143 ஆவது நீல வர்ணங்களின் சமர்: சென். தோமஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்கள்

0

கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (21) ஆரம்பமான றோயல் – தோமியன் 143ஆவது நீல வர்ணங்களின் மாபெரும் கிரிக்கெட் சமரில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் சென். தோமஸ் அணி அதன் முதலாவது இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

றோயல் அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சென். தோமஸ் வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

சேனாதி புலேன்கும, ஜனிந்து அபேகுணவர்தன ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 124 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களை மந்தகதியில் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரும் ஒரே மொத்த எண்ணிக்கையில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

அபேகுணவர்தன 28 ஓட்டங்களையும் புலேன்குலம 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து தினேத் குணவர்தன (12), அணித் தலைவர் ரெயான் பெர்னாண்டோ (18), முய்ஸ் நௌஷான் (01) ஆகிய மூவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். ( 80 – 3 விக்.,  81 – 4 விக்.,    84 – 5 விக்.)

அதனைத் தொடர்ந்து செனேஷ் ஹெட்டிஆராச்சி, சாருக்க பீரிஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 94 ஓட்டங்களைப் பகிர்ந்து சென். தோமஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

ஹெட்டிஆராச்சி 143 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார்.

சாருக்க பீரிஸ் 176 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகள் உட்பட 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.

18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருக்கும் மஹித் பெரேரா பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் சாருக்க பீரிஸுடன்  29 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார்.

நீலவர்ணங்களின் சமர் 3 நாள் போட்டியாக நடைபெறுவதால் சென். தொமஸ் அணி நாளை வெள்ளிக்கிழமை (22) 2ஆம் நாள் ஆட்டத்தில் மொத்த எண்ணிக்கையை 300 ஓட்டங்களாக உயர்த்த பிரயாசை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

றோயல் பந்துவீச்சில் ரமிரு பெரேரா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அணித் தலைவர் கிஷான் பாலசூரிய 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.