இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு புதன்கிழமை (25) கூடவுள்ளது.
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (6) பாராளுமன்ற வளாகத்தினுள் காரசாரமான வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பெரேராவால் தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சபையில் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து அன்றைய அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
பாரிய குற்றச்சாட்டு மற்றும் ஒட்டுமொத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபை அமர்வு மீண்டும் ஆரம்பமான பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இந்தக் குழுவில் பிரதி சபாநாயகருக்கு மேலதிகமாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தக் குழு கூடவுள்ளது.