2004 இல் விடுதலைப்புலிகளினால் விலக்கப்பட்ட கருணாவை அலிஸாஹிர் மௌலானாவின் ஊடாக உருவியெடுத்து, கொழும்புக்குக் கொண்டுவந்தது முதல், 2016 இல் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைவைக்கப்படவிருந்த மாலைதீவின் முன்னாள் தலைவர் முஹமட் நஷீடை கொழும்பின் ஊடாகக் காப்பாற்றி லண்டனில் தஞ்சமடைவதற்கு உதவி செய்ததுவரை, எத்தனையோ குற்றவாளிகளுக்கு கூடாரம் அமைத்து கொடுக்கும் அடைக்கல விக்கிரமசிங்கவாக – தெற்காசியாவின் மிகப்பெரிய தனிநபர் அரசியல் மாபியாவாக – ஐம்பதாண்டுகளாகச் செயற்பட்டுவந்தவரின் பெயர்தான் ரணில் விக்ரமசிங்க.
நல்லாட்சி காலத்தின்போதுகூட ராஜபக்ஷக்களை வெளிப்படையாக எதிர்த்துக்கொண்டு, மறுபுறத்தில் அவர்கள் வீட்டுக் குசினியிலேயே போய் கறிக்கு உப்பு – புளி பார்த்துவிட்டுவருமளவுக்கு உறவு வைத்திருந்தார். சொல்லப்போனால், ரக்பி வீரர் வஸீம் கொலை வழக்கில் மகிந்தவின் மனைவி ஷிராந்தியைக் கைது செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்து, அதனைத் தடுத்த ரணில், ராஜபக்ஷக்களுடன் எவ்வகையாக உறவினைப் பேணியிருந்தார் என்பதெல்லாம் அந்தக்காலப்பகுதியிலேயே வெளிவந்த பரகசியங்கள்.
கொழும்பில் சுமார் ஐந்து லட்சம் விருப்பு வாக்குகளைப் பெற்று, ஒரு காலத்தில் வரலாறு படைத்த ரணிலை, கடைசித் தேர்தலில் மக்கள் கோட்டோடு தூக்கி வெளியே போட்டார்கள். மக்களால் தோற்கடிக்கப்பட்டு – கட்சியே இல்லாத அரசியல் அநாதையாக – தெருவுக்கு வந்தவர், போன மாசம் ராஜபக்ஷகளின் ஊடாக பிரதமர் பதவியை எடுத்துக்கொண்டு, தன்னை “சிறிலங்காவின் சேர்ச்சில்” என்று சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டுப்போனார். முழுநாடும் ஒரு தடவை முறைத்துப் பார்த்தது.
இன்று, நாட்டையே சூறையாடிய ராஜபக்ஷக்களை விமானம் ஏற்றி அனுப்பிவிட்டு, ஒட்டுமொத்த சிங்களவர்களுக்கும் விபூதி அடிப்பதற்கு அடுத்து கட்டத் திட்டங்களை உருட்டிக்கொண்டிருக்கிறார்.
ரணிலின் விஷயத்தில், தொடர்ச்சியாக இழைக்கப்பட்டுவந்த மாபெரும் அரசியல் தவறுகளினதும் திரட்சிதான், இன்று சிங்களவர்களுக்கு பெரும் தரித்திரமாகியிருக்கிறது. ரணிலை அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கு வாக்காளர்கள் எல்லோரும், போன தேர்தலிலாவது சரியான தீர்ப்பினை வழங்கினார்கள். ஆனால், அவருக்கு மாற்றாக சஜித் என்ற சாக்கனைக் கொண்டுவந்துதுதான் மக்களின் ஆணைக்குக் கிடைத்த தோல்வியும் ரணிலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் ஆகும்.
ஆனால், கோட்டா கம போராட்டக்காரர்களாவது சுதாரித்திருக்கலாம். கோட்டாவையும் ரணிலையும் சமமாகக் “கவனித்திருக்கவேண்டும்” தவறியது பெரும் துரதிஷ்டமே! ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்கள், குளித்துவிட்டு வெளியில் வருவதற்கிடையில், ராஜபக்ஷக்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்குரிய சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்து, அவர்களுக்கு பிளாஸ்கில் தேத்தண்ணியும் போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டார் ரணில்.
இன்று பொதுஜன பெரமுனவை இரகசியமாக வழிநடத்துவதற்குரியவராக அந்தக் கட்சியினரே, ரணில் பின்னால் நிற்கிறார்கள். கூடவே, போர்க்குற்றம் அது – இது என்று எந்தச் சிக்கலிலும் கை நனைக்காத நபர் என்று வெளித்தரப்புக்களால் கருதப்படும் ரணிலுடன் டீல் பண்ணுவதற்கு சர்வதேசமும் கூட அதிகம் விரும்பும் என்பதை மறுக்கமுடியாது.
இன்றைய நாளில், சிறிலங்காவின் சிஸ்டத்தை அடியோடு மாற்றுவது என்பதன் பொருள், ரணிலை அடியோடு அரசியலில் இருந்து கிளப்புவதுதான்.