ஒரே ஒரு ரி 20 போட்டியில், அதிவேக அரைச்சதம், அதிவேக சதம், அதிக சிக்ஸர்கள், அதிக ஓட்டங்கள், அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி என 5 சாதனைகளை படைத்துள்ளது நேபாளம் அணி.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்கான ரி 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் நேபாளம் அணி, மங்கோலியாவை எதிர்கொண்டது. நாணயச்சுழற்சியில் வென்ற மங்கோலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடியது. பின்னர் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது.
34 பந்துகளில் சதம்
3ஆவது வீரராகக் களமிறங்கிய குஷால் மல்லா, 34 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ரி 20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர்,இந்தியாவின் ரோகித் ஷர்மா ஆகியோர் 35 பந்துகளில் 100 ஓட்டங்களை எட்டியதே சாதனையையாக இருந்தது.
மறுமுனையில் நேபாள அணித் தலைவர் ரோஹித் பவ்டலும் 27 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரி என 61 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
யுவராஜ்சிங் சாதனை முறியடிப்பு
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தீபேந்திர சிங் ஐரி, சிக்ஸர் மழை பொழிந்தார். 9 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் அரைச்சதம் அடித்து ஆச்சரியம் அளித்தார். இதன் மூலம் 12 பந்துகளில் அரைச்சதம் விளாசியிருந்த இந்தியாவின் யுவராஜ் சிங் சாதனையையும் அவர் முறியடித்தார்.
குஷால் மல்லா 50 பந்துகளில் 12 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உதவியுடன் 137 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்களில் நேபாள அணி 3 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் குவித்தது. ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. இதற்கு முன், 2019ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
மேலும் ரி 20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் எண்ணிக்கையில் 26 சிக்சர்களை பறக்கவிட்ட மற்றொரு சாதனையையும், நேபாள அணி நிகழ்த்தியிருக்கிறது.
பல சாதனைகள் தகர்ப்பு
315 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மங்கோலியா அணி வெறும் 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இதன் மூலம், 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மற்றொரு சாதனையையும் நேபாள அணி நிகழ்த்தியிருக்கிறது ஒரே போட்டியில், அதிவேக அரைச்சதம், அதிவேக சதம், அதிக சிக்ஸர்கள், அதிக ஓட்டங்கள், அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி என 5 சாதனைகளை படைத்து நேபாளம் அணி சாதித்துள்ளது.