வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்!!!

0

ஜனாதிபதி பந்தயத்தில் முன்னணியிலுள்ள இரண்டு வேட்பாளர்களின் பின்னணி, அவர்கள் வெற்றியீட்டுவதால் நிகழும் மாற்றங்கள் பற்றிய சுருக்கம் இது.

டலஸ் அழகப்பெருமடலஸ் அழகப்பெரும பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்த போதும், பசில் ராஜபக்சவிற்கும், அவருக்கும் ஒட்டாத உறவே நிலவி வந்தது. டலஸ் அழகப்பெருமவை மாத்தறை மாவட்டத்தில் வீழ்த்த பசில் ராஜபக்சவே பல திட்டங்களை செயற்படுத்தியதாக டலஸ் கட்சிக்குள் பலமுறை குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது பொதுஜன பெரமுனவிற்குள், ராஜபக்‌ஷக்களின் பிடியிலிருந்து டலஸ் தலைமையிலான ஒரு அணி வெளி வந்துள்ளது. டலஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்தால், ராஜபக்ஷக்களின் உடனடி அரசியல் மீள்வருகை சாத்தியப்படாது. ராஜபக்சக்கள், ரணில் என மாறி மாறி வரும் ஆட்சிப்போக்கு மாற்றமடைந்து, புதிய திசையில் அரசியல் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

இதேவேளை, தற்போதைய சிங்கள அரசியல்வாதிகளில் இடதுசாரி பின்னணியுடனும், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அதிகபட்ச மிதவாத போக்கும் கொண்ட ஒருவர் டலஸ் அழகப்பெரும என்பது பலரும் அறியாதது.எனினும், அவர் மீதான குற்றச்சாட்டு, இனவாதிகள் நிறைந்த ராஜபக்‌ஷ முகாமில் அங்கம் வகித்தமையே.
தற்போதைய அரசியல்வாதிகளில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் டலஸ். மறுபறத்தில் அவருடன் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்.

டலஸ் அழகப்பெரும மிதவாதியாக இருப்பது, அவரது கடந்த கால பின்னணியினாலேயாகும்.டலஸ் அழகப்பெரும, 1980களின் தொடக்கத்தில் தீவிர இடதுசாரி கொள்கையுடன் செயற்பட ஆரம்பித்து, பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரதுங்கவின் இலங்கை மக்கள் கட்சியில் அங்கம் வகித்தார்.இந்திய அமைதிப்படையின் வருகையின் பின்னர் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்ட போது, அப்போதைய இடதுசாரி கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன. அந்த இடதுசாரி கட்சிகளின் பிரமுகர்கள் ஜேவிபியினரால் வரிசையாக கொல்லப்பட்டனர்.

அப்போது ஜேவிபியினரின் அச்சுறுத்தல் உள்ள கட்சிகளிற்கு, ஜனாதிபதி பிரேமதாச ஆயுதங்கள் வழங்கியிருந்தார். அந்த ஆயுதங்களை முறையாக இயக்க பயிற்சி பெற, இலங்கை மக்கள் கட்சியினர் அப்போது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விடுதலை இயக்கங்களை அணுகினார்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் உள்ளிட்ட இயக்கங்களின் முகாம்களில் தங்கியிருந்து ஆயுதப் பயிற்சிகள் பெற்றனர்.
டலசும் அப்போது வன்னிக்காடுகளில் தங்கியிருந்து இயக்கங்களுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தியிருந்தார்.

பின்னர் சந்திரிக்காவுடன் செயற்பட்டு, 1994ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சந்திரிகாவின் வெண்தாமரை இயக்கத்தில் மங்கள சமரவீர, டலஸ் அழகப்பெரும போன்றவர்கள் முக்கிய பங்காற்றினர். மங்கள சமரவீரவை போலவே மிதவாத பார்வை கொண்டவர் டலஸ். எனினும், மங்கள ராஜபக்‌ஷ முகாமிலிருந்து வெளியேறினார். டலஸ் வெறியேறவில்லை.
டலஸ் ஜனாதிபதியாகினால், தமிழ் மக்கள் விவகாரத்தில் மைத்திரியை போன்ற பாத்திரம் வகிக்கலாம்.அத்துடன், இலங்கையில் மாற்று அரசியல் போக்கு ஒன்றும் உருவாகும்.

ரணில் விக்கிரமசிங்க
கடந்த பொது தேர்தலில் ஐ.தே.க எந்தவொரு ஆசனத்தையும் வெல்லவில்லை. அவர் நாட்டிலுள்ள எந்தவொரு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவும் இல்லை. தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தவர், ராஜபக்‌ஷக்களுடன் ஏற்படுத்திய உடன்பாட்டின் மூலம் பிரதமராகி, தற்போது ஜனாதிபதி பதவிக்கு களமிறங்கியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ராஜபக்‌ஷ பின்னணியுடையவர்கள் ரணிலை ஆதரிக்கிறார்கள். ரணிலை வெற்றிபெற வைப்பதில் ராஜபக்‌ஷக்கள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின் முன்னர் ராஜபக்‌ஷக்களின் ஊழல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அதிகமாக பேசினார். எனினும், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ராஜபக்‌ஷக்கள் காப்பாற்றப்பட்டனர்.

அதேவேளை, இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்றது. எனினும், பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜபக்‌ஷக்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இலங்கையின் மிகப்பெரிய சாபமான ஊழல் மோசடி கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே ரணில் செயற்பட்டு வந்தார். ரணில், ராஜபக்‌ஷக்கள் என கருத்தொருமை மிக்க தரப்புக்கள் மாறிமாறி ஆட்சிக்கு வருவது, இலங்கை அரசியலின் புதிய பார்வைகளையும், திசைகளையும் தடுத்தபடியிருந்தது.
தமது பாதுகாப்பிற்கும் மீள் வருகைக்கும் ஆகச்சிறந்த கவசம் ரணில் விக்கிரமசிங்க என்பதாலேயே, மக்கள் அங்கீகாரம் இல்லாத அவரை ராஜபக்‌ஷக்கள் ஆட்சிபீடமேற்ற துடிக்கிறார்கள்.

ஒருவேளை, நாளைய தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டினால், ராஜபக்‌ஷக்களின் மீள்வருகை துரிதமாக இடம்பெறும்.
அதுதவிர, ரணில் தனது ஆட்சியில் நீடிக்க கோட்டாபய ராஜபக்‌ஷவை விட அடக்குமுறை சூழலை உருவாக்குவார் என்பது கடந்த சில நாட்களில் உறுதியாகியுள்ளது. தனக்கிருக்கிருக்கும் மேற்கு நாட்டு ஆசீர்வாதத்துடன், மக்கள் போராட்டங்களை மிக கொரூரமாக ஒடுக்குவார் என துணிந்து சொல்லலாம்.
கோட்டாபய ராஜபக்ச அவசரகால சட்டத்தை பிறப்பித்த போது, அடுத்த ஒரு மணித்தியாலத்திற்குள் மேலைநாடுகள் எல்லாம் வரிசையாக கண்டித்தன. எனினும், ரணில் அதனை பிரயோகித்த போது, யாரும் கண்டுகொள்ளவில்லை.
நாட்டின் மாற்றமடைய வேண்டுமென இளைஞர்கள் கோரி வருகிறார்கள். ரணில் வெற்றியீட்டினால், சிஸ்டம் மாறாமலேயே இருக்கும்.
ரணில் விக்கிரமசிங்கவின் சாதகமான பக்கமாக, அவருக்குள்ள சர்வதேச தொடர்புகளை குறிப்பிடுகிறார்கள். அதன்மூலம், நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியுமென்பது அவர்களின் வாதம்.
ஏனைய அனைத்துமே எதிர்மறையாக இருக்கும் போது, இந்த ஒரு விடயமே அவரது சாதகமான பக்கம்.

Leave A Reply

Your email address will not be published.