சீன உளவு கப்பல் வருகை இலங்கை – இந்தியா உறவில் பாதிப்பா?

0

சீன இராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன.சீன, இந்திய கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்வது இராஜதந்திர ரீதியில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் விவகாரமாகவே இருக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் 2 நாட்கள் நங்கூரமிட இலங்கை அரசு அனுமதி வழங்கியிருந்தது .

சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅண்மையில் உள்ள இந்தியாவின் ஹரி கோட்டா ரொக்கெட் ஏவுதளம், கல் பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6, ஓக்டோபர் 25-ம் திகதி இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டொலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது.

எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இலங்கை – இந்தியாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுமா? என்ற கேள்வி இலங்கையில் உள்ள ஊடகங்களில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.

சீனாவின் ஷியான்-6 கப்பலின் வருகைக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்களை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, குறித்த கப்பல் தொடர்பான பரிந்துரைகளை தாம் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான ஷியான்-6 கப்பலானது ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருவதாக சீனாவினால் அறிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தபோதும், பின்னர் வெளிவிவகார அமைச்சு அனுமதிக்கான விடயத்தினை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டது.

எனினும், குறித்த அறிவிப்புக்குப் பின்னர் இராஜதந்திர ரீதியில் இந்தியா உள்ளிட்ட தரப்புக்களினால் உத்தியோகப் பற்றற்ற அதிருப்திகள் அரசாங்கத்துக்கு வெளியிடப்பட்டன.

விசேடமாக இலங்கைக்கு இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி நேரத்தில் அதனை இரத்து செய்திருந்தார்.

குறித்த சீனக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கினால் இராஜதந்திர ரீதியில் பதற்றமான நிலைமைகள் உருவாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிரோஷன் பெரேரா உட்பட இந்திய ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிலையில், சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதுகுறித்து இன்னமும் தீர்மானம் அறிவிக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் அறிவித்தார்.

இவ்வாறான தருணத்தில் பாதுகாப்பு அமைச்சு, கடற்றொழில் நீரியல் வளத்துறையுடன் இணைந்து சீனாவின் ஷியான்-6 கப்பல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கோரியிருந்த நிலையில், அது தொடர்பிலான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது சீனாவின் ஷியான்-6 கப்பலானது தென்சீனக் கடலிலிருந்து இந்து சமுத்திர பிராந்தியத்தினை அண்மித்ததாக, மலேஷியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயம் நிறைவடையும் வரையில் குறித்த கப்பலின் இலங்கை விஜயத்தை தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன.

அதுகுறித்து இலங்கையில் உள்ள சீன தூதரகமோ அல்லது சீன வெளிவிவகார அமைச்சோ இதுவரையில் எவ்விதமான பதிலளிப்புக்களையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், குறித்த ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருகின்றது என்று நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீர் மாதிரிகளை எடுப்பதற்காக தமது நிறுவனம் கப்பலுடன் தொடர்புகொள்ளும் என்றும் நாரா நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும், Shi Yan 6 கப்பலுக்குள் பிரவேசிப்பதற்கு தமது ஆய்வாளர்கள் அனுமதி கோரிய போதிலும் நேற்று பிற்பகல் வரை அனுமதி கிடைக்கவில்லை என்று ருஹுணு பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்ப பீடம் தெரிவித்துள்ளது.

Shi Yan 6 கப்பலானது கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியும் இலங்கைக்கு வருகை தந்ததுடன், 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்தது.

கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இவ்வாறான கப்பல்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, அவற்றில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்த ஆய்வுக் கப்பல்களாகவே உள்ளன.

Shi Yan 6, Shi Yan 1, Shi Yan 3, Xiang Yang Hong 3, Xiang Yang Hong 18, Xiang Yang Hong 1, Xiang Yang Hong 6, Xiang Yang Hong 19 ஆகிய கப்பல்கள் இலங்கைக்கு இதுவரை வந்துள்ளன.

இந்தநிலையில் Shi Yan 6 கப்பல் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, இராஜதந்திர மட்டத்தில் உரிய தரப்பினருக்கு அதனை அறிவித்துள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நியோர்க்குக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்து பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுப்பிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி  அமைக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 78ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற கடல்வார் நாடுகளுக்கான 3ஆவது இந்து-பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்​தோட்டை வர்த்தக துறைமுகத்தை சீன இராணுவத் தளமாக முத்திரை குத்துவது தொடர்பில் இலங்கை கவலையடைவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை இலங்கை அபிவிருத்தி செய்வதாகவும், இந்த விடயத்தை சர்வதேச அரங்கில் முன்வைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights