அயர்ன் டோம்: எதிரி ராக்கெட்டை அழித்து இஸ்ரேலை காக்கும் பாதுகாப்பு கவசம் – எப்படி செயல்படுகிறது?

0

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசம் தான் அயர்ன் டோம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.

அக்டோபர் 7 அன்று, பாலத்தீனியக் குழுவான ஹமாஸின் திடீர் தாக்குதலால் அதிநவீன அமைப்பின் பாதுகாப்புத் தன்மை வெளிப்படையாக கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

வான், தரை மற்றும் கடல் வழியாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை உள்ளடக்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவின் பேரழிவு தாக்குதல் நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

தாக்குதலின் முதல் ஒரு மணிநேரத்தில், ஆபரேஷன் ‘அல்-அக்ஸா ஃப்ளட்’ (Al-Aqsa Flood) என்று அழைக்கப்படும் தாக்குதலில் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஹமாஸ் ஆயுதக் குழு ஏவியது.

இதற்கு பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் அரசு மாபெரும் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது.

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலின் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் அயர்ன் டோம் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கவசம் தாக்குதலின் தொடக்கத்திலேயே – ஹமாஸின் ஏவுகணைகளால் சிதைக்கப்பட்டதா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி.

அயர்ன் டோம் ஒரே நேரத்தில் பல அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டது. அதன் வெற்றி விகிதம் 90% வரை இருக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

ஆனால் சனிக்கிழமையிலிருந்தே வெளியாகும் படங்கள் மற்றும் வீடியோக்களில் உள்ள காட்சிகளைக் காணும் போது, ஹமாஸின் ஆரம்ப தாக்குதலின் தீவிரம் அந்த அமைப்பை முறியடித்துவிட்டது என்பது தெரியவருகிறது.

இஸ்ரேலை நோக்கி ராக்கெட் ஏவப்படும் போது, ​​அது ராடார் மூலம் கண்டறியப்படுகிறது. பின்னர் அந்த ராக்கெட்டின் போக்கு எப்படி அமைகிறது என கண்காணிக்கப்படுகிறது. அது உள்வரும் பாதையைக் கணித்து ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தகவலை அனுப்புகிறது. இது ராக்கெட்டின் பாதை, வேகம் மற்றும் அது தீர்மானித்துள்ள இலக்கைக் கண்டறிய விரைவான மற்றும் சிக்கலான கணக்கீடுகளை செய்கிறது.

இந்த ரேடார் தொழில்நுட்பம் நகர்ப்புறங்களை அடையக்கூடிய ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளையும், இலக்கை தவறவிடும் ஏவுகணைகளையும் வேறுபடுத்த முயல்கிறது. எவை இடைமறிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த பாதுகாப்பு அமைப்பு பின்னர் தீர்மானிக்கிறது.

உள்வரும் ராக்கெட் மக்கள் வசிக்கும் பகுதி அல்லது முக்கிய இடத்தை நோக்கிச் சென்றால், இந்த பாதுகாப்பு அமைப்பு உள்வரும் ஆபத்துகளை முறியடிக்க எதிர் ஏவுகணை ஒன்றைச் செலுத்துகிறது. இதன் மூலம் உள்வரும் ராக்கெட் தனது இலக்கை அடையும் முன்னரே அழிக்கப்பட்டு அச்சுறுத்தல் முறியடிக்கப்படுகிறது.

எதிர் ஏவுகணைகள் நகரும் அல்லது நிலையான அலகுகளிலிருந்து செங்குத்தாக ஏவப்படுகின்றன. பின்னர் அந்த உள்வரும் ஏவுகணைகளை வானிலேயே வெடிக்கச் செய்கின்றன.

ஒரு பேட்டரி மூன்று அல்லது நான்கு லாஞ்சர்களைக் கொண்டுள்ளது. இதே போல் இஸ்ரேலில் குறைந்தது 10 பேட்டரிகள் உள்ளன. இதுவரை 2,000க்கும் மேற்பட்ட உள்வரும் ஆபத்துகளை இந்த பாதுகாப்பு அமைப்பு இடைமறித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அயர்ன் டோமின் தேவை உருவானது.

ஹிஸ்புல்லா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியது, அது டஜன் கணக்கான இஸ்ரேலியர்களைக் கொன்றது என்பதுடன் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

எது எப்படியென்றாலும், ஏவுகணை எதிர்ப்புக் கவசத்தை உருவாக்குவதற்கான இஸ்ரேலிய முயற்சிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலானவை. மேலும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இது இருக்கிறது.

1986 இல், ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த ஒரு வியூக அடிப்படையில் அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை இஸ்ரேல் ஆய்வு செய்தது.

அதன் பின் 5 ஆண்டுகள் கழித்து, முதல் வளைகுடாப் போரின்போது இஸ்ரேல் மீது ஸ்கட் ஏவுகணைகளை ஏவுமாறு ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் உத்தரவிட்டார். அப்போது, ​​இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் இந்த பாதுகாப்பு கவச அமைப்பை உருவாக்குவதற்கான தங்கள் முயற்சிகளை துரிதப்படுத்தினர்.

2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அயர்ன் டோம் ஏற்கெனவே இஸ்ரேலிய ராணுவத்தால் நடத்தப்பட்ட சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்தது.

ஏப்ரல் 2011 இல், நாட்டின் தெற்கில் உள்ள பீர்ஷெபா நகருக்கு எதிராக ஏவப்பட்ட ஏவுகணையை அது சுட்டு வீழ்த்தியபோது, ​​அது முதல் முறையாக போரில் சோதிக்கப்பட்டது.

ஹமாஸ் நடத்திய முந்தைய குண்டுவெடிப்புகள் அயர்ன் டோம் மூலம் ஓரளவு தணிக்கப்பட்டன. ஆனால் கடந்த சனிக்கிழமையன்று இந்த அமைப்பினால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

தாக்குதலின் தொடக்கத்தில், ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வேகமாக அடுத்தடுத்து ஏவமுடிந்தது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) கூற்றுப்படி, தாக்குதலின் முதல் ஒரு மணிநேரத்தில் ஹமாஸ் 3,200 ராக்கெட்டுகளை ஏவியது. இது பாதுகாப்பு அமைப்பின் எதிர்ப்பு ஏவுகணைகள் கையாளக் கூடியதைவிட மிக அதிகம்.

மேலும், உள்வரும் ஏவுகணை அல்லது ராக்கெட் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கும், உடைமைகளுக்கும் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அயர்ன் டோம் தீர்மானித்தால் அந்த ஏவுகணையை அல்லது ராக்கெட்டை அது எதிர்ப்பதில்லை. மேலும், இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு கவச அமைப்பில் குறைந்த எண்ணிக்கையிலான ஏவுகணைகள் தான் உள்ளன. மேலும், கூடுதலாக தேவைப்படும் ஏவுகணைகளை லோட் செய்ய அதிக நேரம் எடுக்கும்.

ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு கவச அமைப்பைப் பற்றி வெளிப்படையாக ஆய்வு செய்தது வைத்திருந்ததாக சில பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஹமாஸ் தாக்குதலின் போது அயர்ன் டோம் சரியாகச் செயல்படாமல் போவது இது முதல் முறை அல்ல.

மே மாதம், காசா பகுதியில் வன்முறை வெடித்த போது, ​​”தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக இந்த பாதுகாப்பு கவச அமைப்பு செயலிழந்தது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியது.

அதற்கு முன்பாக காசாவில் இருந்து ஏவப்பட்ட பல ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டெரோட்டின் நகரில் மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தின.

அந்த நேரத்தில் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்தது போல், ஒரு தோல்வியின் காரணமாக, மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகில் தாக்கிய குறைந்தபட்சம் 5 எறிகணைகளை அயர்ன் டோம் இடைமறிக்கத் தவறியது என்று அடுத்தடுத்த பாதுகாப்புத் துறையின் விசாரணையில் கண்டறியப்பட்டது.

2021 ஆம் ஆண்டில், காசாவில் இருந்து கடலோர நகரமான அஷ்கெலோனுக்கு எதிராக மிகப்பெரிய ராக்கெட் ஏவப்பட்டபோது, ​​”தொழில்நுட்பக் கோளாறு சில ராக்கெட்டுகளை இடைமறிக்காமல் தடுத்தது. மேலும் இது இரண்டு பெண்களின் மரணம் மற்றும் டஜன் கணக்கான மக்களின் காயங்களுக்கு காரணமாக இருக்கலாம்” என டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் எழுதியது.

எந்த பாதுகாப்பு அமைப்பும் சரியானதாக இல்லை அல்லது இருக்காது என்பதுடன், அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு இதற்கு முன்பே பல முறை எதிரியின் தாக்குதல்களை திறம்பட கையாண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

—நன்றி பி.பி.சி—

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights