மகன் டட்லியைப் பிரதமராக்குமாறு டி.எஸ் ஆளுனர் சோர்பரியிடம் சொல்லியிருந்தார்.

கட்சியின் இரண்டாம் நிலையில் இருந்த பண்டாரநாயக்க விலகிய பின்னர் அவ்விடத்துக்கு வந்த டி.எஸ்ஸின் மருமகன் ஜோன் கொத்தலாவல, தானே பிரமராவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஆளுனர் டட்லியை பிரதமராக்கினார். இந்நிகழ்வு நடந்து சில காலத்தில் டி.எஸ்ஸின் அரசியல் சூழ்ச்சிகள் பற்றி கொத்தலாவலவின் ஆதரவாளர் எழுதிய Pசநஅநைச ளுவயமநள என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.

இப்பின்னணியில் டட்லி பிரதமரானாலும் வரவிருந்த பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க இயலவில்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்குலகப் பொருளாதார மாதிரியை வெகுவாக நேசித்தார். அதை நடைமுறைப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்கவும் உலகவங்கியிடம் கடன் வாங்கினார்.

ஊலக வங்கியின் கட்டளைகளுக்கு அமைய சமூகநலத்திட்டங்களைக் குறைத்தார், சிலவற்றை இல்லாமல் செய்தார். பாடசாலை மாணவர்கட்குப் பகலுணவுக்காக இலவசமாக வழங்கப்பட்ட பனிஸ் நிறுத்தப்பட்டது. அரிசி விலைக்கு வழங்கப்பட்ட மானியம் நீக்கப்பட்டது. தபால், புகையிரதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அரிசி விலை 25 சதத்திலிருந்து 75 சதமாக அதிகரித்தது.

விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து 12 ஓகஸ்ற் 1953 அன்று ஒரு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இடதுசாரிக் கட்சிகளும் அவற்றுக்குப் பின்னாலிருந்த தொழிற் சங்க அமைப்புக்களும் ஹர்த்தாலில் பூரண ஈடுபாட்டுடன் பங்குபற்றின. இங்கு மூன்று விடயங்கள் முக்கியமானவை.

முதலாவது, பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிற் பங்குபற்ற மறுத்தது. இரண்டாவது, தோட்டத் தொழிலாளரிடையே மிகுந்த செல்வாக்குடைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற மறுத்தது. மூன்றாவது, இலங்கைத் தமிழரசுக் கட்சி  ஹர்த்தாலுக்கு ஆதரவளித்து பங்குபற்றியது.

இம்மூன்றும் முக்கியமான செயல்கள். பண்டநாயாக்கவின் மறுப்பும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தயக்கமும் அவர்களின் வர்க்க நலன்களின் அடிப்படையில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியவை. தமிழரசுக் கட்சியின் செயல் பாராட்டப்பட வேண்டியது. உயர்வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே தமிழரசுக் கட்சியின் தலைமைகள் இருந்தன.

வடபுலத்தில் தமிழரசுக் கட்சியின் நிகழ்வுகளைத் தமிழ்க் காங்கிரஸ் காடையர்கள் குழப்பியதால் தமிழரசுக் கட்சி நிகழ்வுகளுக்கு இடதுசாரித் தோழர்களே பாதுகாப்பு வழங்கினார்கள். இந்த நல்லுறவு இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம்.

எதிர்பார்த்ததை விட அதிகமான ஆதரவு ஹர்த்தாலுக்குக் கிடைத்தது. நாடே ஸ்தம்பித்தது. தோட்டத் தொழிலாளர்கள் தலைமைகளின் எதிர்ப்பையும் மீறி வேலை நிறுத்தத்தில் பங்குகொண்டர். சுதந்திர இலங்கையில் போர்க்குணம் மிக்க தொழிலாளர்களின் எழுச்சி ஒரு திரட்சியாக வெளிப்பட்ட தருணம் அது. அரசாங்கம் தரையில் கூடாமல் நடுக்கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் கூடியது.

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தபட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பொலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானார்கள்.

இந்த ஹர்த்தால் மூன்று முக்கியமான விடயங்களைச் செய்தது. இது இலங்கையின் இனத்துவ வரலாற்றின் முக்கிய பக்கங்களுக்கான இன்னொரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. முதலாவது, ஒரு நாளுக்கு மேல் வேலைநிறுத்தத்தைத் திட்டமிடாத இடதுசாரித் தலைமைகளால் ஹர்த்தாலின் வெற்றியை எவ்வாறு தக்கவைப்பது என்று தெரியவில்லை.

திட்டமின்மையால் இந்த எழுச்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற அவர்களால் முடியவில்லை. இன, மத, மொழி அடையாளம் கடந்த ஒரு இலங்கையர்களாக ஒருங்கிணைந்து அரசை உலுக்கிய போராட்டம் இடதுசாரித் தலைமைகளின் மெத்தனத்தால் வலுவிழந்தது.

இரண்டாவது, பிரதமர் நாற்காலியை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜோன் கொத்தலாவல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஹர்த்தாலைத் தொடர்ந்து டட்லி சேனாநாயக்க பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய கொத்தலாவல பிரதமரானார். அவர் வெளிப்படையாகவே இனத்துவேசத்தைப் பேசினார். கொத்தலாவலவின் சகிப்பின்மை தமிழர்கள், இந்தியர்கள் மற்றும் கோவிகமல்லாத சாதிகள் பலரை புண்படுத்தியது. தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஜி.ஜி. பொன்னம்பலத்தை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

அவருக்குப் பதிலாகத் கந்தையா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். 1954ம் ஆண்டு பிரித்தானிய அரசி இலங்கைப் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தபோது தமிழில் நன்றி தெரிவிக்க கொத்தலாவல அனுமதிக்கவில்லை என்று தமிழர்கள் கோபமடைந்தனர்.

கொத்தலாவல, இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இவ்வாறு வெளிப்படையாகவே இனவாதத்தைப் பேசிச் செயற்பட்ட முதலாவது பிரதமராக ஜோன் கொத்தலாவல இருந்தார்.

மூன்றாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் மீதான மக்களின் எதிர்ப்புணர்வை எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தனக்கு சாதகமாக்கினார். பண்டாநாயக்கவின் அரசியல் எழுச்சியை ஹர்த்தால் சாத்தியமாக்கியது. ஆவர் இரண்டு விடயங்களை தனது முக்கியமான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினார். முதலாவது சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக இருக்க வேண்டும் என்பதை தனது உணர்வுபூர்வமான தேர்தல் பிரச்சாரமாக முன்வைத்தார்.

பண்டாரநாயக்காவும் 1952 இல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளின் சமத்துவத்தை ஆதரித்தார், ஆனால் அவர் சந்தர்ப்பவாதமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிங்களத்தை மட்டுமே அரச கரும மொழியாகவும், ‘நியாயமான தமிழைப் பயன்படுத்துவதற்கான அனுமதியையும்’ அறிவித்தார். சிலோன் முஸ்லீம் லீக் மற்றும் அகில இலங்கை மூர்ஸ் அசோசியேஷன் ஆகியன (அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் தமிழ் பேசுபவர்கள்) சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக ஆதரித்தனர்.

பண்டாரநாயக்கவின் இரண்டாவது அரசியல் ஆயுதமாக, பௌத்த பிக்குகளை நேரடி அரசியல் இணைப்பு என்பது இருந்தது. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 1952 இல் உத்தியோகபூர்வமற்ற பௌத்த விசாரணைக் குழுவை உருவாக்கியது.

‘பௌத்தத்தின் துரோகம்’ என வெளியிடப்பட்ட அதன் அறிக்கை, பௌத்த நலன்களைப் புறக்கணிப்பதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டியது. பௌத்த மதத்தை வளர்ப்பதற்கும் சிங்கள-பௌத்த பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பௌத்த தலைவர்கள் பௌத்தர்களின் கைகளில் அரசியல் கட்டுப்பாட்டை விரும்பினர். இதை பண்டாநாயக்க கையில் எடுத்து நாட்டை மீளமுடியாத அவலத்திற்குக் கொண்டு சென்றார்.

—தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights